[X] Close

ஓயாத உழைப்பிலும் உயராத உப்பள தொழிலாளர் வாழ்வு


may-day-special-article-uppalam-workers

பொழுது விடியும் முன்பே உப்பளத்தில் உழைக்கத் தொடங்கும் இவர்களின் வாழ்க்கையில் மட்டும் ஏனோ இன்னும் விடிவு பிறக்கவில்லை! இடம்: தூத்துக்குடி| படம்: என்.ராஜேஷ்

  • kamadenu
  • Posted: 01 May, 2018 11:38 am
  • அ+ அ-

உழைப்பாளர் தினமான மே தினம் இன்று (மே 1) உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அடிப்படை வசதிகளின்றி உப்பளத் தொழிலாளர்கள் அவதியுற்று வருகின்றனர். 

நாட்டில் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருக்கிறது தூத்துக்குடி. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் உப்பளங்களில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் 60 சதவீதம் பேர் பெண் தொழிலாளர்கள்.

உப்பு உற்பத்தியில் தூத்துக்குடி முன்னணியில் இருந்தாலும், உப்பு உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் நிலையோ பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. உழைக்கும் தொழிலாளர்களை போற்றும் தொழிலாளர் தினம் இன்று (மே1) கொண்டாடப்படுகிறது. ஆனால், தூத்துக்குடி மாவட்ட உப்பளத் தொழிலாளர்களின் நிலையோ கொண்டாடி போற்றும் வகையில் இல்லை.

வசதிகள் இல்லை

இதுகுறித்து சிஐடியு உப்பு தொழிலாளர் சங்கத் தலைவர் கே.பொன்ராஜ் கூறியதாவது: உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பெண்கள். உப்பள தொழிலாளர்கள் பராமரிப்பு பணியின் போது காலை 6 மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை வேலை செய்கின்றனர். 

இதுவே உப்பு வாறும் பணியின் போது அதிகாலை 2 மணிக்கே வேலைக்கு சென்றுவிடுகின்றனர். காலை 9 மணி வரை வேலை செய்கின்றனர். உப்பளங்களில் சூரிய ஒளியில் வேலை செய்ய முடியாது என்பதால் அதிகாலையிலேயே சென்று வேலை செய்கின்றனர். தூத்துக்குடி மாவ ட்டத்தில் உள்ள 99 சதவீத உப்பளங்களில் தொழிலாளர்களுக்கு குடிநீர், கழிப்பறை, குழந்தைகளுக்கான அறை, சாப்பிடும் இடம் போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் கிடையாது. ஒன்றிரண்டு பெரிய உப்பளங்களில் மட்டுமே இந்த வசதிகள் உள்ளன.

ஆண்கள் சமாளித்து கொள்கிறார்கள். ஆனால், கழிப்பறை இல்லாமல் பெண்கள் படும் அவதி கொடுமையானது. இது தொடர்பாக அரசுகளிடமும், உப்பள உரிமையாளர்களிடமும் பல முறை புகார் அளித்தும் எந்த வசதியும் செய்துதரப்படவில்லை. 

நிவாரணம் கிடைக்குமா?

மழைக் காலங்களில் உப்பளங்களில் எந்த பணிகளும் நடைபெறாது. இதனால் அவர்களது குடும்பம் வறுமையில் வாடும். எனவே, உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ. 5000 வழங்கப்படும் என, கடந்த தேர்தலின் போது அதிமுக, திமுக இரு கட்சிகளும் வாக்குறுதி அளித்தன. ஆனால், தற்போது வரை அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

உப்பளத் தொழிலாளர்களுக்கு தற்போது ஆண்களுக்கு தினமும் ரூ.290-ம், பெண்களுக்கு ரூ. 280-ம் கூலியாக வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் போடுவது வழக்கம். 2015-ம் ஆண்டு போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டாகிய நிலையில் தற்போது தான் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. விரைவாக பேச்சுவார்த்தையை முடித்து ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும். மேலும், உப்பளத் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

அதிக வேலை; குறைந்த கூலி 

அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: அமைப்புசாரா தொழிலாளர்களிலேயே அதிக வேலை செய்துவிட்டு குறைந்த கூலி வாங்கும் தொழிலாளர்கள் உப்பளத் தொழிலாளர்கள் தான். அவர்களுக்கு உழைப்புக்கேற்ற வருமானம் கிடைப்பதில்லை.

உப்பளங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தினமும் 4 முதல் 5 டன் வரையிலான உப்பை சுமக்கின்றனர். இதனால் உடல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களுக்கான மருத்துவ வசதிகள் ஏதும் இல்லை. உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி மருத்துவமனை அமைக்க வேண்டும்.

நலவாரியம் தேவை

உப்பளங்களில் தொழிலாளர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. கழிப்பறை வசதி இல்லாமல் பெண்கள் படும் அவஸ்தையை சொல்ல முடியாது. குடிநீர், குழந்தைகள் காப்பகம், ஓய்வறை என எந்த வசதியும் இல்லை. பணித்தளத்தில் பணி பாதுகாப்பு கிடையாது. 

உப்பளத் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மழைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும். உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். முத்தரப்பு குழு அமைக்க வேண்டும். புகார் பெட்டிகள் அமைக்க வேண்டும். பாலியல் புகார் குழு அமைக்க வேண்டும்.

மத்திய உப்புத் துறையின் திட்டங்கள் அனைத்து உப்பு தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும். உப்பு துறையின் நிலங்களை தொழிலாளர் குழுக்களுக்கு, குறிப்பாக மகளிர் குழுக்களுக்கு குத்தகைக்கு வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்களது வாழ்க்கை தரம் உயரும் என்றார் அவர்.

- ரெ.ஜாய்சன்

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close