[X] Close

உழைப்பவர்களுக்கு ஓர் ராயல் சல்யூட்! உழைப்பாளர் தின வாழ்த்துகள்


may-day-uzahaippavarkalukku-royal-salute

  • வி.ராம்ஜி
  • Posted: 30 Apr, 2018 17:10 pm
  • அ+ அ-

உழைப்புக்கான ஊதியம் வந்தே தீரும். இன்றைக்கு நீங்கள் வாங்குகிற சம்பளம், என்றைக்கோ, எங்கோ வேலை பார்த்ததற்கான அஸ்திவாரம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

‘காக்காசா இருந்தாலும் கவர்ன்மெண்ட் சம்பளம்’ என்று அரசாங்க வேலையைச் சொன்ன காலம் ஒன்று உண்டு. ’கவர்ன்மெண்ட் ஜாப்ல வேலை பாக்கற பையனுக்குத்தான் பொண்ணைக் கொடுப்பேன்’ என்று பெண்ணைப் பெற்றவர்கள், ஒத்தக்காலில் நின்றார்கள் அப்போது.

அதற்கும் முன்னதான காலத்தில், பையனுக்கு நாலு எழுத்து தெரியும். அதேசமயம் பூர்வீகமாக பூமி நெறயவே இருக்குது. அதனால வாய்க்கா வரப்பைப் பாத்துக்கிட்டு, காடுகழனியைப் பாத்துக்கிட்டு பராமரிக்கிறதுலயே பாதி நேரம் போயிருது’ என்று சொல்லி அவர்களுக்கு, விவசாயப் பெருங்குடிகளுக்கு பெண் கொடுத்தார்கள்.

இந்த இரண்டுமே இன்றைக்கு தலைகீழாக மாறிவிட்டன.

‘அரசாங்கமோ பிரைவேட்டோ... எதுவா இருந்தாலும் அங்கேயே நிலைச்சு நின்னு வேலையப் பாருப்பா’ என்று இப்போது சொன்னால், குமரிமுத்து கணக்காக குபுக்கென்று சிரித்துவிடுவார்கள் பசங்க.

போன வருஷம் அந்த ஐடி கம்பெனில வேலை பார்த்து, அப்புறம் இங்கே ஆஃபர் நல்லாருக்குன்னு வேற கம்பெனில சேர்ந்து, அதிலேருந்தும் நல்ல ஆஃபர்... சிடிசி அதாவது காஸ்ட் டூ கம்பெனி என்பதெல்லாம் பார்த்து, அடுத்தது அடுத்தது என்று போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

உழைப்புக்கேற்ற ஊதியம் வந்தே தீரும் என்று காத்திருந்த காலம் கடந்து, உழைப்புக்கேற்ற ஊதியம் எங்கே என்று தேடித்தேடி யெஸ் பாஸ் சொல்கிற காலமாகிவிட்டது, இன்றைக்கு.

‘ரெண்டு பொண்ணு, ஒரு பையன். மூணுத்தையும் கண்ணாலம் கட்டிக் கொடுத்தாச்சு. எல்லாருமே ஒருமணி நேர பிரயாண தூரத்துலதான் இருக்காங்க. ஆனா, ஒரு தலைவலி, கால்வலின்னா கூட யாரும் கண்டுக்கறதுல்ல. ஒருகட்டத்துக்கு அப்புறம் அதெல்லாம் நாங்க நினைச்சு கவலைப்படுறதும் இல்ல. பொஸ்தகக் கடை வைச்சிருக்கோம். அதனால, வீட்டு வாடகை, சாப்பாடு, அவருக்கு மருந்து மாத்திரைன்னு போயிகிட்டிருக்கு. இதுபோதுங்க’’ என்கிறார் அந்தப் பெண்மணி.

டூவீலரில் வந்துகொண்டிருந்தபோது, லிப்ட் கேட்ட பெண்மணியிடம், ‘நல்லா உக்காந்துக்கங்கம்மா. ஜாக்கிரதை’ என்றதும் ‘எனக்கு அப்படியெல்லாம் ஒண்ணும் வயசாகிடலைண்ணே’ என்றார். ‘அட... இந்தப் பெண்கள் வயசு விஷயத்தில் எப்போதுமே கறார் காட்டுகிறார்களே’ என்று நினைத்துக் கொண்ட அடுத்த நிமிடமே... ‘ஆமாண்ணே... பாக்கறவங்கள்லாம் எனக்கு ரொம்பவே வயசாயிடுச்சுன்னுதான் நெனைச்சுக்கறாங்க. புருஷன் இருக்கற வரைக்கும் ராணியாட்டம் இருந்தேன். இத்தனைக்கும் கொளுத்துவேலைதான் பாத்துக்கிட்டிருந்தாரு. ஆனாலும் என்னை ராணி மாதிரி பாத்துக்கிட்டாரு. கட்டட வேலைல விழுந்து மண்டைல அடிபட்டு, 14 வருசத்துக்கு முன்னாடி பொசுக்குன்னு செத்துப்பூட்டாரு. ரெண்டுவருசம் திடீர்திடீர்னு அழுதுக்கிட்டே இருந்தேன். தம்பி கொஞ்சம் துணையா இருந்தான். அவனும் ஆறு வருசத்துக்கு முன்னாடி உடம்பு முடியாமப் போய்ச் சேந்துட்டான். திரும்பவும் ஒரே அழுகை. அப்படி அழுது அழுது உடம்பே போயிருச்சுண்ணே. ஆனா வயிறு இருக்குதுங்களே. புள்ள வேற இருக்கான். அதான் கம்பெனில கூட்ற கழுவுற வேலைக்குப் போயிட்டிருக்கேன். நாலாயிரத்தி ஐநூறு ரூபா சம்பளம்.

பையனுக்கு படிப்பு வரலைன்னு லாரில கிளீனரா போனான். இப்ப சாரு டிரைவராயிட்டாரு. கூடவே தண்ணியடிக்கிறதும் தொத்திக்கிச்சு. தெனம் வண்டி எடுக்குறானோ இல்லியோ... ஆனா தெனமும் குடிச்சிடறாண்ணே. அப்ப புருசனுக்காக அழுதேன். அப்புறம் தம்பி போயிட்டானேன்னு அழுதேன். இப்ப புள்ளை இப்படி சீர்கெட்டு கிடக்கிறானேனு நொந்துகிட்டிருக்கேன். அப்படியொண்ணும் வயசாயிடலேண்ணே. முப்பத்தி ஏழுதான் ஆவுது’’ என்று கண்ணீரும் சிரிப்புமாகச் சொன்ன சாந்தியின் துக்கம் கேட்பவருக்கும் தொற்றிக் கொள்ளும்.

பூக்கார ஆனந்தி அக்காவின் விரல்கள், எந்நேரமும் பரபரவென பூத்தொடுத்துக் கொண்டே இருக்கும். அந்த உழைப்புக்கு இணையே இல்லை என்று வியந்து பார்த்ததெல்லாம் உண்டு. 

தள்ளுவண்டியில் பழங்கள் வைத்து, பிளாட்பாரத்தில் விற்றுக் கொண்டிருக்கும் மகேஸ்வரி அக்கா, எப்போதும் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். ஒருமுறை கொஞ்சம் பேச்சுக் கொடுக்க நேர்ந்த போது, மொத்த துக்கத்தையும் வலியையும் சிரிக்கச் சிரிக்கவே சொன்னார்.

‘என்னாத்துக்கு அழுவணும். புருசன் இன்னொருத்தி கூட தொடுப்பு வைச்சிருந்து, ஓடியே பூட்டாரு. ரெண்டு பொண்ணுங்க இருக்குதேன்னு கூட யோசிக்கலை. குருவி சேக்கறா மாதிரி சேத்துவைச்ச ஆறே முக்கா பவுன் நகையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாரு. அதுமட்டுமா? ரெண்டுலட்ச ரூபா சீட்டு சேந்தாரு. ‘அட... இந்த மனுசனுக்கு புத்தியெல்லாம் வந்துருச்சே. எந்த சாமி குடுத்திருக்கும்’னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். பாத்தா... ரெண்டாவது மாசமே சீட்டுக்காசை எடுத்துட்டு, சிட்டாப் பறந்துட்டாரு மனுசன்.

ஆச்சு எட்டு வருசம். அந்தச் சீட்டை நாந்தான் அடைச்சேன். திரும்பவும் குருவி மாதிரி சேத்து, ஒரு பொண்ணை கண்ணாலம் கட்டிக் குடுத்து, பாட்டியாவும் ஆயிட்டேன். இன்னொரு பொண்ணு... ஏதோ கம்ப்யூட்டர் படிப்பு படிக்குது. ‘உன் புருசன் மனுசனான்னு எல்லாரும் திட்டுனாங்க. காசுதாண்ணே புருசன். உழைப்புதாண்ணே பொழப்பு. பொழப்புதாண்ணே சோறு போடும்.

உண்மையா உழைச்சாத்தான் நிம்மதியாவே சோறு திங்க முடியும்ணே...’’ என்று சொல்லிச் சிரித்தா மகேஸ்வரி அக்கா.

உழைப்பவரே உயர்ந்தவர்!

. உழைப்பவர்களுக்கு, உழைப்பாளர் தினத்தில்.. ஒரு ராயல் சல்யூட்!

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close