[X] Close

மீண்டும் நினைத்துப் பார்க்கலாம்; தூக்கத்திலேயே மாற்றிக் காணலாம்! - கனவுகள் பற்றி புதிய தகவல்கள்


dreams-recall-research

  • பால்நிலவன்
  • Posted: 28 Apr, 2018 17:52 pm
  • அ+ அ-

இரவு தூக்கத்தில் நல்ல கனவுகளும் வருகின்றன.. மோசமான கனவுகளும் வருகின்றன... நல்ல கனவுகளை ஒரு முறை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம். அதன் முழுமையான சித்திரங்களையும்கூட ஒருமுறை நினைத்துப்பார்க்க விரும்புகிறோம்.... ஆனால் பெரும்பாலும் மறந்துவிடுகிறோம் என்பதுதான் உண்மை.

தூக்கத்தில் உங்களுக்கு வரும் கனவுகளை திரும்பவும் நினைத்துப் பார்க்க வாய்ப்பு இருப்பதாகத்தான் தெரிகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் பல்லைக்கழகம் பொதுமக்களிடையே நடத்திய ஆய்வு ஒன்று இதை நிரூபித்துள்ளது.

''எங்கள் முடிவுகளின்படி விட்டமின் பி6 மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் மக்கள் தாங்கள் தூக்கத்தில் கண்ட கனவுகளை மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்க்க முடியும்'' என்கிறார் உளவியல் ஆய்வு மாணவர் மற்றும் நூலாசிரியர் டெங்ஹோம் ஆஸ்பி.

பெர்செப்ச்சுவல் மற்றும் மோட்டார் ஸ்கில் என்ற பத்திரிகை இணையதளத்தில் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் இதுபற்றி விவரமாக வெளியிட்டிருக்கிறார்கள்.

100 பேரிடம் ஆய்வு...

கனவுகளை மீண்டும் நினைத்துப் பார்ப்பதா அது எப்படி சாத்தியம் அதுதான் அப்போதே மறந்துவிட்டதே என்றுதானே உடனே சொல்லத் தோன்றுகிறது. பொறுங்கள்... இதுசம்பந்தமாக மிகப்பெரிய ஆய்வே நடந்திருக்கிறது... அதில் பல கனவுகளை கட்டுப்படுத்தலாம் மடை மாற்றலாம் என்றெல்லாம் கூட சொல்கிறார்கள்... 

அது எப்படி? கொஞ்சம் விவரமாக பார்ப்போம்.....

ஆஸ்திரேலியாவில் 100 பேரிடம் இதற்கான பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். உண்மையில் 100 பேரையும் ஒரே இடத்தில் அழைக்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா முழுவதும் வெவ்வேறு இடங்களில்  ஒரே நேரத்தில் இச்சோதனை நடத்தப்பட்டது. அதன்படி தொடர்ந்து ஐந்துநாட்கள் தூங்குவதற்கு முன்னரே அவர்கள் பி 6 என்ற வைட்டமின் கூடுதல் சத்து மாத்திரைகளை அவர்கள் உட்கொண்ட பிறகு உறங்கச் சென்றனர்.

''வைட்டமின் பி6 உட்கொண்டதால் தூக்கத்தில் காணப்படும் கனவின் வண்ணங்களை அது பாதிக்கவில்லை. அது மட்டுமின்றி கனவு எத்தகைய விசித்திரப் போக்குடன் இருந்தாலும் மிகவும் தெளிவாகவே இருக்கிறது'' என்கிறார் ஆஸ்பி.

வைட்டமின் பி 6 மற்றும் பிற பி வைட்டமின்கள் ஆகியவற்றின் விளைவுகளில் இத்தகைய ஆய்வு முதன்மையானது, பலதரப்பட்ட வகையான மக்களைக்கொண்டுதான் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாம்.

வைட்டமின் பி6 சத்து மாத்திரை
 
இதில் கடைபிடிக்கவேண்டிய ஒரு முக்கியமான ஒன்று, 240 மி.கிராம் மாத்திரையை சாப்பிட்ட உடனே படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும் என்பதுதான். இதுவும் ஆய்விலிருந்தே கண்டறியப்பட்டுள்ளது. 

ஆய்வில் பங்கேற்றவர்கள் மாத்திரை சாப்பிட உடனே தூங்கச் சென்றுவிட்டார்கள். இந்த சத்து மாத்திரைகளை உட்கொள்ளாத போது பலரும் தங்கள் கனவுகளை அரிதாகவே நினைவுகூர்ந்தனர். ஆனால் பி6 மாத்திரைகள் உட்கொண்டபிறகு ஏற்பட்ட முன்னேற்றங்களை ஆய்வின் முடிவில் அவர்களே தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் கலந்துகொண்டு, வைட்டமின் பி6 மாத்திரையை உட்கொண்ட பங்கேற்பாளர் ஒருவர் ஆய்வு முழுவதிலும் பங்கேற்று பின்னர் ஆய்வில் தெரிவிக்கையில், ''தூக்கத்தில் நேரம் கடந்துசென்றுகொண்டிருக்க அப்போது வந்த கனவின் போக்குகளை தெள்ளத்தெளிவாக நினைவுபடுத்தி காண முடிந்தது. மேலும், துண்டுதுண்டாக இல்லாமல் ஒரு முழுநாளின் அனுபவங்கள் நம்மைக் கடந்து செல்வதைப்போலவே அதன் காட்சிகளை நினைவுபடுத்தி உணரமுடிந்தது''
எனறு கூறியுள்ளார்.

இயற்கையாக கிடைக்கும் முழு தானிய தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் (வாழை மற்றும் வெண்ணெய் போன்றவை), காய்கறிகள் (கீரை மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை), பால், சீஸ், முட்டை, சிவப்பு இறைச்சி, கல்லீரல் மற்றும் மீன் போன்ற பல்வேறு உணவுகளில் வைட்டமின் B6 சத்து இயல்பாகவே நிறைந்திருக்கிறது.

தூக்கத்தில் கனவுகள் உருவாவது குறித்து ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர், அதில் குறிப்பாக அவர்கள் சொல்வது ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஆறு ஆண்டுகள் அளவுக்கு தூக்கத்தில் கனவுகளைக் காணவேண்டியுள்ளதாம். 

கனவுகளைக் கட்டுப்படுத்த முடியும்

''ஒருவேளை நாம் குழப்பங்கள் ஏதுமின்றி தெளிவான மனிதர்களாக இருந்து, இதை மட்டும் கட்டுப்படுத்தமுடியும் என்றால் நமது தூக்கத்தில் வரும் கனவுநேரங்களை இன்னும் ஆக்கபூர்வமாக பயன்படுத்த முடியும்'' என்கிறார் ஆஸ்பி.

தூங்கும்போது ஒரு கனவை நீங்கள் காணும்போதே ''நாம் கனவு காண்கிறோம்'' என்பதை உணருபவர்களாகவும் நீங்கள் இருந்துவிட்டால் பல ஆற்றலின் நன்மைகள் உங்களிடம் இருக்கிறது என்றுதான் அர்த்தம். 

உதாரணமாக, கெட்டக் கனவுகள் வருவதுபோலிருந்தால் அதை உடனே மாற்றிக்கொண்டு வேறு நல்ல கனவுகளுக்கு மாற முடியும், அத்தகைய திறமைகள் இருந்தால் நிச்சயம், பயங்களை கையாள்வது, பிரச்சினைகளை தீர்வுகாணும் திறமை, மோட்டார் கருவிகளை பழுதுபார்க்கும் திறமைகளை வளர்த்துக்கொள்ளுதல், உடல் அதிர்ச்சிகளிலிருந்து விடுபட்டு புனர்வாழ்வைப் பெறவும் நம்மால் இருக்கும்...

"தெளிவான கனவுகளை பெறுவதற்காக, முதலில் வழக்கமான கனவுகளை நினைவுகூரும் திறன் மிகவும் முக்கியம். இந்த ஆய்வின் அடிப்படையில். வைட்டமின் பி6 மனிதர்களுக்கு தெளிவான கனவுகளைத் தருவதற்கு ஒரு வழியாகவும் அமையலாம்'' என்றார் ஆஸ்திரேலிய ஆய்வு மாணவர் ஆஸ்பி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close