[X] Close

வங்கிக் கடனுக்கு இத்தனை கையெழுத்து ஏன்?


bank-loan-ethanai-kaiyezhuthu

  • kamadenu
  • Posted: 28 Apr, 2018 09:05 am
  • அ+ அ-

வங்கியில் வீட்டுக் கடன் பெறும்போது சில கேள்விகள் பலரது மனங்களில் தோன்றும். ‘எதற்காக இத்தனை ஆவணங்களில் கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள். கட்டப்போகும் வீட்டைத்தான் அடமானம் வைக்கிறோமே. எதற்காக இவ்வளவு கெடுபிடி? இவ்வளவு தாமதம்?’

இதற்குக் காரணம் முன்னெச்சரிக்கை உணர்வு. வங்கிகளுக்கு நேர்ந்த கடந்த காலக் கசப்புகள். அவர்கள் கோணத்திலும் இதைக் கொஞ்சம் பார்த்தால் அது நாம் எந்தெந்த விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கும் உதவியாக இருக்கும்.

வீடு அல்லது அடுக்ககம் கட்ட பில்டர்கள் உரிய திட்டத்தைத் தீட்டுவார்கள். அதற்கான அனுமதியையும் பொறுப்பாகவே வாங்கிவிடுவார்கள். இந்த ஆவணத்தை நம்பி வங்கி, கடனளிக்கச் சம்மதித்துவிடும். ஆனால், அடுக்ககத்தைக் கட்டும்போது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட ‘பிளா’னைப் போலக் கட்ட மாட்டார்கள். எட்டு அடுக்ககங்களுக்குப் பதிலாக 10 அடுக்ககங்கள் கட்டுவார்கள். முதலில் ஒத்துக்கொண்ட கார் பார்க்கிங் இடத்தைவிடக் குறைவாகவே அளித்திருப்பார்கள். மொட்டை மாடியில் ஒரு ‘பென்ட் ஹவு’சைக் கட்டி விடுவார்கள். குடியிருப்புப் பகுதிக்காக மட்டுமே என்று அனுமதி வாங்கிவிட்டு அங்கே வணிகக் கடைகளைக் கீழ்த் தளத்தில் கட்டி விடுவார்கள். இவற்றின் காரணமாக அந்தக் கட்டிடத்தையே அதிகாரிகள் சீல் வைத்து விடுவார்கள். இதற்குள் முக்கால்வாசிக் கடன் தொகையை வங்கி வழங்கி இருக்கும். அந்தக் கடன் தொகைக்கான தவணைக் கட்டணங்களைத் திருப்பி அளிக்க முடியாமல் போய் வாடிக்கையாளர்களும் தவிப்பார்கள். வங்கிக்கும் இதனால் திரும்பி வராத கடன்கள் அதிகரிக்கும்.

வீட்டைப் பறிமுதல் செய்வது என்பதும் வங்கிக்கு நடைமுறை சாத்தியமல்ல. அடுக்ககங்களைப் பொறுத்தவரை பிரிக்கப்படாத பங்கு (Undivided share) என்று ஒரு சிறிய அளவு நிலம்தான் வங்கியில் கடன் வாங்கியவருக்குச் சொந்தம். அதுவும் குறிப்பிட்ட நிலப்பகுதி என்பதல்ல.

ஒரு தளத்தில் இரண்டு ஃப்ளாட் கட்டுவதாகச் சொல்லி மூன்று ஃப்ளாட் கட்டி விடுவார்கள். கட்டிடத்துக்குள் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்துகொள்ள உரிமையாளர்களுக்கு அனுமதி உண்டு என்றாலும், மேலே குறிப்பிட்ட மாற்றத்தையெல்லாம் அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. முக்கியமாக எவ்வளவு சமையல் அறைகள் உள்ளன என்பதைக் கொண்டுதான் விதி மீறல் நடத்தப்பட்டிருக்கிறதா என்பதை அதிகாரிகள் உறுதிசெய்துகொள்கிறார்கள். எனவே திட்டப்படி, விதிமீறல் இல்லாமல் கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். தவறிப்போய் பில்டர் தவறிழைக்கிறார் என்றாலும் குறைந்தபட்சம் பிளானில் அனுமதிக்கப்பட்ட சமையல் அறை உங்கள் அடுக்கக எல்லைக்குள் இருக்கிறதா என்பதையாவது உறுதிசெய்துகொள்ளுங்கள்.

விதிமீறல்கள் நடந்தால் கட்டிடப் பணி முடிவடைந்ததற்கான சான்றிதழ் (Completion Certificate) கிடைக்காது. இதைப் பெற்றால்தான் கழிநீர் வாரியம், மின்சார வாரியம் போன்றவை உரிய இணைப்புகளை அளிக்கும். இவை இயங்கினால்தான் அங்கு யாரும் குடிபோக முடியும். இதெல்லாம் நடக்காததால் மாதத் தவணை கட்டுவதில் சுணக்கம் ஏற்பட, வங்கிக்கு மீண்டும் தலைவலி.

சில சமயம் வழக்கறிஞர்களுடன் கைகோத்துக்கொண்டு கட்டுநர்கள் தவறிழைப்பார்கள். விற்பவர் தரப்பில் சம்பந்தப்பட்ட அனைவரும் கையெழுத்துப் போட்டிருக்கிறார்களா, அவை அசல் ஆவணங்கள்தானா என்பதையெல்லாம் வழக்கறிஞர்கள் சரிபார்க்காமல் (அல்லது பில்டர்களுடன் சமரசம் செய்துகொண்டு பொய் கூறி) சான்றிதழ் அளிப்பார்கள். இதை நம்பி வங்கி கடன் கொடுத்தால் பிரச்சினைதான்.

சில நேரம் ஒரு வங்கியின் தவறு இன்னொரு வங்கிக்குத் தலைவலியாக முடியும். தனிநபர்களைப் பொறுத்தவரை அவர்களின் நிதி நாணயத்தை உரசிப் பார்க்க சிபில் (CIBIL) என்ற அமைப்பு இருக்கிறது. இந்தியாவிலுள்ள எந்த வங்கியில் யார் கடன் வாங்கினாலும் அதை அவர்கள் நாணயமாகத் திருப்பிச் செலுத்தினாரா என்ற தகவல்கள் இவர்களுக்கு வந்துவிடும். அதாவது ஒவ்வொரு வங்கியும் இந்தத் தகவல்களை அந்த அமைப்புக்குத் தந்துவிடும். ஆனால், ஏதோ ஒரு வங்கியில் ஒரு வாடிக்கையாளர் தவணைகளைச் சரியாகத் திருப்பிச் செலுத்தவில்லை என்று வைத்துக்கொள்வோம். அந்தத் தகவலைச் சிறிது காலம் பொறுத்தே சிபில் அமைப்புக்கு அந்த வங்கி தெரிவித்தால்? அதற்குள் அந்த நபர் வேறொரு வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்து அங்கு கடன் பெற்றுக்கொண்டு தலைமறைவாகலாம்.

வணிகம் செய்பவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான வருமானவரி ரிட்டர்னை வங்கிகளுக்கு அளிக்க வேண்டும். அவற்றைப் பார்த்துவிட்டுதான் வீட்டுக்கடன் எவ்வளவு தரலாம் என்று வங்கிகள் தீர்மானிக்கும். ஆனால், சிலர் போலியான வருமானவரி ரிட்டர்ன்களைக் காட்டி வீட்டுக்கடன் பெறுவதும் பின்னர் மாதத் தவணைகளைச் செலுத்தாமல் இழுத்தடிப்பதும் கடந்த காலத்தில் வங்கிகளுக்கு நேர்ந்த கசப்பு அனுபவங்கள்.

வங்கிக் கடன் வழங்கியபின் ஒவ்வொரு கட்டமாக வீடு உருவாகும்போதும், வீட்டுக் கடனில் ஒரு பகுதி என வங்கி பில்டருக்கு வழங்கும். ஆனால், சில பில்டர்களின் நெருக்கடியால் குறிப்பிட்ட கட்டம் வரை வீடு எழுவதற்கு முன்பாகவே அது அந்தக் கட்டத்தை அடைந்துவிட்டதாகக் கூறி கடன் வாங்குபவர் வங்கியிலிருந்து கடனை வாங்கிவிடுவார். வங்கி அதிகாரிகள் இதை நேரில் சென்று சரிபார்க்க வேண்டுமென்று இருந்தாலும், பல வங்கிகளில் குறைவான எண்ணிக்கையில் ஊழியர்கள் இருப்பதால் இதை நடைமுறையில் பின்பற்றுவதில்லை. இதனால் பின்னர் சிக்கல் உண்டாகிறது.

ஆக வங்கிகள் வீட்டுக்கடன் வழங்கும்போது பலவிதக் கெடுபிடிகளைச் செய்வது மேற்படி சிக்கல்களிலிருந்து தப்பத்தான். அறிந்தோ அறியாமலோ பில்டரின் தவறான அழுத்தங்களுக்கு இடம் கொடுத்து வங்கிகளும் நீங்களும் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close