[X] Close

பயணங்களும் பாதைகளும்- 4: கட்டிப்பிடி வைத்தியம் 


payanangalum-paathaikalum-4

  • பாரதி ஆனந்த்
  • Posted: 25 Apr, 2018 16:36 pm
  • அ+ அ-

அதாகப்பட்டது....ஜெர்மனி, ஜெர்மனி என்னும் ஒரு நாட்டிலே, நன்றாக எண்ணெய்த் தேய்த்து ஷாம்பூ போடும் ஒரு சனிக்கிழமை நன்னாளிலே, ஊர் சுற்றிப்பார்க்கக் கிளம்பிய அந்தப் பொன்னாளிலே, நடந்தது என்ன....??

ஒரு குற்றப் பத்திரிகை இல்லை இப்போது நான் சொல்லப்போவது .... எல்லோரும் ஏங்கச்செய்யும் வெட்கப்பத்திரிகை.

Karlplatz…. இங்கேதான் சென்றோம்... இது ம்யூனிச் நகரில் இருக்கும் ஒரு முக்கியமான ஷாப்பிங் சென்டர்கள் உள்ள இடம். மெட்ரோ , பஸ், பாதாள ரயில் என்று எல்லாவிதமான வாகனத்திலும் இங்கே செல்ல முடியும். நான் மெட்ரோவில் சென்றேன். ஸ்டேஷன் விட்டு வெளியே வந்ததும் ஒரு பெரிய நுழைவாசல்.

அது அந்த ஷாப்பிங் பாரடைஸுக்கு என்ட்ரி பாயின்ட்... உள்ளே நம் ரங்கநாதன் தெருவை மிஞ்சும் கூட்டம். இது வெள்ளி மதியமே ஆரம்பித்துவிடும் இந்த ஃபிவர். தெருவில் உள்ள கடைகள் அனைத்திலும் மானாவாரியாக டிஸ்கொன்ட் அறிவிப்புக்கள் கண்சிமிட்டும். ஏதோ தலை போகும் அவசரமாக எல்லாக் கடைகளிலும் கூட்டம்.

சரி.... காரிகை விஷயத்திற்கு வருவோம்... பெரிய நுழைவாசல் அடியில் ஒரு குண்டு, குஷ்க் புஷுக் பெண்...கைகளில் ஜெர்மனில் எழுதப்பட்ட ஒரு போர்ட்... நான் அவளைப் பார்ப்பது தெரிந்ததும்.... ஜெர்மனில் ஏதோ சொல்லியபடி இரண்டு கைகளையும் விரித்து என்னை நோக்கி ஆட்டினாள்...

கூட இருந்த என் மகன் “என்னம்மா.... உன்னைத்தான் கூப்பிடுகிறாள் ... போகிறயா...??”

”என்னையா....? எதற்கு...?”

”கட்டிப்பிடித்து ஹக் செய்துகொள்ள....”

கேலியா...நிஜமா புரியாமல் நான் விழிக்க...

”அம்மா... அந்த போர்ட்லே அதான் எழுதியிருக்கு... Free Hug…யார் வேண்டுமானாலும் சென்று கட்டிப்பிடிக்கலாம் .”

”ஜெர்மன்லே இருக்கா..புரியவில்லை..”

”ஜெர்மன்னா... இங்லீஷ்மா....”

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் கணக்கா... தமிழ் கூட ஜெர்மன்னா தெரியும் போல ....

”என்னை எதற்கு...??”

இந்த மெட்ரோ ஸ்டேஷனில் Pommes pommes என்ற வஸ்து ஒன்று கிடைக்கும். நம் பொடேட்டோ ஃபிங்கர் சிப்ஸ் கணக்கா... அது டேஸ்டிதான். அதன் மேல் போட்டுக்கொள்ள பன்னிரண்டு வகை ஸாஸ்

டிஸ்பென்ஸர் வைக்கப்பட்டிருக்கும். அவற்றை மேலே லிபரெல்லாக தூவி.... பெப்பரும் போட்டுச் சாப்பிட்டால்... தேவாமிருதம். என்ன... உருளைக்கிழங்கு என்பதால் என் கண்களில் காட்டப்படாது. சரி , எதிரே உள்ள கடை என்னவென்று பார்த்தால்.... விதம் விதமாக... ஐஸ்க்ரீம்ஸ்... அதுவும் எனக்கு banned. அந்தக் கோபத்தில் நான் முகத்தைச் சோகமாக வைத்துக் கொள்ள.....

என்னைக் கூப்பிட்டதின் காரணம் புரிந்திருக்கும்.

அந்தப் பெண்ணிற்கு 25 வயதுதான் இருக்கும்.முகத்தில் கொள்ளைச்சிரிப்பு.

”ஓ... பணம் சம்பாதிக்க ரிஃபைண்ட் வழியா....??”

”அம்மா... தப்பா யோசிக்காதே... இந்த ஹக்கிற்கு பணம் ஏதும் இல்லை....”

அதாவது , கைகளில் “ free hug” என்று எழுதி மாட்டப்பட்ட பலகையோடு வார இறுதியில் இருக்கும்

வீக்கெண்ட்டிற்கு தெரு ஓரமாக வந்து நின்று இந்த கட்டிப்பிடி சேவை செய்கிறார்கள் இந்த இளம் பெண்கள்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது

அவளின் தாய் தந்தையர் இதைப்பற்றி அறிவார்களா..? அறிந்து சரி சொன்னபின் தான் இந்த கட்டிப்பிடி வைத்தியமா? அப்படி என்றால் நம் நாட்டில் பேசப்படும் பேரண்டிங் விதி முறைகள் அங்கே மாறுபடுகின்றனவா?வெறும் லெகின்ஸ் பற்றி இந்தப் பேச்சு பேசும் நம் சமுதாயம் இதை எப்படி எதிர்கொள்ளும்? இங்கு நாம் இப்படி நடந்தால் சரி என்போமா?

அவ்வளவு கூட்டம் இருந்தது. நிறையத் தனியே வந்த ஆண்கள் கும்பலும் இருந்தது. நான் இருந்த ஒரு மணி நேரம் யாரும் சென்று அவளைக் கட்டிப்பிடிக்க வில்லை. நம் நாட்டில் ஒரு இடி ஒரு கிள்ளு வாங்காமல் பப்ளிக் டிரன்ஸ்போர்ட்டில் ஒரு பெண் போக முடியுமா?

ஆக, தவறு எங்கே இருக்கிறது. மதத்திலா , மனதிலா, மனிதர்களிலா...? தெரியவில்லை.

ஒரு ஹக் கொடுப்பதால் மற்றவர் மன பாரம் குறையும் என்று நினைக்கும் அந்தப்பெண்.... அவள் உயர்ந்த உள்ளம் கொண்டவள் என்று கொள்ளலாமா..? 

தமிழில் வந்த ஒரு சினிமாவில் கமல்ஹாசன் இந்த கட்டிப்பிடி வைத்தியத்தைப்பற்றிப் பேசுவார்.

ஆக.....என்னவோ போ.... கட்டிப்பிடி வைத்தியம் எல்லாம் உண்மைதான் போல....... !!!!

-லதா ரகுநாதன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close