[X] Close

ஆசாராம் பாபு: 10,000 கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தை நிறுவிய கதை


story-of-asaraamji-babu-asaram-case-verdict

ஆசாராம் பாபு | கோப்புப் படம்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 25 Apr, 2018 13:21 pm
  • அ+ அ-

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொண்ட போதகர் என்ற உயர்ந்த நிலையிலிருந்து, சிறுமி பலாத்கார வழக்கில் மாட்டிக் கொண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் ஆசாராம். 

கிடைத்த கணக்கை மட்டும் வைத்துப் பார்த்தாலே நாட்டில் பல முன்னணி வியாபாரிகளை முந்திவிடுவார் ஆசாராம். 40 வருடங்களில் 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சாம்ராஜ்யத்தை ஆசாராம் நிறுவியுள்ளார். 70களின் ஆரம்பத்தில், சபர்மதி நதிக்கரையில் எளிமையான ஒரு குடிசையில் ஆரம்பமான ஆசாராமின் பயணம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் 400 ஆசிரமங்கள் நிறுவுவது வரை வளர்ந்திருக்கிறது. 

2013-ம் வருடம் இந்த பலாத்கார வழக்கின் விசாரணை ஆரம்பமானபோது, போலீஸ் தரப்பு மொடேரா பகுதியில் உள்ள ஆசாராமின் ஆசிரமத்திலிருந்து பல ஆவணங்களை கைப்பற்றினர். அதன் மூலம், 77 வயதான ஆசாராமுக்கு 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பது தெரியவந்தது. இதில் ஆசாராம் வைத்திருக்கும் பெரிய நிலங்களின் மதிப்பு சேர்க்கப்படவில்லை. 

ஆசாராமுக்கு இன்னும் பக்தர்கள் இருக்கலாம். ஆனால் இந்த பலாத்கார குற்றச்சாட்டுக்குப் பிறகு, நில அபகரிப்பு, ஆசிரமத்தில் மாந்திரீகம் செய்தல் போன்ற குற்றச்சாட்டுகளும் ஆசாராம் மீது வைக்கப்பட்டுள்ளன. 

ஆசாராமின் அதிகாரபூர்வ வலைதளத்தில் இருக்கும் ஆவணப் படம் ஒன்றில் நமக்குக் கிடைக்கும் தகவல்கள் என்னவென்று பார்ப்போம்.


பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஆசாராம், அவரது பக்தர்கள்

1941ல், பாகிஸ்தானின் சிந்த் மாகாணாத்தில் உள்ள பெரானி கிராமத்தில் ஆசாராம் பிறந்தார். அப்போது அவரது பெயர் அசுமால் சிருமலானி.

1947 பிரிவினைக்குப் பிறகு அசுமால் தனது பெற்றோருடன் அகமதாபாத் குடிபெயர்ந்தார். மணிநகர் பகுதியில் உள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு வரை படித்தார். ஆசாராமுக்கு 10 வயதானபோது அவரது தந்தை இறந்ததால் படிப்பை அப்படியே விட்டுவிட்டார். 

சின்னச் சின்ன வேலைகள் செய்து சம்பாதித்துக் கொண்டிருந்த அசுமால், ஆன்மிகப் தேடலுக்காக இமாலய மலைகளை நோக்கிப் பயணப்பட்டார். அங்கு தனது குரு லிலாஷா பாபுவை சந்தித்தார். 

1964ஆம் ஆண்டு, அந்த குருதான் அசுமாலுக்கு ஆசாராம் என்ற பெயரை சூட்டுகிறார். மேலும் 'உனக்கென ஒரு தனி வழி வகுத்து மக்களை வழிநடத்து' என்றும் பணித்தார். 

70களின் ஆரம்பத்தில் அகமாதாபாத் வந்த ஆசாராம், மொடேரா பகுதியில் இருந்த சபர்மதி நதிக்கரையில் தியானம் செய்ய ஆரம்பித்தார். 

ஒரு ஆன்மிகத் தலைவராக ஆசாரமின் பயணம் 1972ஆம் ஆண்டு தான் ஆரம்பமானது. அந்த வருடம் நதிக்கரையில், 'மோக்‌ஷ குடிர்' என்ற எளிமையான குடிசையை ஆசாராம் நிறுவினார். வருடங்கள் ஓட, ஆசாரம்ஜி பாபுவின் புகழ் பன்மடங்கு பரவியது. அந்த எளிமையான குடிசை, விஸ்தாரமான ஆசிரமமாக மாறியது. 

40 வருடங்களில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் கூடுதலாக 400 ஆசிரமங்கள் நிறுவப்பட்டன. 

ஏன், இன்றும் கூட மொடேரா ஆசிரமத்தில் பக்தர்கள் கூட்டம் குறைவதில்லை. தங்கள் குரு தவறான குற்றச்சாட்டில் சிறைக்கு சென்றுள்ளார் என்றே அவர்கள் மறுத்துப் பேசி வருகின்றனர்.

ஆசாராமின் மனைவியின் பெயர் லக்‌ஷ்மி தேவி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மகள் பார்தி தேவி. மகன் நாராயண சாய். இவரும் தற்போது சிறையில் உள்ளார். 


ஆசாராமின் மகன் நாராயண சாய்

2008ல் தான் ஆசாராம் முதல் பிரச்சினையில் மாட்டிக் கொண்டார். தீபேஷ் மற்றும் அபிஷேக் என்ற இரு சகோதரர்கள் ஆசாராமின் மொடேரா ஆசிரமத்தில் அடிக்கடி தங்குபவர்கள். அவர்கள் இருவரும் மர்மமான முறையில் நதிக்கரையில் இறந்து கிடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த கொலை வழக்கில் ஆசாராமின் 7 பக்தர்களை சிஐடி கைது செய்தது. சகோதரர்களின் பெற்றோர்கள், ஆசாராமின் ஆசிரமத்தில் மாந்திரீம் செய்கின்றார்கள் என்றும், அதில் தான் இரண்டு சகோதரர்களும் பலி கொடுக்கப்பட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டினர். 

2013ல், ராஜஸ்தானில், சிறுமி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டதுதான் ஆசாராமின் முழு வீழ்ச்சிக்கு ஆரம்பப் புள்ளியானது. இதைத் தொடர்ந்து, சூரத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர், ஆசாராமின் மகன் நாராயண சாய்க்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். 

அக்டோபர் 6, 2013 அன்று, ஒரு புகார் ஆசாராமுக்கு எதிராகவும், மற்றொரு புகார் நாராயண சாய்க்கு எதிராகவும் பதிவுசெய்யப்பட்டது. பலாத்காரம், பாலியல் வன்கொடுமை, சட்டவிரோதமாக அடைத்துவைத்தல் எனப் பல குற்றச்சாட்டுகள் இதில் அடக்கம்.  காந்திநகர் நீதிமன்றத்தில் இன்னும் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. 

சூரத் மற்றும் அகமதாபாதில், ஆசிரமத்துக்காக நில அபகரிப்பு செய்ததாகவும் ஆசாராம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆசாராம் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்ட பிறகு, சாட்சிகளை மிரட்டியும், தாக்கியும் அச்சுறுத்தியதாக ஆசாராமின் பக்தர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். 

- பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close