[X] Close

ஜில்ஜில் சம்மருக்கு ஈஸி வழிகள்!


jiljil-kodai

  • kamadenu
  • Posted: 17 Mar, 2019 15:06 pm
  • அ+ அ-

ஜெமினி தனா

இந்த வருடம் கோடை வெயில்  சுட்டெரிக்கும்  என்ற அபாயமணியை வானிலை  ஆய்வு மையம் அறிவிப்பது கடந்த ஆண்டுகளில் இருந்தே சகஜமாகிவிட்டது. இந்த வருடமும் அதே வார்த்தைகளைச் சொல்லி, கோடைவெயில் சுட்டெரிக்கும் என்று  மிரட்டியிருக்கிறது.

வானிலை ஆய்வு மையத்திலிருந்து   ’இன்று மழை  பொழியும்’ எனும் அறிவிப்புகள்  தவறலாம். ஆனால் தவறாமல், ஒரு டிகிரி கூட சேர்த்து சதம் அடிக்கும் பணியை செவ்வனே செய்கிறது கோடை வெயில்.

வருடம் தோறும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பது போல, உடலில் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன என்பதை மருத்துவர்களின் எச்சரிக்கையும் அறிவுறுத்தலும் உணர்த்துகின்றன.

’யப்பா... என்னா வெயிலு’ என்று வடிவேலு பாணியில் உச்சி வெயிலில் பேசும் வசனங்களை இப்போது  காலை ஒன்பது மணிக்கே கேட்கும் அளவுக்கு சூரிய பகவான் இறங்கி வந்து தன் பலத்தை  காட்டத் தொடங்கிவிடுகிறார். ஒருபக்கம் சருமப் பிரச்சினை. இன்னொரு பக்கம் ஆரோக்கிய சிக்கல். மறுபக்கம் உடல் வெப்பம் என்று சுழற்றிச் சுழற்றி நம்மை பதம் பார்க்கிறது வெயிலின் தாக்கம்.  

இதோ... கோடையை சமாளிக்க சில டிப்ஸ்...

உடல் சூடு தவிருங்கள்:

    கோடைக்காலத்தில் நாள் ஒன்றுக்கு நம் உடலுக்கு 5 லிட்டர் தண்ணீர் அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.  ஃப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீர் உடல் சூட்டையேத்தான் உண்டாக்கும் என்பதால் கூடுமானவரை அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

பானைத் தண்ணீர் எந்தக் காலத்திலும் உடலுக்கு கேடு தராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்போது பானை குறித்த சிந்தனையும் பானைத்தண்ணீர் குறித்த விழிப்பு உணர்வும் மக்களிடம் வந்துவிட்டது. தாகம் இல்லையென்றாலும் அவ்வப்போது தண்ணீர் குடிப்பதும் பழச்சாறுகளை அருந்துவதும்  உடல் சூட்டை அதிகரிக்காமல்  காக்கும்.

உடல் குளிர்ச்சி:

    காலையும் மாலையும்  குளிப்பது உடல்  வெப்பத்தைப் போக்கி குளிர்ச்சிப்படுத்தும். குளியல் என்பதே உடல் வெப்பத்தைப் போக்குவதுதான். சோப்புகளை அதிகம் உபயோகிக்காமல் வாரம் ஒரு நாள் எண்ணெய்க்குளியல் செய்வதும் நல்லது. உடலில் குளுமை இல்லாமல் இருந்தால் வெந்தயத்தைத் தலைக்குத் தேய்த்து குளிக்கலாம். வாரம் இருமுறை தலைக்குக் குளிப்பதால் கூந்தல் பிசுபிசுப்பு இல்லாமல் அரிப்பு இல்லாமல் இருக்கும். பொடுகும் சேராது. உடல் உஷ்ணமும் காணாமல் போகும்.

ஜில்லு உணவு:

  எண்ணெயில் பொரித்த உணவுகள், அதிக எண்ணெயில் சமைத்த உணவுகள், மசாலாவும் காரம் அதிகமும் உள்ள உணவுகள் தவிர்ப்பது ஆரோக்கியத்துக்கு ரொம்பவே நல்லது.  கோடைக்காலத்தில் இறைச்சிகளை, அசைவ உணவுகளைத் தள்ளி வைப்பதே சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள். தவிர்க்க முடியாதவர்கள் ஆட்டுக்கறி,மீன்  போன்றவற்றை குறைந்த அளவு எடுத்துக்கொள்ளலாம்.

காய்கறிகள், பழங்கள், திரவ உணவுகள் உங்களை கோடையிலிருந்து காப்பாற்றும். செயற்கை குளிர்பானங்களும் அதிக அளவு ஐஸ்க்ரீம்களும் உடல் ஆரோக்கியத்தை அதிகமாகவே கெடுத்துவிடும். ஃப்ரிட்ஜில் நாள்கணக்கில் வைத்திருக்கும் உணவுப் பொருள்களையும் கோடையில் தவிர்ப்பது நல்லது. எளிதில் ஜீரணமாகாத நிலையும் உடலில் உஷ்ணத்தைத் தரும் என்பது தெரியும்தானே.

கோடை நோய்கள்:

      வயது வித்தியாசம்  பார்க்காமல் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் வியர்க்குருக் கட்டிகள் உண்டாகும். அனல் காற்று வீசும் நேரங்களில் வெயிலில் அலையும் பணியிலிருப்பவர்களுக்கு உடலில் அரிப்பு, அம்மை நோய், வயிற்று வலி என எளிதாகத்  தாக்கும். தற்போது உடல் சூட்டினால் மஞ்சள் காமாலை வருவதற்கும் வாய்ப்பு உண்டு என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். நீர்க்கடுப்பு அல்லது நீர்ச்சுளுக்கு வந்துவிட்டால் கடுமையாகப் போராடவேண்டியிருக்கும். குறிப்பாக, பெண்கள் பாடு படு திண்டாட்டம்தான். கோடைக்காலத்தில்   இயற்கை உபாதைகளை அடக்கும் பெண்கள் நீர்ச்சுளுக்கு பாதிப்புக்கு உள்ளாவதோடு போதிய நீரின்றி சிறுநீரகத்தில் கல் உண்டாக்கும் அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

தவிர்க்க வேண்டியவை:

    குழந்தைகளுக்கு விடுமுறை காலம் என்றாலும் மாலை நேரங்களில் மட்டும் வெளியே விளையாட அனுமதியுங்கள்  எப்போதும் ஏஸியில் அமர்ந்திருப்பதும் கூட நல்லது அல்ல.  உடலுக்கு வெப்பத்தை அதிகரிக்கச் செய்துவிடும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.  வீட்டை விட்டு வெளியே செல்வதாக இருந்தாலும், மார்கெட்டிங் போன்று வெளியில் சுற்றும் பணியில் இருப்பவர்களும்  12 மணி முதல் 4 மணி வரை வெயிலில் வெளியில் செல்வதைத் தவிருங்கள்.

தவிர்க்க முடியாமல் வெளியில் செல்ல நேரிட்டாலும்   இரு சக்கர வாகனங்களில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. தலையில் தொப்பியும், கண்களுக்கு கூலிங் க்ளாஸும் இல்லாத பயணம் எரிச்சல் மிக்க பயணமாகவே இருக்கும். கையில் சிறு குடையும், தண்ணீர் பாட்டிலும் அவசியம் கோடைக் காலத்தின் உற்ற தோழர்கள்!  

   உடலில் இருந்து வெளிப்படும் வியர்வையை உறிஞ்சும் தன்மையைக்  கொண்ட பருத்தி ஆடைகள்தான் பெஸ்ட் சாய்ஸ்.  வெயிலின் தாக்கம் நேரிடையாக சருமத்தின் மீது படுவதால் சருமம் பொலிவிழந்து வறண்டு காணப்படும். சிலருக்கு ஒவ்வாமையால் அலர்ஜி ஏற்பட்டு சிறு சிறு கட்டிகள் உண்டாகும். வெளியே செல்லும் போது அதிக கெமிக்கல் இல்லாத க்ரீம்களை  தடவிக்கொள்ளலாம்.    கண்களைத் தவிர முகம், கைகள் முழுக்க துணியால் போர்த்தியபடி வரும் இளம்பெண்கள் இக்காலத்தில்  சாமர்த்தியசாலிகள். வயதான முதியவர்கள், சுகர், ரத்த அழுத்தம், இதய நோய்  பாதிப்பிலிருப்பவர்கள் கண்டிப்பாக வெயில்  நேரத்தில் வெளியே செல்லாதீர்கள்.

இது மிக மிக அவசியம்!

நீர்ச்சத்து மிக்க காய்கறிகள், காய்கறிகள் கொண்ட சாலட், இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம், கூழ், நீர்மோர், பானகம், சிறிய வெங்காயம், பழச்சாறுகள் என தினம் ஒன்றாக எடுத்துக்கொள்ளுங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சாப்பிடுங்கள். உடலின் வெப்பத்தை அதிகரிக்கவே விடாமல் இவையெல்லாம் பாதுகாக்கும்.

இப்படியெல்லாம் செய்துதான் ஹாட் சம்மரை ஜில் ஜில் சம்மராக மாற்றி கூலாக வலம் வர முடியும்.. எனவே, ஹேப்பி  கூலாக  சம்மரை வரவேற்போம்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close