[X] Close

பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கும் கருவியில் அடிக்கடி கோளாறு: பழையபடி துளையிட்டு வழங்கும் நடத்துநர்கள்


bus-ticketr

  • kamadenu
  • Posted: 16 Mar, 2019 09:35 am
  • அ+ அ-

அரசு பேருந்துகளில் பயணச் சீட்டு வழங்கும் கருவிகளில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதால், நடத்துநர்கள் பழையபடி பயணச்சீட்டை துளையிட்டு கொடுத்து வருகின்றனர்.

அரசு போக்குவரத்துத் துறையில் நடந்துநர்கள், கருவிகள் மூலம் பயணச் சீட்டு வழங்கும் முறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. இந்தக் கருவிகளின் மூலம், ஒவ்வொரு பேருந்துகளிலும் வழங்கப்பட்ட பயணச் சீட்டு விவரங்கள், வசூல் தொகை உள்ளிட்டவை பணிமனைகள், மண்டலஅலுவலகங்கள் மற்றும் கோட்ட அலுவலகங்களுக்கு உடனடியாகத் தெரியவரும்.

முதல்கட்டமாக மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இக்கருவி அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு, பழுதடைந்த கருவிகள் சரி செய்யப்படாததாலும், புதிய கருவிகள் வாங்காததாலும், இத்திட்டம் முடங்கியது. இதற்கிடையே, மின்னணு பயணச்சீட்டுத் திட்டத்தை மீண்டும் முழுமையாக செயல்படுத்த வேண்டுமென சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, கருவிகள் மூலம் பயணச்சீட்டு வழங்கும் முறை மீண்டும் புத்துயிர் பெற்றது. இதைத் தொடர்ந்து சென்னையில் இயக்கப்படும் 92 சதவீத மாநகரப் பேருந்துகளில் மின்னணு கருவி மூலம் டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், பயணச் சீட்டு கருவிகளுக்கு போதிய அளவில் காகிதக் கட்டுகள் வழங்குவதில்லை. மேலும், பராமரிப்பும் இல்லாததால், கருவிகளில் அடிக்கடி பழுது ஏற்படுவதாக நடத்துநர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் பழைய நிலைக்கு...

இதுதொடர்பாக நடத்துநர்கள் சிலர் கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட பயணச் சீட்டு வழங்கும் கருவிகளில் சுமார் 80 சதவீதம் பழுதாகிவிட்டன. இதை சரிசெய்து கொடுத்தனர்.

தற்போது மீண்டும் பழுதாகி பராமரிப்பில்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்றவாறு புதிய கருவிகளும் வாங்கவில்லை. காகிதக் கட்டுகளும் வழங்குவதில்லை. இதுபோன்ற பிரச்சினைகளால் பழையபடி பயணச்சீட்டை துளையிட்டு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close