[X] Close

பாஜக முன்னாள் தலைவர் கன்ஷியாம் காங்கிரஸில் இணைந்தார்


  • kamadenu
  • Posted: 27 Mar, 2019 07:53 am
  • அ+ அ-

முரளி, ரம்யா, அப்பா, அம்மா என எல்லோரும் டிவி பார்த்துக்கொண்டு இருந்தார்கள். கதாநாயகனும் நாயகியும் சிறப்பாக நடனம் ஆடுவதை ரசித்தார்கள். அந்தப் பாட்டு முடிந்து அடுத்த பாட்டு ஆரம்பித்த உடனேயே அம்மா பட்டென்று டிவியை அணைத்தாள். “போ… போய் ரெண்டு பேரும் படிக்கிற வேலையைப் பாருங்க” என்றாள். “படிச்சு முடிச்சுட்டுத்தானே வந்தோம். இப்பதான டிவி பார்க்க உட்கார்ந்தோம். அதுக்குள்ள நிறுத்திட்டியே” என்றாள் முரளியின் தங்கை ரம்யா.

“கேரம் விளையாடுங்க. அப்பாவுக்கு இப்ப நியூஸ் பார்க்கணும்”.

அம்மா சொன்னதைக் கேட்டு அப்பாவே திடுக்கிட்டுத் திரும்பினார்.

முரளியும் ரம்யாவும் முணுமுணுத்தபடி கேரம் விளையாடச் சென்றனர்.

அவர்கள் போன பிறகு, அப்பா அம்மாவிடம், “ஏன்மா டிவியை அணைச்சிட்டே” என்றார்.

“அந்தப் பாட்டு ரொம்ப ஆபாசமா இருக்கும். முரளிக்கு மீசை முளைக்க ஆரம்பிச்சுடுச்சு. அவன் இப்ப இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் ஆர்வமா பார்க்கிறான்” என்றாள்.

“என்னன்னு சொல்லி நாமதான் புரியவைக்கணும்” என்ற அப்பாவை இடைமறித்தாள் அம்மா.

“எல்லாம் பெரியவனாகறபோது அவனா தெரிஞ்சுப்பான்” என்றாள்.

ஏடாகூடக் கேள்விகள்

சமீபத்தில், பாலியல் உணர்வுகள் - உறவுகள் பற்றிய பயிலரங்கில் கீழ்க்கண்ட கேள்விகளைப் பெயர் குறிப்பிடாமல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் எழுதிக்கொடுத்திருந்தார்கள்.

1. முத்தம் கொடுத்தால் கர்ப்பம் ஆவார்களா?

2. ஏன் பையன்களும் பெண்களும் பேசினாலே அவங்க தப்பாகத்தான் இருக்காங் கன்னு பெரியவங்க நினைக்கிறாங்க?

இதைவிட சூப்பரான கேள்வி ஆசிரியர் களிடமிருந்து வந்திருந்தது.

“சமீபத்தில் ஒரு படத்தில் பெண்கள் சிகரெட் பிடிக்கிற மாதிரியும் தண்ணி அடிக்கிற மாதிரியும் உடலுறவு பத்தி வெளிப்படையா பேசறா மாதிரியும் வந்திருக்கே இது சரியா, தவறா?”

நம் சமூகத்தில் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் பெயரால் பாலியல் தொடர்பான அடிப்படை விஷயங்கள் விவாதிக்கப்படுவதில்லை.

பாலியல் தொடர்பாகப் பேசக்கூடிய படங்களை ஒரு சாரார் எதிர்க்கிறார்கள். மற்றொரு சாரார் இத்தகைய விவாதம் தேவை; பெண்கள் பாலியல் பற்றிப் பேசுவதுதான் அவர்களுக்கான விடுதலை என்கிறார்கள். இவற்றில் இதுதான் சரி, தவறு என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை.

பாலியல் பற்றி மூடிமறைப்பது எவ்வளவு ஆபத்தானதோ அவ்வளவு ஆபத்தானது அது பற்றிய விவாதங்கள் ஏதுமற்ற கிளுகிளுப்பான அணுகுமுறை.

பேசாப் பொருளைப் பேசலாமா?

பாலியல் பற்றிய விவாதங்கள் வேண்டும்தான். ஆனால், அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். பெண்கள் பாலியல் பற்றி வெளிப்படையாகப் பேசுவதை எதிர்க்கும் ஆண்களும் வரவேற்கும் ஆண்களும் அதை எப்படி அணுகுகிறார்கள்? பாலியல் பற்றிப் பெண்கள் பேசுவது கலாச்சாரச் சீர்கேடு என்று நினைப்பவர்கள் அதிர்ச்சியையும் வெறுப்பையும் வெளிப் படுத்துகிறார்கள். ஆதரிப்பவர்கள் பேசாப் பொருளை பேசத் துணிந்ததற்காகப் பெண்களைப் பாராட்டுகிறார்கள்.

அவர்கள் ஏன் பாராட்ட வேண்டும்? பெண்கள் முன்னேறிவிட்டார்கள்; இதை யெல்லாம் பேசுகிறார்கள் என்ற பெண் விடுதலைக் கருத்தாக்கத்தை நம்புவதாலா? அப்படியென்றால் பெண்கள் பாலியல் குறித்து வெளிப்படையாகப் பேசுவதை ஆதரிக்கும் எத்தனை பேர் வேறு நியாயமான விஷயங்களுக்காகப் போராடும் பெண்களின் செயல்பாடுகளை ஆதரிக்கிறார்கள்?

இது பெண் விடுதலையா?

பெண்களின் பாலியல் சுதந்திரம் பற்றி ஆண்கள் பேசும்போது, அதை அவர்கள் பெண்களுக்கான விடுதலையாகப் பார்க்கிறார்களா, பெண்கள் தங்களுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்புகளை அது பெருக்குவதாகப் பார்க்கிறார்களா என்ற எண்ணம் வருகிறது.

சில வருடங்களுக்கு முன் ‘முற்போக்கான’ ஒரு எழுத்தாளர் தன் மகனின் 18-வது பிறந்தநாளுக்கு ஆணுறையைப் பரிசாக வாங்கிக்கொடுத்ததாகச் செய்தி வந்தது.

18 வயது மேஜரான வயதுதான். ஆனால், பாலியல் உறவு என்பது உடல் இச்சை சம்பந்தப்பட்டது மட்டும்தானா? பாலியல் செயல்பாட்டில் ஈடுபடும்போது, அந்த ஆணும் பெண்ணும் மனமொப்பிகூட ஈடுபட்டிருக்கலாம். ஆனால், இருவருமே குற்றவுணர்வும் பயமும் இல்லாமல் இருக்கிறார்களா? முத்தத்திலேயே கர்ப்பம் வந்துவிடுமோ என்று பயப்படுகிற அறிவுடன்தான் நாம் நம் இளைஞர்களைத் தயார்படுத்தியிருக்கிறோம்.

பாலியல் சுதந்திரம் பற்றிப் பேசுவதுபோல், பாலியல் உறவுகளின் பொறுப்புணர்வு குறித்துப் பேச வேண்டாமா? சம்பந்தப்பட்ட இருவரின் மன உணர்வுகள் உறவின்போதும் பிறகும் என்னவாக இருக்கக் கூடும்; அதை எப்படிக் கையாள்வது என்பது பற்றிப் பேச வேண்டாமா?

பொறுப்புணர்வும் அவசியம்

தனி இடம் கிடைத்ததால் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் பின்னர் வெகுகாலம் அது பற்றி, தான் குற்றவுணர்வில் ஆட்பட்டிருந்ததாகவும் ஒரு முறை என்னிடம் ஒரு பெண் சொன்னார். தனி இடம், பாலியல் உறவுகளின் தாக்கம் பற்றிய அறிவு இல்லாதது, இளம் வயதுக்கே உரிய ‘சுதந்திர’ உணர்வு இவையெல்லாம் தன்னைப் பலவீனப்படுத்தியதாகவும் எளிதில் சிக்கலுக்கு வயப்படும் தன்மையைக் கொடுத்ததாகவும் அந்தப் பெண் சொன்னார்.

சுதந்திரமா, அத்துமீறலா?

பெண்களுக்குப் பாலியல் பற்றிய அறிவு குறைவாக இருக்கிறது. சமூகக் கட்டமைப்பால் அது பற்றிப் பேசுவதற்கான சுதந்திரம்கூடத் தடைபட்டிருக்கிறது. அதனால், இதைப் பற்றிய வெளிப்படையான விவாதம் வேண்டும் என்கிறார்கள் சிலர்.

ஆனால், வேறு சிலவற்றையும் பார்க்க வேண்டும். சிறு வயதில் ஏதோவொரு வகையான பாலியல் சீண்டலுக்குப் பல பெண்கள் ஆளாகியிருக்கிறார்கள். இவர்களுக்குத் திருமணம், ஆணுடனான பாலியல் உறவு இவை பற்றிய பதற்றமும் வெறுப்பும் இருக்கின்றன. அவர்களைச் சரியான வழியில் ஆற்றுப்படுத்திப் பாலியல் உறவு பற்றிய ஆரோக்கியமான அணுகுமுறையைச் சொல்லித்தர வேண்டியுள்ளது.

சரியான புரிதல் இல்லாமல் யூடியூபில் வரக்கூடிய காட்சிகளைப் பார்த்துவிட்டு, 14 வயதுப் பெண்கூடப் பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுவதும் நடக்கிறது. இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? சுதந்திரம் பற்றிப் பேசும் நாம் உறவுகளில் இருக்க வேண்டிய பொறுப்புணர்வு குறித்து ஏன் பேச முயல்வதில்லை?

எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு நடுத்தர வயது ஆண், ‘உன் கன்னக்குழி பல்லாங்குழி’ என்றெல்லாம் குறுஞ்செய்தி அனுப்பினார். அவள் பதற்றமாகிவிட்டாள். இது பாலியல் சுதந்திரமா, அத்துமீறலா?

பாலியல் சுதந்திரத்துக்கும் அத்து மீறலுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாவிட்டால் நம் சுதந்திரம் என்பது இன்னொருவரின் வலியாக மாறிவிடும். நம் சுதந்திரத்தின் எல்லை பிறர் மூக்கின் நுனி வரைதான்.

ஆண்களும் பெண்களும் ஒருவர் மீது மற்றவருக்கான இச்சை, ஈர்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் பேசுகிறார்கள்; உறவுகொள்கிறார்கள். ஆனால், இதில் ஈடுபடும் இருவரும் எப்போதும் ஒரே மனநிலையில் இருக்க முடிகிறதா? திருமணம் தாண்டி இப்படி நிகழும் உறவுகளில் அது நிகழ்ந்தது பற்றிய சங்கடத்தைக் கடந்துவிட முடிகிறதா? மீண்டும் ஒருவர் மேல் மற்றவர் தன்னைத் திணித்துக்கொள்ளாமல் நடந்துகொள்ள முடிகிறதா?

சுயமரியாதை தேவை

பாலியல் பற்றிப் பேசுகிற சமூகம்தான் ஆரோக்கியமான சமூகம். ஆனால், அந்தப் பேச்சு வெறும் கிளுகிளுப்பு சம்பந்தப்பட்டதாக மட்டும் இருக்க முடியாது. பரஸ்பர மரியாதை, அன்பு, நம்பிக்கை போன்றவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும். உறவில் ஈடுபடும்முன் சம்பந்தப்பட்ட இருவருக்கும் அது பற்றிய புரிதலும் தெளிவும் சுயமரியாதையும் இருக்க வேண்டும்.

காதலிப்பவர் பாலியல் உறவுக்குக் கேட்டுவிட்ட பிறகு சம்மதிக்காவிட்டால் உறவு போய்விடுமோ என்ற பயத்தின் அடிப்படையில் நெருங்கக் கூடாது.

பாலியல் சுதந்திரம் கட்டற்றது அல்ல. கட்டுப்பாடானதும் அல்ல. அது பொறுப்புணர்வு அடிப்படையில் அணுகப்பட வேண்டியது.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com
 | ஓவியம்: அ. செல்வம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close