[X] Close

பாலியல் வழக்குகளில் விரைந்து நீதி வழங்குங்கள்... - ஒரு தந்தையின் விண்ணப்பம்


father-letter-to-court

  • kamadenu
  • Posted: 11 Mar, 2019 08:49 am
  • அ+ அ-

பெயரிலி

மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, நானும் என் மனைவியும் எங்களின் 11 வயது மகளை வீட்டில் விட்டுவிட்டு கடைக்குச் சென்றிருந்தோம். அது அடுக்ககம் என்பதாலும், சீக்கிரமே திரும்பிவிடுவோம் என்பதாலும் விட்டுச் சென்றோம். ஆனால், ஒரு சிறுமியைத் தனியாக வீட்டில் விட்டுச் செல்வது எவ்வளவு பெரிய ஆபத்து என அப்போது எங்களுக்குத் தெரியவில்லை.

கடையிலிருந்தபோது மகளிடமிருந்து அழைப்பு. “அப்பா, எதிர்த்த வீட்டு மாமா வீட்டுக்கு வந்துட்டுப் போனாருப்பா. எனக்குப் பயமா இருக்குப்பா” என்றாள். எனக்குக் கொஞ்சம் பொறிதட்டியது. அவசரமாக வீடு திரும்பினோம். குழந்தையின் கண்களில் பதைபதைப்பை, மிரட்சியைக் கண்டேன். “அவரை எப்படி உள்ளே விட்ட? நான்தான் யார் வந்தாலும் கதவைத் திறக்கக் கூடாது, கதவு நிலைச் சங்கிலியைப் பூட்டியபடிதான் பேசணும்னு சொல்லியிருந்தேனே?”

“அப்படித்தாம்பா பேசினேன். அவர், ஃப்ரிட்ஜ் அட்டைப் பெட்டிய வெச்சு நான் செஞ்சிருந்த வீட்டைக் கதவு இடுக்கு வழியாப் பார்த்துட்டு, ‘ஏய்.. அழகா அட்டை வீடு கட்டியிருக்கியே, எனக்குக் காட்டுறியா?’னு கேட்டார்”.

ஐயோ, என் குழந்தையின் கலையே அவளுக்கு வினையாய் வந்து முடிந்தது. அவள் கதவைத் திறந்துவிட்டாள். இதற்காகவே காத்திருந்த அவர் (வயது 47) “வீடு அழகா இருக்கேம்மா” என்று அட்டைப் பெட்டிக்குள் சென்று, அப்படி இப்படி விளையாடிவிட்டு, ‘‘நீ ரொம்ப அழகா இருக்கியே’’ என்றபடி கன்னத்தைக் கிள்ளி, என் குழந்தையைத் தனக்கு இரையாக்க முயற்சித்திருக்கிறார். அவரை நெட்டித் தள்ளிவிட்டு, “நான் இப்போ என் தாத்தா - பாட்டியிடம் போனில் கணக்கு வாய்பாடு ஒப்பிக்கணும்” என்று ஏதேதோ சொல்லித் தப்பித்த என் குழந்தை அவரை வெளியேற்றிய கையோடு என்னிடம் பேசியிருக்கிறாள். அவள் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல நடுநடுங்கிப்போனேன்.

உடனே காவல் துறை அவசர எண் 100-ஐத் தொடர்புகொண்டேன். செய்தியறிந்து ஒரு காவலர் வந்தார். அவரை அழைத்தார், “ஏய், அவங்க வீட்டில் உனக்கென்ன வேலை? இனிமே இப்படிச் செஞ்ச நடக்கறதே வேற” - இப்படிச் சொன்னவர் என்னைப் பார்த்து, “அவனை மிரட்டியாச்சு சார், இனிமே இப்படிப் பண்ண மாட்டான்” என ஒரு வகுப்பாசிரியர்போல சொல்லிச் சென்றார்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை எப்படிக் கையாள வேண்டும் என்ற அக்கறையற்ற அவரிடம் அதற்கு மேல் நான் என்ன பேசுவது? தியாகராய நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அவரும் அவரின் மனைவியும் கதறி அழுதார்கள். இதனால் என் மனைவியிடம் சிறு தடுமாற்றம். அங்கிருந்த உதவி ஆணையர் ‘இப்படிப்பட்ட மனிதர்களுக்கு இரக்கம் காட்டவே கூடாது, அவர்களை வெளியே உலவ விடக் கூடாது, அவர்கள் ஒரு பெண்ணுடன் மட்டும் நிறுத்திக்கொள்பவர்கள் அல்ல, சிறைத் தண்டனைதான் அவர்களைத் திருத்தும்’ என எங்களுக்குப் புரியவைத்தார்.

அவர் கைதுசெய்யப்பட்டார். ஆனால், அதிகாரிகளைப் போல அவர்களுக்குக் கீழ் பணிபுரியும் காவலர்களும் இத்தகைய அக்கறையோடு இல்லாமலிருப்பது நம்முடைய துயரம். என் மகளை நடுஇரவில் காவல் நிலையத்துக்கு வரச் சொன்னார்கள். சிறுமியரை எக்காரணம் கொண்டும் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரிக்கக் கூடாது என்று எனக்குச் சொல்லிக்கொடுத்த என் வழக்குரைஞரின் அறிவுரையை மீறி, காவலர்களின் கட்டாயத்தால் மகளை அழைத்துச் சென்றேன். அது சென்னையில் கொட்டித் தீர்த்த மழையின் பிரளயம் நடந்துகொண்டிருந்த நேரம். அந்நேரத்தில் என்னை, என் மனைவியை, எங்களுடன் சேர்த்து என் மகளையும் கூட்டிக்கொண்டு அந்த இரவு நேரத்தில் நீதிபதியின் வீட்டுக்குச் சென்றார்கள்.

புரிதல் இல்லாத மருத்துவத் துறை

நீதிபதி கதவைத் திறக்காது போகவே, நாங்கள் வீடு திரும்பலாம் என நினைத்தோம். அப்போதும் காவலர்கள் விடுவதாக இல்லை. சிறுமி என்றும் பாராமல் அவளை அலைக்கழித்தார்கள். அந்த நடுநிசியில் அவளுக்கு மருத்துவச் சோதனை செய்ய வேண்டும் என்று எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கட்டாந்தரையில் படுக்கவைத்தார்கள். விடிந்ததும் செவிலியர் என் மனைவியைப் பார்த்து, “என்னம்மா, அந்த செக்ஸ் கேஸுக்காக வந்திருக்கறது நீங்கதானேம்மா, வாங்க டாக்டர் கூப்பிடறாங்க” என்றார். பாலியல் பாதிப்புக்குள்ளான சிறுமியை எப்படி நடத்துவது என்று நம்முடைய மருத்துவ ஊழியர்களுக்கு யார் சொல்லிக்கொடுப்பது? பாலியல் குற்றங்கள் பற்றி நம் மக்களின் புரிதல் இவ்வளவுதானா?

சோதனை முடிந்து சைதாப்பேட்டை நீதிபதியிடம் வாக்குமூலம் தருவதற்காகவே என் குழந்தை மூன்று முறை அலைய வேண்டி வந்தது. பிறகு, மகளிர் நீதிமன்றத்தில் இன்னொரு வாக்குமூலம். நீதிபதி நடுநாயகமாய் உட்கார்ந்திருக்க, பாலியல் குற்றமிழைத்தவர் குற்றவாளிக் கூண்டில் நிற்க, வழக்கு நடத்தும் வழக்குரைஞர்கள் உடனிருக்க ஒரு குழந்தை வாக்குமூலம் அளிக்க வேண்டும். இது என்ன மாதிரி அணுகுமுறை? பெரும் மேடை முன்பு நின்றுகொண்டு ஒரு சிறுமியால் எப்படி அச்சமின்றிப் பேச முடியும்? பெரியவர்களுக்கே எத்தனையோ கூச்சம் இருக்குமே? அதுவும் சிறுமி எப்படி?

நீதிபதி ஒரு தனி அறையில் அமர்ந்து, பாதிக்கப்பட்ட குழந்தையுடன் உரையாடி வாக்குமூலம் பெறக் கூடாதா? சொல்லப்போனால், அந்தக் குழந்தைக்குத் தான் அளித்துக்கொண்டிருப்பது வாக்குமூலம் என்றே தெரியக் கூடாது. அப்படி ஒரு நடைமுறையை ஏன் ஏற்படுத்தக் கூடாது?

அடுத்ததாக எங்களுக்கு எழுந்த சிக்கல், எங்கள் குழந்தையைப் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியவரின் குடும்பமும் எங்கள் வீட்டின் அருகிலேயேதான் வசித்துவந்தது. அன்றாடம் அவர் எதிர்ப்படும் தருணங்களில் என் குழந்தை ஒடுங்கிப்போனாள். ஒருமுறை அவரின் மனைவியிடம் கேட்டேன், “நீங்கள் தயவுசெய்து வீடு மாற்றிக்கொள்ளுங்களேன்.” அவர் சொன்னார், “நீங்கள் வேண்டுமானால் மாறிக்கொள்ளுங்களேன்!”

சட்டமாக வேண்டிய தீர்ப்பு

இந்தச் சிக்கலை நான் வழக்குரைஞர்கள் மூலம் உயர் நீதிமன்றம் எடுத்துச் சென்றேன். ‘குழந்தை பள்ளிக்குச் செல்லும் நேரத்திலும் வீடு திரும்பும் நேரத்திலும் பள்ளி விடுமுறை நாட்களிலும் குற்றவாளி அங்கு இருக்கக் கூடாது’ என்று உத்தரவிட்டு, அவர் தனது வீட்டைக் காலிசெய்துகொள்ளும்படியான சூழலை உருவாக்கினார் நீதிபதி. அத்தீர்ப்பு போக்சோ சட்டத்தில் ஒரு பிரிவாகவே சேர்க்கப்பட வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

இப்படி ஒவ்வொன்றுக்கும் நீண்ட சட்டப் போராட்டம் நடத்த வேண்டி வந்தது. போக்சோ வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும். ஆனால், குற்றம் செய்தவர்களால் வழக்கை இழுத்தடிக்கவும் முடிகிறது. மூன்றரை ஆண்டுக் காலம் வழக்கை இழுத்தடித்தார்கள். நாங்கள் சாட்சி சொல்வதற்கு, குறுக்கு விசாரணைகளுக்கு என மீண்டும் மீண்டும் நீதிமன்றத்துக்கு அலைக்கழிக்கப்பட்டோம். கடைசியில், 2019 மார்ச் 5-ல் குறைந்தபட்சத் தண்டனையாக ஐந்தாண்டுச் சிறை அவருக்குக் கிடைத்தது.

என்னைப் போல் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் எதிர் பார்ப்பது குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை மட்டுல்ல, விரைவான நீதியும்கூட. பாலியல் வழக்கு களிலேனும் நீதித் துறை விரைவாகச் செயல்படுமா? என் வழக்கு மேல்முறையீட்டுக்குப் போனால், உயர் நீதிமன்றமேனும் அதை விரைந்து முடித்து வைக்குமா?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close