[X] Close

கோடைக்கு முன்பாகவே ஏக்கருக்கு ரூ.ஒரு லட்சம் லாபம் தந்த வெள்ளரிக்காய்


veyil

  • kamadenu
  • Posted: 10 Mar, 2019 09:30 am
  • அ+ அ-

 

ஜோதி ரவிசுகுமார்

ஓசூர் உழவர் சந்தையில் கோடை வெயிலுக்கு முன்பாகவே வெள்ளரிக்காய் விலை இருமடங்கு உயர்ந்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஓசூர் ஒன்றியத்தில் ஆவலப்பள்ளி, பூனப்பள்ளி, மத்தம் அக்ரஹாரம் மற்றும் தளி ஒன்றியத்தில் உள்ள குடிசாகனப்பள்ளி, கெலவரப் பள்ளி ஒன்றியத்தில் உள்ள இருதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ளரிக்காய் பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு கோடைக்கு முன்பாகவே வெயில் சுட்டெரிப்பதால் வெள்ளரிக்காய் தேவை அதிகரித்து, உழவர் சந்தையில் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.

இதுகுறித்து இருதுக் கோட்டையில் வெள்ளரிக்காய் பயிரிட்டுள்ள விவசாயி சந்திரப்பா கூறியதாவது:

சொட்டுநீர் பாசனம் மூலமாக ஒரு ஏக்கரில் ரூ.50 ஆயிரம் செலவு செய்து வெள்ளரிக்காய் பயிர் செய்ததில், 75 நாட்களில் அறுவடைக்கு தயாரானது. ஒரு மூட்டைக்கு 55 கிலோ என மொத்தம் 60 மூட்டைகள் வெள்ளரிக்காய் அறுவடை செய்யப்பட்டது. தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் சந்தையில் வெள்ளரிக்காய் விலை இரண்டு மடங்கு உயர்ந்து, ஒரு ஏக்கருக்கு ரூ.1லட்சம் லாபம் கிடைத்துள்ளது, என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

இதுகுறித்து ஓசூர் உழவர் சந்தை உதவி வேளாண்மை அலுவலர் தமிழ்வேந்தன் கூறியதாவது:

ஓசூர், பேரிகை, தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளரிக்காய் அதிகளவில் பயிரிடப்பட்டு உழவர் சந்தை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடைக்காலத்துக்கு முன்பாகவே வெள்ளரிக்காய் விலை இருமடங்கு உயர்வு கண்டுள்ளது.

இதற்கு நுகர்வோர்களின் தேவை அதிகரித்திருப்பதே காரணமாகும். உழவர் சந்தைக்கு ஒரு நாளைக்கு 3 டன் வரை வெள்ளரிக்காய் வரத்து உள்ளது. 10 நாட்களுக்கு முன்னர் ரூ. 8 முதல் ரூ.10 வரை விற்பனையான ஒரு கிலோ வெள்ளரிக்காய் தற்போது ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது. அதேபோல மொத்த விற்பனையில் ரூ.400-க்கு விற்பனையான ஒரு மூட்டை (55கிலோ) வெள்ளரிக்காய் தற்போது ரூ.800 முதல் ரூ.1000 வரை விலை உயர்ந்திருப்பதால் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close