[X] Close

நாசாவின் கருவிகளை சுமந்து செல்கிறது சந்திராயன்-2


2

  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 06:27 am
  • அ+ அ-

கடலில் முத்தெடுக்கலாம் என்று மூழ்கியவர்கள் வெறுங்கையுடன் திரும்பினால், கடலில் முத்து இல்லை என்று பொருள் இல்லை. நம்முடைய முயற்சி போதவில்லை என்றே அர்த்தம்’ என்பார் கவிஞர் கண்ணதாசன். என்னுடைய 16-வது  வயதில் அப்பாவின் தொழிலும், அவருடைய கனவும் என் கைக்கு மாறியது. அந்த இளம் வயதில் தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை. இரவு-பகல் பாராமல் உழைத்தும் ஏன் தொழிலில் வெற்றியடைய முடியவில்லை என்ற கேள்வி என்னை உலுக்கி எடுத்தது. அதற்கான காரணங்களை அடையாளம் கண்டு, தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தொடங்கிய பிறகு ஏறுமுகம்தான்” என்கிற `ஸ்கை' சுந்தரராஜுக்கு  பல்லடம் பகுதியின் முதல் ஏற்றுமதியாளர் என்ற சிறப்பு உண்டு.

ஒண்ணேகால் ரூபாயில் தொடங்கிய தொழில் பயணம் ஆண்டுக்கு ரூ.250 கோடி வருமானம் ஈட்டும்  நிறுவனமாக மாறியது. புகழ்பெற்ற வால்ட் டிஸ்னி நிறுவனத்தின், `நம்பிக்கைக்குரிய’ தொழில் நிறுவனங்களின் பட்டியலில் ஸ்கை இண்டர்நேஷனல்  நிறுவனம் இடம்பெற்றிருக்கிறது. சுந்தரராஜின் வெற்றிப் பாதை, எளிய குடும்பத்தில் பிறந்தவர்களும் வெற்றியை நோக்கிச் செல்ல முடியும் என்ற உறுதியை உண்டாக்கும் பாதை.

"அனுபவமும், கடும் உழைப்பும் மிகுந்த அப்பா, தொழிலில் முன்னெடுத்த முயற்சிகள் ஏன் சரிவைக் கொடுத்தன என்று சிந்தித்தபோது, ஒரு விஷயம் நன்றாகப் புரிந்தது.  பழைய இயந்திரங்களை வாங்கி தொழிலைத் தொடங்கியதால், அவை அடிக்கடி பழுதாகி, குறித்த நேரத்தில் நினைத்த இலக்கை  அடையமுடியாமல் போனது. வெளிநாட்டிலிருந்து நவீன இயந்திரங்களை வாங்கி, உலக நாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கனவில் நான் இருந்தபோது, அந்த நான்கு பழைய இயந்திரங்களே சொந்தமாக இருந்தன. அவற்றை வைத்துக்கொண்டு கடனை விரைவாக அடைக்க வேண்டும் என்பதே முதல் இலக்கு.

குடும்பமே தறி ஓட்டியது!

ஊரே தூங்கும்போது, எங்கள் வீட்டில் மட்டும் தறி ஓட்டும் சப்தம் இரவெல்லாம் கேட்கும். வேலைக்கு ஆட்களைப் போடாமல், எங்கள் ஒட்டுமொத்த குடும்பமே  தறி ஓட்டியது.

கடனை அடைப்பதற்கே ஐந்து ஆண்டுகள் உழைக்க வேண்டியிருந்தது. தரமான நூல் வாங்குவதில் தொடங்கி, நெய்த துணிகளை விற்பனை செய்கிறவரை அனைத்து வேலைகளையும் செய்ததில், டெக்ஸ்டைல் தொழிலின் அனைத்து நுட்பங்களையும் கற்றுத் தேர்ந்தேன்.

'இதுவரை கடன்காரர்களுக்காக உழைத்தோம். இனி நமக்காக உழைப்போம்’ என்கிற நினைப்பே, புத்துணர்வை அளித்தது. பறக்க கற்றுக்கொண்ட பிறகு, வானமே எல்லையாக இருந்தது. கடன் முடிந்த பிறகு, தொழில் வளர்ச்சி மட்டுமே ஒரே குறிக்கோள்.  இடைவிடாத உழைப்பு, சொந்த கிராமத்தில் பல குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை  உருவாக்கித் தரும் அளவுக்கு உயர்த்தியது. செலவைக் குறைத்து, வருமானத்தைப் பெருக்க என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பது  குறித்தே எப்போதும் யோசிப்பேன்.

இடைத் தரகர்களை தவிர்த்தால் இரட்டிப்பு லாபம்!

எல்லா தொழிலிலும் இடைத்தரகர்கள் என்ற ஒரு பிரிவினர் இருப்பார்கள். விவசாயிகள் இன்று தலைநிமிர முடியாமல் இருப்பதற்கு இடையில் நிறைய பேர் லாபத்தை பறித்துக் கொள்வதுதான்காரணம். அப்பா உற்பத்தி செய்த வேட்டியை, மூட்டைக் கட்டிக்கொண்டுபோய் ரயில் நிலையத்தில் நேரடியாக விற்றபோது, இரட்டிப்பு லாபம் கிடைப்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

 

ஈரோட்டில் மஞ்சள் சந்தையைப் போலவே, ஜவுளி சந்தையும் இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு புதன்கிழமையும் ஈரோடு ஜவுளி சந்தைக்கு வடஇந்தியாவில் இருந்தெல்லாம் வியாபாரிகள் வருவார்கள். ஜவுளி உற்பத்தியாகும் இடத்தில் நேரடியாக கொள்முதல் செய்து, சந்தையில் விற்பனை செய்வார்கள்.

திருப்பூரிலிருந்து ஒரு மணிநேர பயணத்தில் உள்ள ஈரோட்டில் வியாபாரம் செய்ய, இன்னொருவரை எதற்காக நம்பியிருக்க வேண்டுமெனத் தோன்றியது. அதனால், நானே ஒவ்வொரு வாரமும் நேரடியாக ஜவுளி சந்தைக்கு சென்று மார்க்கெட்டிங் செய்தேன். சந்தைக்கு வந்து ஆர்டர் எடுப்பவர்கள், அதை எங்கே விற்பனை செய்கிறார்கள் என்று தேடிப்போனேன்.

பெரும்பாலானவர்கள் மும்பையில் இருக்கும் பெரிய வியாபரிகளிடம் நல்ல விலைக்கு விற்பனை செய்தனர்.  நான் ஒரு லாபம் வைக்க, என்னிடம் வாங்குபவர் இன்னொரு லாபம் வைத்து விற்பனை செய்தார். மும்பை வியாபாரிக்கு நானே நேரடியாக பொருளை வழங்கியபோது, ஒப்பீட்டளவில் குறைந்த விலைக்குத் தரமுடிந்தது. வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையில் நிறையபேர் இருப்பதை தவிர்க்கத் தொடங்கிய பிறகு, எதிர்பார்த்ததைவிட நல்ல வளர்ச்சி கிடைத்தது.

ஊர் ஊராக பயணம்...

இந்த ரகசியம் தெரிந்ததும், பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஊர்ஊராக அலையத் தொடங்கினேன். தயக்கமோ, பயமோ இல்லாமல், மொழி தெரியாத மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணித்தேன்.

தொழிலில் கிடைக்கிற ஒவ்வொரு ரூபாய் லாபத்தையும், தொழில் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்துவது என்பதில் கவனமாக இருந்தேன். டெக்ஸ்டைல் துறையில் இருப்பவர்கள் கடன் வாங்கியாவது கார் வாங்கிவிடுவது வழக்கம். தொழிலாளியாக இருந்து முதலாளியாக மாறியபிறகும்,  சைக்கிளே என்னுடைய  வாகனம்.

எஸ்போர்ட்டர் பராக்...பராக்...

என்னிடம் `ஜாப் ஒர்க்' வாங்கி தொழில் செய்பவர்கள்கூட புல்லட் வைத்திருப்பார்கள். ஒரு பழைய சைக்கிளை வைத்துக்கொண்டு,  எப்படியாவது ‘எக்ஸ்போர்ட் பிசினஸ்’ செய்ய வேண்டும் என்று முனைப்பாக இருந்த என்னைக் காணும்போதெல்லாம், ‘எக்ஸ்போர்ட்டர் வருகிறார், பராக். பராக்’ என்று சிலர் கேலி செய்வார்கள். எனக்கு கோபமே வராது. எதிர்மறை விஷயங்களை நேர்மறையாக மாற்றிக் கொண்டால், தொழிலில் வெற்றிபெற முடியும் என்று முழுமையாக  நம்பினேன்.

அப்போது, திருப்பூரில் ஏற்றுமதி வியாபாரம் ஆரம்பநிலையில் இருந்தது. மும்பை வியாபாரிகளைத் தவிர, மற்றவர்கள் சுலபத்தில் ஏற்றுமதி தொழில் செய்ய முடியாத காலம் அது. புதிய போட்டியாளர்களை ஆள்வைத்து மிரட்டுகிற ‘தாதா’ கலாச்சாரம் கொடிகட்டிப்  பறந்தது. `நினைத்த காரியத்தை சாதிக்க வேண்டும்’ என்ற தீவிர முனைப்பில், மும்பை சென்று தடைகளைக் கடந்து ‘எக்ஸ்போர்ட் லைசென்ஸ்’ வாங்கி வெற்றிகரமாக ஏற்றுமதி செய்யத் தொடங்கினேன். தொழிலை கிராமத்தில் இருந்து திருப்பூருக்கு மாற்றினேன்.

அருள் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்!

`வானமே எல்லை' என்ற எண்ணத்தில் ‘ஸ்கை இன்டர்நேஷனல்’ என்று எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்குப் பெயர் வைத்தேன். இப்போது எங்கள் முகவரியாக இருக்கும் அருள் நகர் பகுதி,  அப்போது ஆள் அரவமற்றப் பகுதியாக இருந்தது. `அருள் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்’ என்று நானே பெயர் சூட்டினேன். அரசாங்கம் தொடங்குகிற தொழில்பேட்டைக்குதான் இப்படி பெயர் வைப்பார்கள். ‘எதையும் உயர்வாக சிந்தித்து, நிறைவாக செயல்படுவோம்’ என்ற மனநிலையில் இயங்கினேன்.

 

இந்தி டியூஷன்!

ஏற்றுமதி தொழிலை வட இந்தியர்களுடன் இணைந்தே செய்தாகவேண்டும். ஆங்கிலம் தெரியாமல்கூட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். ஆனால், இந்தி தெரியாததால், ஏமாற்றப்பட்டு, தொழிலில் நஷ்டம் அடைந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். அதனால், திருமணத்துக்குப் பிறகு இந்தி டியூஷன் வகுப்பில் சேர்ந்து, இந்தி மொழியைக் கற்றுக்கொண்டேன்.

காட்டன் முதல் கார்மென்ட்ஸ் வரை உற்பத்தி செய்து, உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை தொழிலை விரிவாக்க முடிந்தது. மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ், ஹோம் டெக்ஸ்டைல், ரெடிமேட் கார்மென்ட்ஸ் ஆகிய மூன்று துறைகளிலும் இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு உற்பத்தி செய்து அளிக்கிறோம்.

அமெரிக்கா நேரப்படி, நள்ளிரவில் முழித்திருக்க வேண்டும். ஐரோப்பிய, ஆசிய நாடுகளின்படி அதிகாலை முழித்திருக்க வேண்டும். உள்ளூர் ஆட்களை வைத்து வேலைவாங்க இந்திய நேரப்படி இயங்க வேண்டும். இப்படி 24 மணி நேரமும் வேலை செய்யத் தயாராக இருப்பேன். தொழிலில் இறங்குமுகம் இருந்தால், ‘இன்றைக்கு இப்படி இருக்கிறது. என்றைக்கும் இப்படி இருக்காது’ என்று கருதி, முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்துவேன். ஊழியர்களை மதிப்புடன் நடத்தினேன். நிறுவனத்தை குடும்பமாகவும், தொழிலாளர்களை அதன் அங்கத்தினர்களாகவும் கருதியதால், அர்ப்பணிப்பு மிக்கவர்கள் என்னுடன் பணிபுரிந்தார்கள்.

கல்வி கற்க உதவி...

`வானம்' என்ற அறக்கட்டளையை உருவாக்கி, கிடைக்கிற நிகர  இலாபத்தில் 10 சதவீதம்  தொகையை, தொழிலாளர் வளர்ச்சிக்குப்  பயன்படுத்தினோம். எங்களிடம் பணியாற்றினாலும், படிக்க வேண்டும் என்று ஆர்வம் இருப்பவர்களின் கல்விச் செலவுகளை முழுமையாக ஏற்று, படிக்க வைத்திருக்கிறோம். இதுவரை, மருத்துவர், இன்ஜினீயர், ஆசிரியர்கள் என ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கி, அவர்கள் வாழ்வில் மாற்றம் கொண்டுவந்ததில் பெரும் மனநிறைவு ஏற்பட்டது.

`பிசினஸ் செய்ய என்ன வேண்டும்?' என்று கேட்டால், முதலீடு, அனுபவம், மார்க்கெட்டிங் திறன் போன்ற பதில்களையே சொல்வார்கள். ஆனால், எப்படி தொழில் செய்ய வேண்டும் என்பதற்கான வணிகக் கொள்கையில் பலருக்கும் தெளிவு இருக்காது. அதுதான்,  பலரும் சரிவை சந்திக்கிற இடம். பேராசையுடன் என்றும் தொழில் செய்யக்கூடாது என்பதும், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டுமென்பதுமே என்னுடைய தொழில் கொள்கைகள்.  இதை எதற்காகவும், எப்போதும் நான் விட்டுக் கொடுத்ததே இல்லை.

மும்பையில் ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் செய்கிற `வெல்ஸ்பன்’ என்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனத்துக்கு துணி  உற்பத்தி செய்துகொடுக்க ஒப்பந்தம் மேற்கொண்டோம். அதன் பிறகு,  மூலப் பொருட்களின் விலை இரண்டு மடங்காக  அதிகரித்தது. அதில் எனக்கு ரூ.1 கோடி வரை  நஷ்டம் ஏற்பட்ட நிலையிலும், சொன்னபடி, சொன்ன தரத்தில் அதே விலைக்கு பொருளை ஒப்படைத்தேன். ஒப்பீட்டளவில் நான் மிகச் சிறிய நிறுவனம். ஆனால், சொன்ன வார்த்தையைக் காப்பாற்றினேன் என்பதால், அதன் பிறகு அந்த நிறுவனத்தின் பெரிய ஆர்டர்கள் எல்லாம் எனக்கே கிடைத்தன. சில மாதங்களில் அந்த இழப்பைக் கடந்து, லாபம் ஈட்ட முடிந்தது. என்னுடைய தொழில் கொள்கைக்கு கிடைத்த பரிசு அது. இதுபோன்ற ஏராளமான அனுபவங்கள் உண்டு.

கொள்கை உறுதியும்...நீடித்த வளர்ச்சியும்...

கொள்கையில் உறுதியாக இருப்பதால், குறுகிய காலத்தில் பெரிய வளர்ச்சியை அடையமுடியாமல் போகலாம்.  ஆனால், நீடித்த, நிலையான வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். அதானால், அடையக்கூடிய இலக்குகளை நோக்கியே பயணிப்பேன்.

திருமணத்துக்குப் பிறகு என்னுடைய கவனம் முழுவதும், தொழில் சார்ந்தே இயங்கியது. தடுமாற்றம் இல்லாமல், மன உறுதியுடன்  தொழில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆன்ம பலத்தை என் குடும்பம் வழங்கியது. `நீங்க எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்’ என்று முழுமையாக நம்பிய மனைவிதான் என்னை எப்போதும் இயக்கும் ஆதார சக்தி.  குறுகிய காலத்தில் கிடைக்கிற வெற்றியோ, குறுக்கு வழியில் வருகிற வெற்றியோ வேண்டாம் என்ற மனத்தெளிவு குடும்பத்தினரிடம் இருந்துவிட்டால், ஒரு மனிதன் தவறு செய்யமாட்டான்.

நான்கு புது தறி இயந்திரங்களை விலைக்கு வாங்கமுடியாத நிலையில், பெரும் கனவுடன் தொழில் செய்ய முனைந்த என் தந்தை,  ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிற ‘ஸ்கை இன்டர்நேஷனல்’ நிறுவனத்தை அவரது  கைகளால் திறந்துவைத்தபோது, என்னுடைய தொழில் வெற்றி முழுமை பெற்றுவிட்டதாகக்  கருதினேன்.

பணத் தேவைகளைக் கடந்து,  மனத் தேடல்களுக்கான ஆர்வம் அதிகரித்தது.   வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை பயிற்சியை மேற்கொண்டபிறகு,  சிந்தனையிலும், செயலிலும் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தன. எஸ்.கே.மயிலானந்தனை முன்மாதிரியாகக் கொண்டு, 60 வயதுக்குப் பிறகு நிறுவனத்தின் அன்றாடப் பணிகளில் இருந்து விலகினேன். ‘ஊனுள்ள விதை முளைக்கும்’ என்று என் தந்தை எனக்குச் சொன்னதை, நான் என் மகனிடம் சொல்லி நிறுவனத்தின் பொறுப்புகளை ஒப்படைத்தேன்.

வனம் இந்தியா ஃபவுண்டேஷன்...

திருப்பூரில் அறிவுத்திருக்கோயில் உருவாக்கி, மகரிஷியின் மனவளக்கலை பயிற்சிகளை  அனைவருக்கும் கொண்டுசேர்க்க என்னால் முடிந்த பங்களிப்பைச் செய்தேன். பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், தனது 90-வது பிறந்த நாளைக் கொண்டாடியவர்களிடம், `மரங்களை வளர்த்து பசுமையை மலரச் செய்யுங்கள்’ என்று கூறினார்.

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலைப் பற்றி அதிகம் கவலைப்படாத நிலப் பகுதியைச் சேர்ந்தவன் என்ற முறையில், அது மிக முக்கியமானப் பணியாக என் மனதுக்குத் தோன்றியது. அடுத்த தலைமுறையினருக்கு நல்ல சுற்றுச்சூழலே நிரந்தர சொத்து என்ற சிந்தனை கொண்ட அனைவரையும் இணைத்து,  2015-ல் ‘வனம் இந்தியா ஃபவுண்டேஷன்’ அமைப்பைத்  தொடங்கினோம்.

தொழில் செய்யும்போது எத்தகைய முனைப்புடன் ஈடுபடுவோமோ, அதேபோல, பசுமைத் தொண்டிலும் வனம் அமைப்பின் செயலராக  முனைப்புடன் பணியாற்றுகிறேன். மரம் நடுதல், பராமரித்தல், நீர்வள ஆதாரத்தை  மேம்படுத்துதல், கழிவுப் பொருள் மேலாண்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவையே வனம் அமைப்பின் நோக்கம். இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை, வனம் சார்பில் நட்டுப் பராமரிக்கிறோம். ஆண்டுக்கு ஒரு லட்சம் மரங்களையாவது வளர்த்துவிட வேண்டும் என்பதே அமைப்பின் லட்சியம். இதை நிறைவேற்ற நூற்றுக்கணக்கான அறங்காவலர்களும், மரங்காவலர்களும் தங்களை இந்த சமுதாயப் பணியில் இணைத்துக்கொண்டிருக்கிறார்கள்" என்று நிறைவுடன் சொல்லும் சுந்தரராஜ், பசுமை சீருடையில், மரக்கன்றுகளுடன் வலம் வருகிறார். பசுமையை மலரச் செய்யும் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுகிறார்.  அவரது  தொழில் வெற்றியைவிட, பசுமைத் தொண்டின் வெற்றியே காலத்தால் நிலைத்து நிற்கும்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close