[X] Close

இந்திய அரசமைப்பின் மறுவரையறையாளர் அண்ணா!


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 08:04 am
  • அ+ அ-

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று எண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்; வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார் என்று சுதந்திரத்துக்கு முன்னரே பெண்மையைப் போற்றிய பாரதி, பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா, பெண்மை வெல்கெவென்று கூத்திடுவோமடா என்று அறைகூவினார். தற்போதைய சூழலில், பெண்மை வாழ்கவென்று கூறுவதைக் காட்டிலும், வெல்கவென்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும்.

கடினமாக வேலைகளைச் செய்ய பெண்கள் லாயக்கற்றவர்கள் என்ற உளுத்துப்போன வாதங்களையெல்லாம் தகர்த்து எறிந்துவிட்டு, ஆண்கள் செய்யக்கூடிய அத்தனை வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார்கள் பெண்கள். ராணுவம், விண்வெளிப் பயணம் என கடினமான விஷயங்களையும் எளிதில் கைப்பற்றிவிட்டார்கள் நவீன மங்கையர். ஆனாலும், பெண்களை வெறும் பாலினப் பொருளாகக் கருதும் ஒரு சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களால்தான், பாலியல் பலாத்காரம், சித்ரவதைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள் பெண்கள். ஆனால், இதையெல்லாம் மீறி இன்று அத்தனை துறைகளிலும் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள்.

விவசாயம், தொழில், கல்வி, மருத்துவம், அரசுப் பணி என அத்தனைப் பிரிவுகளிலும் சாதனைபடைத்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள். கொஞ்சம் தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்தால்போதும். சவால்கள் நிறைந்த சமூகத்தை எளிதில் எதிர்கொண்டு, சிகரத்தை எட்டிப்பிடிக்கலாம் என்கிறார்கள் பல் துறைகளிலும் வென்ற மங்கையர்.

இந்த சூழலில், உலகமெங்கும் நேற்று சர்வதேச மகளிர் தின விழா விமரிசையாய் கொண்டாடப்பட்டது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கோலாகலமாய் கொண்டாடப்பட்டு, சாதனை மகளிர் கௌரவிக்கப்பட்டனர்.

சாதனையாளர்களுக்கு விருது

கோவை அவிநாசிலிங்கம் மகளிர் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை கங்கா மகளிர் மற்றும் குழந்தைகள் மையத்தின் துறைத் தலைவர் டாக்டர் சுமா நடராஜன், சின்மயா ஊரக மேம்பாட்டு நிறுவன இயக்குநர் டாக்டர் மீரா கிருஷ்ணா, சென்னையைச் சேர்ந்த சிலம்பம் மற்றும் கூடைப்பந்துப் பயிற்சியாளர் என்.அலமேலு, தேசிய மாணவர் படையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து, குடியரசு தின முகாமில் துப்பாக்கிச் சுடுதலில் சாதித்த கல்லூரி மாணவி வி.சுபஸ்ரீ ஆகியோரை, பல்கலைக்கழக வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார், துணைவேந்தர் பிரேமாவதி விஜயன், பதிவாளர் எஸ்.கௌசல்யா உள்ளிட்டோர் விருது வழங்கி கௌரவித்தனர்.இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில், கோவை பூ மார்க்கெட் அருகேயுள்ள ஜீவா இல்லத்தில், மாவட்டத் தலைவர் கே.சுமதி, செயலர் எம்.நிர்மலா, துணைத் தலைவர் ஏ.அமிர்தம் உள்ளிட்டோர் மாதர் சம்மேளனக் கொடியேற்றிவைத்தனர்.

கோவை மத்திய சிறையில்...

கோவை சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளை, எஸ்.எஸ்.வி.எம். பள்ளி சார்பில் மத்திய சிறையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், நாடகம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், ஓவியம், கோலம், கைவினைப்  பொருட்கள் உருவாக்குதல்  உள்ளிட்ட  போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், `வாழ்க்கை மாற்றத்துக்கான எழுச்சி`  என்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தில், பல்வேறு  தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டன. சிறையில் கைதிகளை  கவனித்து வரும் பெண் வார்டன்களின்  பணிகளைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், கோவை மண்டல சிறைத் துறை டிஐஜி ஆர்.அறிவுடைநம்பி, மத்திய சிறை மகளிர் சிறப்புப் பிரிவு கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜ்,  துணை சிறையாளர் எஸ்.தரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  ஏற்பாடுகளை, சந்திரன்ஸ் யுவா அறக்கட்டளை இயக்குநர்கள் சிவநேசன், சசிகலா சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

காகிதத்தில் மட்டும் இருந்தால் போதுமா?

இந்திய தொழில் கூட்டமைப்பின் மகளிர் பிரிவு சார்பில் கோவையில் நடைபெற்ற விழாவில், பிரபல மூத்த வழக்கறிஞரும், பெண்கள் உரிமைக்காகப் போராடுபவருமான சுதா ராமலிங்கம் பங்கேற்றார். அவர் பேசும்போது, “இந்திய  அரசியல் அமைப்பில் பெண்களுக்காக பல்வேறு உரிமைகள், பெண்கள் முன்னேற்றத்துக்காக சிறப்புச்  சட்டங்கள் இருந்தாலும், பெண்களின் முன்னேற்றம் என்பது வெறும் காகிதத்தில் மட்டும்தான் உள்ளது.

ஆட்சியில் முக்கிய அமைச்சர்  பதவிகளை பெண்களுக்கு வழங்குவதில்லை. எனவே, அரசிலும், அரசியலிலும் பெண்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்க வேண்டும். சரிநிகர்ச் சமமாக பெண்களை மதிக்க வேண்டும். ஆண்களுக்கு நிகரான சம்பளம் வழங்க வேண்டும். இந்த உரிமைகளைப் பெற, பெண்கள் இணைந்து போராட வேண்டும். தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். பெண் சிசுக்கொலை உள்ளிட்ட பிற்போக்குத்தனங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்” என்றார்.

சர்வதேச பெண்கள் விருது பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்  மாயா மகாஜன், வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த சசிரேகா வெங்கடேஷ், இந்திய பெண்கள் கூட்டமைப்பு மாநிலத் துணைத் தலைவரும், ஸ்ரீ கிருஷ்ணா கல்விக்   குழுமங்களின் நிர்வாக அறங்காவலருமான எஸ்.மலர்விழி,  இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை கிளைத்  தலைவர் வரதராஜன், மகளிர் பிரிவுத் தலைவர் சங்கீதா அஸ்வின், துணைத் தலைவர் ஸ்ரீவித்யா லட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பெண் மெக்கானிக்குக்கு கௌரவம்

திருப்பூர் ராயபுரத்தைச் சேர்ந்தவர் பானுமதி(55). பெண் மெக்கானிக். அவிநாசி அருகேயுள்ள  கருவலூர் அரச்சப்பம்பாளையத்தை சேர்ந்த இவர் திருமணமானவுடன், கணவர் மோகனுடன் திருப்பூரில் குடியேறினார். ஆரம்பத்தில் மெக்கானிக் கணவருக்கு உதவியாகப் பணிபுரியத் தொடங்கிய அவர், கொஞ்சம் கொஞ்சமாக மெக்கானிக்காக மாறிவிட்டார்.  ஏறத்தாழ 24 ஆண்டுகளாக இருசக்கர வாகன மெக்கானிக்காகப் பணிபுரியும் இவர், தற்போது அனைத்து இருசக்கர வாகனங்களையும் பழுதுநீக்குகறார். மாவட்ட ஆட்சியர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள பானுமதிக்கு, சர்வதேச ஜூனியர் சேம்பர் அமைப்பின் திருப்பூர் கிளைத் தலைவர் சாந்தி மணிவண்ணன், செயலர் சூர்யா உதயகுமார் உள்ளிட்டோர் நேற்று விருதை வழங்கி கெளரவித்தனர்.

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

சேலத்தில் மாநகர காவல் ஆணையர் சங்கர் தலைமையில், பெண் காவலர்கள் ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். கோட்டை மைதானத்தில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக லைன்மேடு காவலர் சமுதாயக் கூடத்தில் நிறைவடைந்தது.

சேலம் சாரதா கல்லூரியில் நடைபெற்ற, பெண்கள் உரிமை சார்ந்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர், முதன்மை சார்பு நீதிபதி தாண்டவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பெண்களுக் கான உரிமை சார்ந்த சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விளக்கினர். இதில், மாவட்ட நுகர்வோர் கூட்டமைப்புத் தலைவர் அசோகன் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், துப்புரவுப் பணியாளர்கள், ஆட்சியர் அலுவலக ஊழியர்களுடன் கேக் வெட்டி விழாவைக் கொண்டாடினார் ஆட்சியர் ரோஹிணி.

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் நடந்த  விழாவில், சம்பத் நகர் அரசு நூலகர்  எம்.ஷீலா, கோபி தன்னார்வத் தொண்டு நிறுவனத் தலைவி பி.அன்புசெல்வி, அந்தியூர் நகலூர் கொண்டாம்பாளையம் முன்னோடி விவசாயி பி.தமிழ்செல்வி ஆகியோருக்கு ‘கல்கி 2019’ விருது வழங்கப்பட்டது.

இதேபோல, ஈரோடு வசுகரா மனநல ஆலோசனை மையப் பொருளாளர் ஏ. சாந்தி  அசோக், இமைகள் அறக்கட்டளை நிறுவனர் ஏ.பூங்கொடி, கே.கே.நகர் தேசிய பாம்புக்கடி தடுப்பு நிறுவன இயக்குநர் ஏ.யு.ஷியாமளா மாதவி ஆகியோருக்கும் கல்லூரி  அறங்காவலர் பானுமதி சண்முகன் விருது வழங்கினார். ஈரோடு பெரியார் நகரில்,  மீனாட்சி கலைப் பள்ளி சார்பில் பெண்கள் வரைந்த ஓவியங்கள் கண்காட்சி நடைபெற்றது.

நடனமாடிய நீலகிரி ஆட்சியர்!

நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவை கேக் வெட்டித் தொடங்கிவைத்தார் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட்திவ்யா.

மேலும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வென்ற பெண்களுக்கு ஆட்சியர் பரிசு வழங்கினார்.

உதகை தாவரவியல் பூங்காவில் நடந்த மகளிர் தின விழாவில், பெண்களுடன் நடனமாடிய நீலகிரி ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, எம்.பி. கே.ஆர்.அர்ஜுனன் உள்ளிட்டோர். படம்: ஆர்.டி.சிவசங்கர்

 வீட்டையும், சுற்றுப்புறப் பகுதிகளையும் தூய்மையாக வைத்துக் கொள்வது, பிளாஸ்டிக்  உபயோகத்தை நிறுத்துவது என ஆட்சியர் தலைமையில்,  பெண்கள் உறுதியேற்றனர்.  தொடர்ந்து, மகளிருடன் நடனமாடி மகிழ்ந்தார் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா. இதில், எம்.பி. கே.ஆர்.அர்ஜுனன், காவல் கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

பேருந்தில் திருடியவரை பிடித்துக் கொடுத்த பிரேமா!

கோவை ஒண்டிப்புதூரில் 24 மணி நேரமும் செயல்படும் ஆவின் பாலகத்தில் பணியாற்றுகிறார் பிரேமா(29). அதிகாலை 4 மணிக்கு பாலகம் வரும் அவர், இரவு 10 மணிக்கு கடையை மூடிச் செல்கிறார். “பூர்வீகம் மதுரை. பெற்றோர் ராஜகோபால்-பாண்டியம்மாள் கூலி வேலைக்குப் போனாங்க. பிழைப்புக்காக சென்னைக்கு மாறினோம். 8-வது வரைக்கும் படிச்சிட்டு, வேலைக்குப் போனேன். 2005-ல மாமா பெருமாளைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டு, கோயம்புத்தூருக்கு வந்தேன். இங்க லேத் பட்டறையில வேலைக்குப் போனேன். லேத் ஓட்டறது, கிரைண்டிங் செய்யறதுனு எல்லா வேலையும் செஞ்சேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஆவின் பாலகத்துல வேலைக்கு சேர்ந்தேன். ஒரு நாள் வேலை முடிஞ்சி வீட்டுக்கு பஸ்ஸுல போனப்ப, ஒரு பாட்டியோட பையில இருந்த பணத்தை, ஒருத்தரு எடுத்தாரு. சில பேரு அதைப் பாத்தும், பாக்காத மாதிரி இருந்துட்டாங்க. ஆனா, எனக்கு மனசு கேக்கலை. ஏன், பாட்டியோட பணத்தை எடுத்தீங்கனு கேட்டப்ப, உன்னோட வேலையைப் பாருனு அந்தாளு சொன்னாரு. உடனே, அந்த ஆளைப் பிடிச்சு அடிச்சி, செக்போஸ்ட்டுல நின்னுக்கிட்டிருந்த போலீஸ்காரங்க கிட்ட ஒப்படைச்சேன். அடுத்த நாள், பாட்டி, குடும்பத்தோட வந்து நன்றி சொன்னாங்க.

ஆவின் பாலகம் ஓனரு கோபாலகிருஷ்ணன் சார், எனக்கு தைரியம் கொடுப்பாரு. கடையை என்னை நம்பி விட்டிட்டு, வெளிநாட்டுக்கெல்லாம்கூட போவாரு. ஒரு நாள், கல்யாண மண்டபத்துக்கு காலையில 3 மணிக்கு பால் சப்ளை செய்ய ஆர்டர் வந்தது. அந்த நேரத்துல ஆட்டோ பிடிச்சா பாதுகாப்பா இருக்காதுனு, என்னோட டூவீலர்ல 3 முறை டிரிப் அடிச்சி, பால் சப்ளை செஞ்சேன்.

பெண்களுக்கு தைரியமும், நம்பிக்கையும் ரொம்ப அவசியம். `நீ சாப்பிடத்தான் லாயக்கு, வேற எதுக்கும் லாயக்கில்ல`னு என்னை சொன்னவங்க மத்தியில,  அம்மாவும், கணவரும் ரொம்ப ஊக்குவிச்சாங்க. எந்த நேரமும் நான் வேலைக்குப் போக, தயக்கமில்லா, நம்பிக்கையோட அனுப்பிவெச்சாங்க. ராத்திரி 11, 12 மணிக்கு யாராவது பால் கேட்டாக்கூட நான் கடைக்கு வந்து, பால் வித்திருக்கேன். அதனால, தைரியமா இருங்க, தன்னம்பிக்கையோட செயல்படுங்க. இதுதான் என்னைய மாதிரி பெண்களுக்கு என்னோட வேண்டுகோள்” என்றார்  பிரேமா உறுதியுடன்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close