[X] Close

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பணிகள் என்னென்ன?


  • kamadenu
  • Posted: 25 Mar, 2019 07:49 am
  • அ+ அ-

தான்பட்ட கஷ்டங்களை தன்னுடைய பிள்ளை படக்கூடாது என்றே ஒரு தந்தை நினைப்பார். ஆனால், என்னுடைய தந்தை, ‘நீ என்னைவிட அதிகமாக கஷ்டங்களைச் சந்திக்க வேண்டும் என்று வாழ்த்துவார். உறுதிமிக்க ஒரு மனிதன் முன்னால் தோல்வி மண்டியிடும். மன உறுதிமிக்க மனிதன், அவன் சந்தித்த கஷ்டங்களில் இருந்தே உருவாகிறான். அதனால் கஷ்டங்களைக் கண்டு அஞ்சாதே’ என்று சொல்வார் என் தந்தை வேலுச்சாமி. 

வாழ்வில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். அதற்கு ஒரேயொரு தகுதி மட்டும் வேண்டும். வெற்றியைத் தேடிப் பயணப்படுகிறவர்கள், முதலில் சந்திப்பது  அவமானமாகவே இருக்கும். அதற்குப் பயந்து முயற்சி செய்வதில் இருந்து ஒதுங்கிவிட்டால், வெற்றியும் நம்மைவிட்டு ஒதுங்கிப்போய்விடும். தன் வாழ்வில் சந்தித்த ஒரு சிறிய அவமானத்தை மனதில் ஏந்தி, வாழ்நாள் முழுவதும் வெறித்தனமாக உழைத்த ஒரு தந்தைக்குப் பிள்ளையாக பிறந்ததே என்னுடைய பெரும்பேறு” என்கிற ‘ஸ்கை இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் தலைவர் ‘ஸ்கை’ சுந்தரராஜ், சாமிக்கு முடிந்து வைத்திருந்த வெறும் ஒண்ணேகால் ரூபாய் முதலீட்டில் தொழில்தொடங்கி, 100 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்தவர் என்றால் நம்பமுடிகிறதா?

‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்றார் பாரதியார். ‘தொழிலும், தொண்டும் எனதிரு கண்கள்’ என்கிறார் சுந்தரராஜன். திருப்பூர் மாவட்டத்தில் வெற்றிகரமான தொழிலதிபர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். ஆனால், தொழிலைப் போலவே, தொண்டு செய்வதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் என்பதே  இவரது  தனித்துவம்.

பல்லடம் பகுதியில் இயங்கிவரும் ‘வனம் இந்தியா ஃபவுண்டேஷன்’ அமைப்பின் செயலராக, நூற்றுக்கணக்கான அறங்காவலர்களையும், மரங்காவலர்களையும் ஒருங்கிணைத்து வியக்கத்தக்க ‘பசுமைப் பணிகளை’ செய்துவருகிற ஸ்கை சுந்தரராஜனின் வாழ்க்கைப் அனுபவங்கள், அனைவருக்கும் பயனளிக்கிற வாழ்க்கைப்  பாடங்கள்.

“தோல்வியை ஏற்றுக்கொள்வது வேறு. தோல்வியை ஒப்புக்கொள்வது வேறு. ஏற்றுக் கொண்டால் மீண்டும் முயற்சியைத் தொடருவோம். ஒப்புக் கொண்டால் போட்டியிலிருந்து விலகிவிடுவோம். நம்மில் பெரும்பாலானவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்வதற்குப் பயந்து, ஒப்புக்கொள்கிறோம். அதற்குக் காரணம், நாம் சந்திக்கும் அவமானங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளவைத்து, ஒதுங்கிக்கொள்ள செய்து விடும். அவமானத்தைக் கண்டு பயப்படாமலும், அதேநேரம் அதை மறந்துவிடாமலும் இருக்கிற யாரையும் வெற்றி கைவிட்டதில்லை.

வாழ்வில் ஒரு மனிதன் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், அந்த அவமானங்கள் தற்காலிகமானவையாக மாறிவிடும். அவமானங்களை வெகுமானங்களாக மாற்ற வேண்டும் என்கிற வைராக்கியம் இருந்தால் போதும். செய்கிற கடமைக்கு நிச்சயம் பலன் இருக்கும்.

கைவிட்ட விவசாயம்!

தற்போதைய திருப்பூர் மாவட்டத்தில் ‘புளியம்பட்டி’ என்கிற சிறிய கிராமத்தைப் பூர்வீகமாக கொண்ட அப்பாவுக்கு விவசாயமே பரம்பரைத் தொழில். மழைபொய்த்து பஞ்சம் தலைதூக்கியபோது, அப்போதைய ஒருங்கிணைந்த கோவை மாவட்டமே பஞ்சாலைத் தொழிலை நோக்கி படையெடுத்தது. இனி விவசாயத்தை நம்பியிருந்தால் வாழ்வில் கரைசேர முடியாது என்ற நிலையில், ஏதாவது ஒரு பஞ்சாலையில் நிரந்தர ஊழியராக சேர்ந்துவிட வேண்டும் என்ற கனவோடு இருந்தார் அப்பா. எங்கள் ஊரில் 3 காட்டன் மில் முதலாளிகள் இருந்ததே அதற்குக் காரணம்.

அந்தக் காலத்தில் பணம் இருந்தாலும், சொந்தமாக கார் வைத்துக்கொள்வது அபூர்வம். கிராமத்து மனிதர்களுக்கு உலக அதிசயங்களின் பட்டியலில் காரும் அடங்கும். எங்கள் ஊரில் புதிதாக கார் வாங்கினார் ஒரு பஞ்சாலை முதலாளி. வேலை கேட்கப்போன இடத்தில், அந்தக் காரை ஆசையோடு தொட்டுப் பார்த்திருக்கிறார் என் தந்தை. ‘அப்படி செய்யாதே’ என்று அவர்கள் வாய் வார்த்தையாக சொல்லியிருக்கலாம். காரைத்  தொட்ட குற்றத்துக்காக அப்பாவை அடித்துவிட்டார்கள். இளம்வயதில் நடந்த இந்த அவமானம், அவரைத் தூங்கவிடவில்லை. அவமானத்தில் கூனிக்குறுகியவர், `உன்னை மாதிரி ஒரு மில்லுக்கு முதலாளியாக மாறி, சொந்தமாக கார் வாங்கிக் காட்றேன்’ என்று மனதுக்குள் சபதம் எடுத்துக் கொண்டார்.

எப்படியாவது ஒரு மில் தொழிலாளியாக வேண்டும் என்று நினைத்தவரின் மனதில்,  சொந்தமாக மில் தொடங்க வேண்டும் என்ற லட்சியத்தை ஒரு அவமானமே விதைத்தது. ஊரில் இருந்து கோவைக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தோம்.

வேலைக்காக கற்றுக்கொண்ட நெசவு!

கோவையில், ‘கோத்தாரி’ மில்லில் வேலைகேட்டுப் போனவரை, ‘நெசவு பத்தி எந்த வேலையும் தெரியாதவருக்கு, என்ன வேலை கொடுக்க முடியும்?’ என்று கூறி நிராகரித்துவிட்டார்கள். இதனால், நெசவுத் தொழிலைக் கற்றுக்கொள்ள முடிவெடுத்து, ஊரில் உள்ள ஒரு நெசவாளருக்கு  ஒரு வண்டி சோளத்தட்டு காணிக்கையாகக் கொடுத்து,  நெசவின் நுணுக்கங்களைக் கற்றார். மீண்டும் அதே மில்லுக்குச் சென்று, ‘இப்போது எனக்கு நெசவு பற்றி நன்றாகத் தெரியும், வேலை கொடுங்கள்’ என்று மிடுக்காகக் கேட்ட தந்தையின் முயற்சியைப் பாராட்டி, உடனடியாக வேலை கொடுத்தார்கள். எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டிய இடத்தில், இரண்டு ஷிப்ட் எடுத்து 16 மணி நேரம் வேலை செய்வார். அந்த யூனிட்டில் ஏதேனும் பிரச்சினை என்றால், ‘கூப்பிடு வேலுசாமியை’ என்று சொல்லும் அளவுக்கு,  தவிர்க்க முடியாத ஊழியராக மாறினார்.

 

`வேலை தெரியாது என நிராகரித்த இடத்தில், மற்றவர்களைவிட வேலுச்சாமிக்கு வேலை நன்றாகத் தெரியும்’ என்ற பெயர் எடுத்தபோது,  அவர் அடைந்த மனநிறைவைக் கண்ணால் பார்த்த எனக்கு, ‘எது வெற்றி?’ என்பதன் அர்த்தம் சிறுவயதிலேயே பிடிபட்டது. `சொந்தமாக மில் தொடங்க வேண்டும்’ என்ற லட்சியமே, அந்த வெறித்தனமான உழைப்புக்கு முக்கியக் காரணம்.

பகுதி நேர தொழில்கள்...

பஞ்சாலையில், சுவாச உறுப்புகளுக்குள் பஞ்சுத்  துகள்கள் சென்று, சுவாச நோய்களை உண்டாக்கும். அதைத் தவிர்ப்பதற்காக,  பனை வெல்லத்தை ஊழியர்களுக்கு நிர்வாகம் வழங்கும். தரமான `கருப்பட்டியை’ கொள்முதல் செய்து, அதை பல்வேறு தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து, பகுதி நேரமாக சொந்தத் தொழிலும் செய்தார். எந்த நேரமும் ஏதேனும் ஒரு வேலையில் தீவிரமாக இருப்பார். அம்மா தன் பங்குக்கு பால் கறந்து விற்பனை செய்தார்.

பள்ளியில் படிக்கும் சிறுவனாக, சைக்கிளில் அமர்ந்து ஓட்டும் உயரத்தை அடைவதற்கு முன்பே ‘குரங்கு பெடல்’ அடித்து வீடு வீடாகச் சென்று பால் ஊற்றிய அனுபவம் எனக்கு உண்டு. அம்மாவின் பொறுப்பில் வீட்டிலேயே ஒரு மளிகைக் கடையையும் தொடங்கினார்கள். அப்போது என் வாழ்வில், பள்ளியில் படிப்பு, வீட்டில் உழைப்பு என்று இரண்டு பக்கங்கள் மட்டுமே உண்டு. பொழுதுபோக்கோ, விளையாட்டோ, சுற்றுலாவோ எதற்கும் இடமிருக்காது. சில நேரங்களில் அதையெல்லாம் நினைத்து ஏக்கம் வரும். சொந்தமாக மில் தொடங்கவேண்டும் என்ற அப்பாவின் லட்சியத்துக்கு முன்பு, எங்கள் குடும்பத்தின் சின்ன சின்ன ஆசைகளுக்கு இடமிருந்ததில்லை.

கண்டிப்பும்...அரவணைப்பும்...

தந்தையின் வளர்ப்பில் அன்பும், கடுமையும் சேர்ந்தே இருக்கும். எனக்குத் திருமணமாகும்  வரையில் அப்பா சாப்பாடு பிசைந்து கொடுக்க, அவர் கையில் வாங்கி சாப்பிட்டு வளர்ந்தேன். வீட்டுக்கு ஒரே பிள்ளையாக இருந்த எனக்கு, ஒரே தட்டில் உண்டு, ஒரே படுக்கையில் உறங்கி, பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் முழுமையாக கிடைத்தது. அதேநேரம்,  வளர்ப்பில் கண்டிப்பையும் காட்டினர். சிறுவயதில் எனக்கு தண்ணீரைக் கண்டால் பயம். ‘நீச்சல் ஒரு வாழ்வியல் கலை. அதை நீ கற்றே ஆகவேண்டும்’ என்று கூறி, என்னை தண்ணீரில் தள்ளிவிட்டு, நீச்சல் கற்றுக்கொடுத்தார் அப்பா. முண்டியடித்து மேலே வந்தால், மீண்டும் தண்ணீரில் முக்கியெடுப்பார்.

இன்னொரு பக்கம் அம்மா, ‘குளித்து சாமி கும்பிடாமல் ஒரு வாய் சோறு கிடையாது’ என்று கண்டிப்பாக இருப்பார். என்னுடைய சக வயது பிள்ளைகள் சுதந்திரமாக இருப்பதைப்போலவும், நான் கடுமையாக நடத்தப்படுவதாகவும் எனக்குள் ஒரு மனக்குறை இருக்கும்.  கடுமைகாட்டிய அதே நாளில், அன்பில் நனைய வைத்துவிடுவார்கள்.  விவரம் தெரியத் தொடங்கிய பிறகு, ‘கொண்ட லட்சியத்தில் இருந்து பின்வாங்கக்கூடாது’ என்ற என்னுடைய குண இயல்புக்கு பெற்றோரின் கண்டிப்பான வளர்ப்பே காரணம் என்பது புரிந்த பிறகு, அவர்கள்மீது பெருமதிப்பு உருவானது.

ரயில்வே நிலையத்தில் வேட்டி விற்பனை!

நினைத்த மாதிரியே சொந்த ஊருக்குத் திரும்பி, பழைய தறி இயந்திரத்தை வாங்கி, சொந்தமாக தொழில் தொடங்கினார் அப்பா. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என்னுடைய கல்விக் கனவு, அதோடு நிறைவு பெற்றது. கையிலிருந்த பணத்தையெல்லாம் செலவழித்தும், மிகப் பழைய தறி இயந்திரத்தையே வாங்க முடிந்தது. அப்பா தறியோட்டி,  வேட்டியை உற்பத்தி செய்வார். அதை ரயில்வே ஸ்டேஷன், சந்தை போன்ற இடங்களில் மூட்டைக் கட்டிக் கொண்டுபோய் விற்பனை செய்வதில் தொடங்கியது என்னுடைய பால பாடம்.

வேட்டியை வியாபாரிகளுக்கு வழங்கினால், லாபத்தில் குறையும். நாமே நேரடியாக விற்பனை செய்தால் லாபம் அதிகரிக்கும் என்ற உண்மையை தொழில் செய்ய ஆரம்பித்த முதல் நாளே தெரிந்துகொண்டேன். வீட்டில் இரண்டு பேர் உழைக்கத் தொடங்கி, வேலைக்கு ஆள் எடுக்கும் அளவு முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது.

கொங்கு மண்டலத்தில் மில் தொழில் தேக்கமடையத் தொடங்கியபிறகு, புதிய தொழில்களைத் தேடி பலர் நகர்ந்தனர். கறி கோழி வளர்ப்புத் தொழில், மக்களிடம் அறிமுகமாகத் தொடங்கியது. சிறிய அளவில் தொழில் செய்துகொண்டிருந்த நிலையில், அதில் முழு கவனமும் செலுத்தாமல், கோழி வளர்ப்புத் தொழிலிலும் இறங்கினோம். `எதையும் காலம் அறிந்து செய்ய வேண்டும்’ என்று பெரியவர்கள் சொல்வார்கள்.  மழைக்காலத்தில் உப்பு விற்கவும், காற்றடிக்கும்போது உமி விற்கவும் போனால்,  தொழிலில் நஷ்டமடைவதைத் தடுக்க முடியாது.

பட்ட காலிலேயே படும்!

அதிநவீன இயந்திரங்களின் வருகை, ஜவுளித் தொழிலை வேறொரு தளத்துக்கு கொண்டுபோய்க் கொண்டிருக்க, நாங்கள் அதரப் பழைய இயந்திரங்களை வைத்து தொழில் செய்த காரணத்தால், தொழில் தேக்கமடையத் தொடங்கியது.

இன்னொரு பக்கம், வீட்டில் வளர்க்கிற கோழியை அடித்து, குழம்பு வைக்க மட்டுமே பழகியிருந்த மக்களிடம், முட்டை விற்கும் தொழிலில் இறங்கினோம். உணவில் அடிக்கடி முட்டை சேர்த்துக்கொள்ளும் பழக்கம் இல்லாத காலத்தில் முட்டை வியாபாரம் தொடங்கியதால், வரவேற்பு இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டது.

வெள்ளைக்காரர்களுக்குப் பிறகு, லாரி டிரைவர்களே சாலையோரக் கடைகளில் ‘ஆம்லெட்’ சாப்பிடும் பழக்கம் கொண்டிருந்தனர். அப்போது, ஊரில் உள்ள பிரபலமான ஹோட்டலில் கேட்டால்கூட ஆம்லெட் கிடைக்காது.  ஒரே நேரத்தில் இரண்டு தொழிலும் படுத்துக்கொண்டது.

மேலும், வாழ்வில் அடுத்தடுத்த இடிகளும் விழுந்தன. எங்களிடம் வெகுநாட்களாக ஜவுளித் தொழில் செய்தவர், எங்களுக்குக் கொடுக்க வேண்டிய தொகையை தரமுடியாமல், கடையில் விளக்கேற்றி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்கள், ‘நான் மஞ்சள் நோட்டீஸ் தர விரும்புகிறேன்’ என்பதை,  கடையின் ஜன்னலைத் திறந்துவைத்து, ஒரு விளக்கை எரியவைத்துவிட்டு காணாமல் போய்விடுவார்கள். அவர்கள் எங்கே போனார்கள் என்று யாருக்கும் தெரியாது. அந்தப் பணம் இனி திரும்பாது என்பதே இதற்கு  அர்த்தம். அப்படி, ஒரு வாடிக்கையாளர் ஏற்றிய நஷ்ட விளக்கால் எங்கள் வாழ்வில் ஒட்டுமொத்தமாக இருள் சூழத்தொடங்கியது.   மன உறுதிக்கு முன்னுதாரணமாக இருந்த அப்பா, நொடித்துப்போக ஆரம்பித்தார். ‘இனி தொழில் செய்து முன்னேற முடியாது’ என்று தோல்வியை ஒப்புக்கொண்டார்.

ஒண்ணேகால் ரூபாய் முதலீடு!

படிப்பை பாதியில் நிறுத்தி, அவருடன் தொழிலில் ஈடுபட்ட எனக்கு அப்போது 16 வயது. வரவு-செலவு கணக்குப் புத்தகம், பணம் முதலியவற்றை வைக்கும் பெட்டியின் சாவியை என்னிடம் ஒப்படைத்து, `உன்னால் முடிந்தால் பிழைத்துக்கொள்’ என்று கூறினார். சாமிப் பணமாக முடிந்து வைந்திருந்த ஒண்ணேகால் ரூபாயை முதலீடாக கொடுத்தார்.

என் தாத்தா விவசாய நிலத்தை என் அப்பாவிடம் ஒப்படைக்கும்போது ‘ஊனுள்ள விதையாக இருந்தால் முளைக்கும்’ என்று சொன்னாராம். அதே வார்த்தைகளை என்னிடமும் சொன்னார் அப்பா. ‘சொந்தமாக மில் அமைத்து சம்பாதித்து, கார் வாங்குவேன்’ என்ற வைராக்கியத்தோடு இருந்த அப்பாவின் தொழில் பயணத்தின் முடிவு, எனக்குள் பெரிய அதிர்வை உருவாக்கியது.

`தந்தை சேர்த்து வைத்த செல்வம் பிள்ளைக்கு வரும்போது, அவருக்கு மனதில் இருந்த லட்சியம் நமக்கு வராதா?’ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஒருவேளை சொத்து விட்டுச் சென்றிருந்தால், அது செலவாகியிருக்கலாம். லட்சியத்தை கைமாற்றிக்கொடுத்த காரணத்தால், என்னால் அதை கடைசிவரை விட்டுக்கொடுக்க முடியவில்லை. `அப்பாவின் லட்சியத்தை நாம் நிறைவேற்ற வேண்டும்’ என்ற உறுதியை என்னளவில் ஏற்றுக்கொண்டேன்.

நஷ்டக் கணக்கு நிரம்புயுள்ள ஒரு பெட்டியின் சாவியும், ஒண்ணேகால் ரூபாய் சாமிபணமும் கொண்டு நான் என் அப்பாவின் கனவை நிறைவேற்ற வேண்டும். அரும்பு மீசை முளைக்கத் தொடங்கிய காலத்தில் `நான் பட்ட கஷ்டங்களைவிட, நீ அதிகம் கஷ்டப்படு. அதுதான் உனக்கு வெற்றியைக் கொடுக்கும்’ என்று சின்ன வயதில் அடிக்கடி சொன்னதையே, இப்போது அப்பா செய்கிறாரா என்ற சந்தேகம்கூட எனக்கு எழுந்தது.

`தொழிலை இழுத்து மூடிவிட்டு. வேலைக்குப்போய் பிழைத்துக் கொள்’ என்று சொல்லியிருக்கலாம். சொந்தமாக தொழில்செய்து, பணம் சேர்த்து, சொகுசு கார் வாங்கவேண்டும் என்ற இலக்கு வைத்திருந்த என்னிடம் இருந்ததோ,  பழைய சைக்கிள் ஒன்றுதான்.

கடுமையாக உழைத்த அப்பாவால் ஏன் தொழிலில் வெற்றிபெற முடியவில்லை? என்ற கேள்வி என்னைத் தூங்கவிடவில்லை. அந்தக் கேள்விக்கு சமரசம் இல்லாமல் பதில் தேடத் தொடங்கினேன்?

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close