[X] Close

ஐபிஎல் கிரிக்கெட்: கடந்த வருடம் போராடிய தமிழர் நலவிரும்பிகள் எங்கே? கஸ்தூரி கேள்வி


  • kamadenu
  • Posted: 23 Mar, 2019 15:08 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

தண்ணீர்ப் பஞ்சம், தானியப் பஞ்சம் போல், இன்றைக்கு சினிமாவில் நகைச்சுவைக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், தன்னுடைய நடிப்பாலும் உடல்மொழியாலும் பார்வையாலும் நம்மை ரசிக்கவைத்து, சிரிக்கவைத்த நடிகர்கள் ஏகப்பட்டபேர்.  அவர்களில் சிலர் இறந்துவிட்டார்கள். ஆனாலும், இன்றைக்கும் நம் மனங்களில் இறக்கமுடியாமல் அமர்த்திவைத்திருக்கிறோம் அவர்களை! அந்த மாமனிதர்களில்... சந்திரபாபு, தனியொருவன்!

தூத்துக்குடியில் ஜோசப் பிச்சையாகப் பிறந்து, அப்பா சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு, அங்கே படித்து வளர்ந்து, மீண்டும் இந்தியாவுக்கு, சென்னைக்கு வந்த குடும்பம் சந்திரபாபுவுடையது.

50களில் எம்ஜிஆர், வளரத் தொடங்கினார். 52ல் சிவாஜி நாயகனாக அறிமுகமானார். ஜெமினி கணேசன் புகழ் பெறத் தொடங்கியிருந்தார். இந்தக் காலகட்டத்தில், என்.எஸ்.கே., தங்கவேலு என பலரும் நகைச்சுவையில் கோலோச்சிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில்தான், சந்திரபாபு அறிமுகமானார்.  

எம்ஜிஆருடன் இவர் நடித்த ’நாடோடி மன்னன்’ நல்ல பெயரையும் புகழையும் தந்தது. அதேபோல், சிவாஜியுடன் நடித்த ‘சபாஷ் மீனா’வும் சந்திரபாபுவை தனித்துக் காட்டியது. ஜெமினிகணேசனுடன் நடித்த ‘மாமன் மகள்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

என்.எஸ்.கிருஷ்ணனுக்குப் பிறகு ஒரு காமெடி நடிகர், நன்றாகப் பாடினார் என்றால் அது சந்திரபாபுதான். படத்தில் சந்திரபாபு நடிக்கிறார், பாடவும் செய்துள்ளார் என்றாலே அதற்கென மார்க்கெட் வேல்யூ கூடியது. ‘தடுக்காதே என்னைத் தடுக்காதே’ பாடலும் ‘பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே’ என்ற பாடல்களுக்காகவே திரும்பத் திரும்ப தியேட்டருக்கு வந்தார்கள் ரசிகர்கள். ‘குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே’ பாடலில் சொக்கிப் போனார்கள் தமிழக மக்கள்.

வீணை எஸ்.பாலசந்தர் நடித்த படத்தில், அவருக்குப் பின்னணி பாடிய பெருமையும் சந்திரபாபுவுக்கு உண்டு. ‘கல்யாணம் ஆஹா கல்யாணம்’ என்ற பாடலின் வீடியோவைப் பார்த்தால், அந்தப் பாடலில் சந்திரபாபு நடித்தால் எப்படி இருக்குமோ... அதைப்போலவே நடித்து ஆடி அசத்தியிருப்பார் எஸ்.பாலசந்தர்.

வாழ்க்கையில் எதுகுறித்தும் எப்போதும் அலட்டிக்கொள்ளாதவர் சந்திரபாபு. யாருக்கும் பயப்படமாட்டார். சில தருணங்களில் அப்போது திடீர்திடீரென எம்ஜிஆருடன் முட்டிக்கொண்டதும் நடந்திருக்கிறது. அதற்காக, எம்ஜிஆர் பக்கம், சிவாஜிபக்கம் என்றெல்லாம் சாயமாட்டார்.

இன்றைக்கு சென்னை பாஷையில் யார்யாரோ பேசுகிறார்கள். தமிழ் சினிமாவில், கமல்ஹாசனும் மனோரமாவும் பிரமாதமாக சென்னை பாஷை பேசுவார்கள். தேங்காய் சீனிவாசன் வெளுத்துவாங்குவார். லூஸ்மோகன் பேசுவதே சென்னை பாஷை. சென்னை பாஷை என்றதும் இவர்தான் நினைவுக்கு வருவார். ஆனால் அந்தக் காலத்திலேயே மெட்ராஸ் பாஷையில் பொளந்துகட்டினார் சந்திரபாபு.

பணம் தேவைப்படும் போது நடிப்பார். வாய்ப்பு இல்லையா. நெருங்கிய நண்பர்களிடம் சென்று கேட்பார். ஆனால் யாரிடமும் நடிக்க வாய்ப்பு கேட்டுச் செல்லமாட்டார். அதை கவுரவக்குறைவாகவே நினைத்தார் சந்திரபாபு.

கேரக்டர் ரோல், காமெடி ரோல் என எதுவாக இருந்தாலும் அங்கே நிறைந்து பிரமிப்பூட்டும்... சந்திரபாபுவின் டச். அந்தக் காலத்தில், டபுள் ஆக்ட் படம் எடுப்பது பிரமிப்பாக இருந்தது. டெக்னிக்கல் கஷ்டம். அதையும் கடந்து, ஹீரோக்கள் இரட்டை வேடங்களில் எப்போதாவது நடித்து வந்தார்கள். அந்த சமயத்தில்,  சிவாஜி நடித்த ‘சபாஷ் மீனா’ படத்தில், சந்திரபாபு இரட்டை வேடங்களில் நடித்தார். இதுவும் பெருமைக்கு உரியதாக தமிழ் சினிமாவின் வரலாற்றில் பார்க்கப்படுகிறது.

எத்தனை பெருமைகள் இருந்தாலும், ஏதோவொரு சோகமும் சிக்கலுமாகவே இவரின் வாழ்க்கை இருந்தது துரதிருஷ்டம்தான். திருமணம் என்பது இவரின் வாழ்க்கையிலும் வந்துபோன ஒன்று. திருமணமான முதல்நாள், தனக்கு மனைவியாக வந்தவள், வேறொருவரைக் காதலித்தார். ஆனால் சேரமுடியவில்லை என்பதை அறிந்ததும், எதுகுறித்தும் யோசிக்காமல், எதன்பொருட்டும் பயம்கொள்ளாமல், தன்னுடைய மனைவியை அவருடைய காதலனுடன் சேர்த்துவைத்து, வழியனுப்பிவைத்தார். இதை கருவாக வைத்துக்கொண்டு, இயக்குநர் பாக்யராஜ், ‘அந்த 7 நாட்கள்’ திரைப்படத்தை உருவாக்கினார் என்று சொல்லுவார்கள்.

இன்றைக்கு உள்ள காமெடி நடிகர்கள், ஒருகட்டத்துக்குப் பிறகு ஹீரோ வேஷம் போடுகிறார்கள். படம் ஓடுகிறதோ இல்லையோ... ஹீரோ லேபிளில் இருந்து வெளியே வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள். ஆனால் சந்திரபாபு, குமார ராஜா என்ற படத்திலும் கவலை இல்லாத மனிதன் படத்திலும் நாயகனாக நடித்தார். இந்த இரண்டு படங்களுமே தோல்விப்படங்களாக அமைந்தன. உண்மையைப் புரிந்து கொண்ட சந்திரபாபு, பழையபடி காமெடி ரோல்களில் நடிக்கத் தொடங்கினார். இப்படித்தான் யதார்த்தமான வாழ்க்கை, இயல்பான நடிப்புத் தொழில், எதிர்பார்க்காத எதிர்காலம் என்று வாழ்ந்தார்.

‘சந்திரபாபுவை வைத்து கவலை இல்லாத மனிதன் படத்தைத் தயாரித்தேன். மிகப்பெரிய கவலைக்குள்ளான மனிதனானேன் என்று கவியரசர் கண்ணதாசன் ஒருமுறை மனம் நொந்து சொல்லியிருக்கிறார்.

படத்துக்கு கவலை இல்லாத மனிதன் என்று கண்ணதாசன் வைத்தாரா? இயக்குநர் சொன்னாரா? சந்திரபாபுவே சொன்னாரா... தெரியவில்லை. உண்மையிலேயே ‘கவலை இல்லாத மனிதன்’ சந்திரபாபுதான்!

உண்மையில், சந்திரபாபுவின் வாழ்க்கையை கவனித்துப் பார்த்தால், ஒட்டுமொத்த கவலைகளையும் ஒருங்கே கொண்ட மனிதன் அவர் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

ஆனால்... சந்திரபாபு, கவலை இல்லாத மனிதனாகத்தான் வாழ்ந்தார்; கவலை இல்லாத கலைஞனாகவே மறைந்தார்.

மார்ச் 8ம் தேதி சந்திரபாபு நினைவு நாள்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close