[X] Close

இளைஞர்களுக்கு கைகொடுக்கும் `ஸ்டார்ட் அப்’ முயற்சிகள்


startup-companies

  • kamadenu
  • Posted: 07 Mar, 2019 10:13 am
  • அ+ அ-

புதிதாக தொழில்முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கு `ஸ்டார்ட் அப்’ முயற்சிகள் பெரிதும் கைகொடுக்கும் என்று கோவையில் நடைபெற்ற விழாவில் அறிவுறுத்தப்பட்டது. கோவை மேலாண்மைக் கழகம் சார்பில், தேசிய மேலாண்மை தின விருதுகள் வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. இதில், சிறந்த தொழில்முனைவோர் மற்றும் சிறந்த மேலாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தனி நபர் மற்றும் நிறுவனங்கள், குழுமங்களின்  சிறப்பான சேவைக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் பேசிய கோவை மேலாண்மைக் கழகத்  தலைவர் எஸ்.பிரசாந்த் “கோவை மேலாண்மைக் கழகம் 1954-ல் தொடங்கப்பட்டது. டெல்லியில் உள்ள தேசிய மேலாண்மைக் கழகத்துடன் இணைந்து செயல்படும் இந்த சங்கம், சிறந்ததொழில்முனைவோர் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. மேலாண்மைப் பயிற்சி, வர்த்தகம்,  தொழில் தொடர்பான சிறப்பான பயிற்சிகளையும் வழங்கிவருகிறது. தொழில்துறை, வர்த்தகத்தில் உருவாகியுள்ள புதிய முறைகள், வளர்ச்சிக்கான வழிமுறைகளைத் தெரிவிப்பதுடன், தொழில் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இளம் தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களுக்குப் பல்வேறு தொழிற் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன” என்றார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, சென்னை பிசினஸ் லைன் ஆசிரியர் ராகவன் ஸ்ரீனிவாசன் பேசும்போது, “நிர்வாக மேலாளர்கள் நிறைய சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். வித்யாசமான பொருளாதாரம், சிக்கல்களை  நிர்வகிக்க வேறுபட்ட பார்வையுடன் செயல்பட வேண்டும். தற்போது இந்தியா முழுமையான கணினிமயமான தேசமாக மாறி வருகிறது. இதனால், தற்போதைய வலைதளத் தொடர்புகள் மூலம் திடீர் சவால்களை சமாளிக்க முடியும். தகவல்கள், தரவுகள் கொட்டிக்கிடக்கும் இன்றைய சூழலில், அரசின்  திட்டங்களை சுலபமாக நிறைவேற்றலாம்.

தேசிய அளவில் தென்மாநிலங்கள் தொழில் வளர்ச்சியில் முன்னேறி வருகின்றன. குறிப்பாக, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகியவை  தொழில் வளர்ச்சியில் பெரிதும் முன்னேறியுள்ளன.  கோவை மாநகரம் சர்வதேச அளவிலான தொழில் நகரமாக மாறி வருகிறது. நவீனத் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகள் மூலம், குறைந்த மனித சக்தியில் பெரிய வளர்ச்சியைப் பெறுவது சாத்தியமாகிறது. தொழில்முனைவோராக விரும்பும் இளைஞர்கள் `ஸ்டார்ட் அப்’ முயற்சிகளில் நம்பிக்கையுடன் ஈடுபட வேண்டும். சர்வதேச அளவிலான  கண்டுபிடிப்புகள் போட்டியில் பங்கேற்று, நமது அறிவுத் திறனைக் கொண்டு வெற்றிபெற வேண்டும்” என்றார்.

காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூசன்ஸ் நிறுவன தேசிய துணைத் தலைவர்  மாயா குமார் பேசும்போது, “மேலாளர்களும், பணியாளர்களும் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். நவீனத் தொழில்நுட்பத்திலும் தேர்ந்தவர்களாக மாற வேண்டும். இயந்திரம், பணியாளர்கள், மேலாளர்களுக்கான இணைப்பு மிகவும் முக்கியமானது. இளைஞர்கள் சிந்திக்கும்போதே, பெரிய விஷயங்களை சிந்திக்க வேண்டும்” என்றார்.

சிறந்த தொழில்முனைவோருக்கான விருது வி.செந்தில்குமார், கே.ஜெகநாதன்,  டாக்டர் ஆஷாஆர்.ராவ்,  டாக்டர் ஜே.சிவகுமாரன் ஆகியோருக்கும்,  சிறந்த `ஸ்டார்ட் அப்` விருது பாஸ்கரன் வேலுசாமிக்கும் வழங்கப்பட்டது. கோவை மேலாண்மைகழக செயலர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close