[X] Close

’ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு’; காத்தாடியாய் ஆடச்செய்த ஜெயச்சந்திரன்!


jeyachandran

பாடகர் ஜெயச்சந்திரன்

  • வி.ராம்ஜி
  • Posted: 04 Mar, 2019 14:39 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

பாடகர்கள் பலரின் குரலும் நம்மை அப்படியே ஈர்த்துவிடும். கட்டிப்போட்டுவிடும். கணப்பொழுதுகளை மறக்கச் செய்யும். சில பாடகர்களின் குரல், தனித்துவமானது. பாடல்களை அந்தக் குரலுக்குரியவர் பாடும்போது, இன்னும் மனதுக்கு நெருக்கமாகிவிடும். மனசையே லேசாக்கிவிடும். அப்படி மனசை லேசாக்கும் குரலுக்கு உரியவர்... பாடகர் ஜெயச்சந்திரன்.

ஜெயச்சந்திரன் பாடல்களைக் கேட்கும்போது, நமக்குச் சிறகுகள் வந்திருக்கும். விரிக்கத் தொடங்கிவிடுவோம். பறக்க முனைந்திடுவோம். பூமியிலும் இல்லாமல் வானிலும் இல்லாமல் நடுவாந்திராமாக, தக்கையாகிப் பறப்போம். அதுதான், ஜெயச்சந்திரனின் குரல் செய்யும் மாயவிளையாட்டு.

அழகு கொஞ்சும் கேரளாதான் ஜெயச்சந்திரனின் பூர்வீகம். ஐம்பதுகள் தொடங்கி அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ஆந்திராவில் இருந்து வந்த பாடகர்கள் கோலோச்சினார்கள் இங்கே. கே.ஜே.யேசுதாஸ் மாதிரி, அத்திப்பூத்தது போல் கேரளத்தில் இருந்து வந்தவர்கள் வெகுகுறைவுதான் அப்போது!

அந்தக் காலகட்டத்தில்தான் ஜெயச்சந்திரன் வந்தார். கேரளாவின் கொச்சியைச் சேர்ந்தவர். கொச்சி அரச பரம்பரையைச் சேர்ந்த ஜெயச்சந்திரனுக்கு, குரல் ராஜாங்கம் செய்தது. குடும்பமே இசைப் பாரம்பரியக் குடும்பம். ஐந்து வயதில் மிருதங்கத்தில் பின்னத் தொடங்கினார். ஆறு வயதில் பாடத் தொடங்கினார்.அருகில் உள்ள தேவாலயம்தான் இவரின் பாட்டறையாயிற்று. அங்கே உள்ள தெய்வங்கள்தான், ஜெயச்சந்திரனின் குரலுக்கு முதல் ரசிகனாய்த் திகழ்ந்தனர்.

பிறகு படிப்பு. அதன் பிறகு சென்னைக்கு வந்தார். கூடவே, இவரின் பாட்டாசையும் வந்தது. இவர் பாடலில் உள்ள மயிலிறகு வருடலை அறிந்துகொண்ட ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்ட், ’குஞ்சாலி மரக்கார்’ படத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தப் படம் வருவதற்கு முன்பே,  ’களித்தோழன்’ படம் வந்தது. இவர் பாடிய பாட்டு, படத்துக்கே பலமாக அமைந்தது.

இங்கே, தமிழ் திரையுலகம், சிகப்புக் கம்பளமிட்டு வரவேற்றது.  ‘பொன்னென்ன பூவென்ன கண்ணே’ என்று பாடத் தொடங்கியது முதலே, மக்களின் மனசுக்குள் உட்கார்ந்து கொண்டார் ஜெயச்சந்திரன். அதையடுத்து வந்த இவரின் பாடல்களெல்லாம், தேன் ரகங்கள்தான். திகட்டாத தித்திப்புச் சர்க்கரைப் பொங்கல்தான்!

’மூன்று முடிச்சு’ படத்தில், ‘வசந்த கால நதிகளிலே’ என்ற பாட்டும் ‘ஆடி வெள்ளி’ பாட்டும் தனித்த குரலுடன், ஹிட்டடித்தன. அதேபோல், காற்றினிலே வரும் கீதம்’ படத்தில், ‘சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்’ என்ற பாடல் கிறங்கடித்தது. ‘ஒரு வானவில் போலே என் வாழ்விலே நீ வந்தாய்’ என்ற பாடலில் கொஞ்சினார் ஜெயச்சந்திரன்.

‘அந்த ஏழு நாட்கள்’ படத்தில், ‘தென்றலது உன்னிடத்தில் சொல்லிவைத்த சேதி என்னவோ’ பாடல் என்ற பாடலில், தென்றலைத் தவழவிட்டிருப்பார்.

இப்படியான தருணத்தில், விஜயகாந்துக்கு அவரின் குரல் ரொம்பவே குழைந்தும் இயைந்தும் இருந்ததை அறிந்த இளையராஜா, தொடர்ந்து விஜயகாந்துக்கு ஜெயச்சந்திரனைப் பாட வைத்தார். அத்தனைப் பாடல்களும் இன்றைக்கும் எல்லோராலும் முணுமுணுக்கப்படுகின்றன.

‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ என்ற பாடல், ‘பூவை எடுத்து ஒரு மாலை தொடுத்து வைச்சேனே’ என்று பல பாடல்கள். அதில் குறிப்பாக, ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில், ‘ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு’, ‘காத்திருந்து காத்திருந்து’, ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ’ என்று எல்லாப் பாடல்களிலும் ஜெயச்சந்திரன், மந்திரப்பொடிகளைத் தூவியிருப்பார், தன் குரல் வழியே!

இப்படியான சாகாவரம் பெற்ற பாடல்களைத் தந்த ஜெயச்சந்திரனை, நேற்றில் தொடங்கி பலரும் சமூகவலைதளங்களில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் இசை ரசிகர்கள். நேற்று 3.3.19 ஜெயச்சந்திரனின் பிறந்தநாள்.  

இத்தனைக்கும் டி.எம்.எஸ். போல, ஜேசுதாஸ் போல, எஸ்.பி.பி., போல, மலேசியா வாசுதேவன் போல, ஏகப்பட்ட பாடல்களெல்லாம் பாடிவிடவில்லை அவர். ஆனாலும் ஒவ்வொரு பாடலும், பால், தேனருவிகளாக நம் செவிகளுக்குள் பாய்ந்தன.

ஜெயச்சந்திரன் எனும் வசந்த கால நதி... ஓடிக்கொண்டே இருக்கும். வானமென தாலாட்டிக் கொண்டே இருப்பார் ஜெயச்சந்திரன்!

ஜெயச்சந்திரன் வாழ்க!  

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close