[X] Close

தோல்வியடைந்த ட்ரம்ப் - கிம் சந்திப்பு


trump-kim-meet

  • kamadenu
  • Posted: 04 Mar, 2019 09:46 am
  • அ+ அ-

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னும் பங்கேற்ற உச்சி மாநாடு ஒரு முடிவும் எடுக்காமல் முடிந்ததில் எல்லோருக்குமே ஏமாற்றம்தான். இந்த சந்திப்பால், கொரிய தீபகற்பத்தில் பெரிதாக மாற்றத்தை உருவாக்கும் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என உலக நாடுகள் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் ஓரளவுக்காவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என சிலர் எதிர்பார்த்தனர்.

வட கொரியா தலைவர் தன்னிடம் இருக்கும் அனைத்து அணு ஆயுதங்களையும் தயாரிப்பு மையங்களையும் மூடிவிட சம்மதிப்பார் என ட்ரம்ப் விரும்பினார். வட கொரியா மீது விதிக்கப்பட்ட அமெரிக்க வர்த்தகத் தடைகள் அனைத்தையும் ட்ரம்ப் நீக்க வேண்டும் என கிம் கோரினார். எதுவும் நடக்கவில்லை.

கொரிய தீபகற்பத்தைப் பொருத்தவரை இதுபோன்ற நல்ல விஷயங்கள் உடனே நடந்துவிடாது. வட கொரியா பதிலுக்கு லாபம் இல்லாமல் அணு ஆயுதங்களை கைவிடாது. பல ஆண்டுகளாக பொருளாதாரத்தை நசுக்கி வரும் வர்த்தகத் தடைகள் அனைத்தையும் நீக்கினால் போதும் என நினைக்கிறது வட கொரியா. முதலில், யாங்பியோன் அணு ஆயுத உற்பத்தி மையம் உள்ளிட்ட அனைத்து மையங்களையும் மூடவும் அணு ஆயுதங்களை அழிக்கவும் வட கொரியா முன்வர வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது. இதைச் செய்யாமல் வர்த்தகத் தடைகளை நீக்குவது சாத்தியமில்லை என்கிறது அமெரிக்கா. இதுதான் அமெரிக்காவின் நிலை என்றால், இப்போது நடந்த பேச்சுவார்த்தைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே.

தோல்வி அடைந்த ஹனாய் உச்சி மாநாட்டால் யாருக்கும் பயனில்லை. வர்த்தகத் தடைகளை தளர்த்த மாட்டேன் என அமெரிக்கா சொல்ல முடியாது. அதேபோல், அணு ஆயுதங்களை அழிக்க மாட்டேன் என வட கொரியாவும் சொல்ல முடியாது. இதனால் தேவையில்லாமல் கொரிய தீபகற்பத்தில் பிரச்சினைதான் அதிகமாகியிருக்கிறது. மீண்டும் தென் கொரியா மீதும், ஜப்பான் மீதும் கிம் தனது ஏவுகணைகளை பறக்கவிடலாம் என நினைத்தால், அதனால் பிரச்சினை இன்னும் தீவிரமாகுமே தவிர, தீர்வு கிடைப்பது கஷ்டமாகிவிடும். வட கொரியா மீதான வர்த்தகத் தடைகள் இறுகுவதோடு, வட கொரியாவுக்கு உதவி வரும் சீனாவுக்கு அமெரிக்கா அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே அமெரிக்காவுடனான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வட கொரியாவுக்கு சீனா தொடர்ந்து உதவலாம் அல்லது வர்த்தகம் மேலும் பாதிப்பதை தடுக்கும் வகையில் விலகி வரும் முடிவை எடுக்கலாம்.

2020-ல் நடக்கும் அதிபர் தேர்தலுக்கு கிம்முடன் நடத்திய பேச்சுவார்த்தை உதவும் என ட்ரம்ப் நினைத்திருந்தால் அது அவருக்கு ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும். வட கொரியா தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிபர் என்று வேண்டுமானால் அவர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், ராஜதந்திர ரீதியாக தனக்கு திறமையில்லை என்றுதான் அவர் நிரூபித்திருக்கிறார். பொதுவாக உச்சி மாநாடுகள் மிகுந்த கவனத்துடன் ஏற்பாடு செய்யப்படும். இரு நாட்டு குழுக்களும் முன்பே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, சில விஷயங்களில் ஒருமித்த கருத்துக்களை எட்டியிருப்பார்கள். அதன் பின்னரே அந்த நாட்டுத் தலைவர்கள் சந்தித்துப் பேசுவார்கள். இங்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும் வட கொரியாவில் அமெரிக்க மாணவன் சிறைபிடிக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டதும் பின்னர் நாடு திரும்பிய சில நாட்களில் உயிரிழந்ததும் கிம்முக்கே தெரியவில்லை என அமெரிக்க அதிபர் கூறியதைக் கேட்டு அமெரிக்கர்கள் கொதித்துப் போனார்கள். சர்வாதிகாரியின் பேச்சை நம்புவதா என குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியின் செனட்டர்கள் ட்ரம்ப்பை விமர்சித்தார்கள்.

மூன்றாவது உச்சி மாநாடு பற்றிய அறிவிப்பு இப்போதைக்கு வரப்போவதில்லை. முதல் இரண்டு மாநாடுகளின்போது, கடைசி நேரத்தில் எங்கு தப்பு நடந்தது என்பதை இரு தரப்பும் ஆய்வு செய்ய வேண்டிய நிலைமை. இரு தரப்புமே எதிர் தரப்பைப் பற்றி தப்பு கணக்கு போட்டனர். பிராந்திய நலனுக்காகவும் உலக அமைதிக்காவும் தனது பங்கை ஆற்றியுள்ளது வியட்நாம். வழக்கம்போல், மாநாட்டின் தோல்விக்கு ட்ரம்ப் மீடியாவை குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை தோல்விக்கு யார் காரணம், என்ன காரணம் என்ற விவாதம் கண்டிப்பாக ஆரம்பிக்கும் என்றாலும் வெற்றிகரமான ராஜ தந்திரம் என்பது ஒரு வழிப்பாதை அல்ல, இரு வழிப்பாதை என்ற உண்மையை இரு தரப்பும் உணர வேண்டும். பரஸ்பரம் லாபம் இருந்தால்தான் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும்.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி
எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜிகல்லூரியின் பேராசிரியர்.
வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்
தமிழில்: எஸ்.ரவீந்திரன்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close