[X] Close

வானவில் பெண்கள்: சீனப் பெண்ணின் தமிழ் வணக்கம்


china-girl

  • kamadenu
  • Posted: 03 Mar, 2019 22:32 pm
  • அ+ அ-

பிரதாப்.சி

மாலை வேளை. தமிழ் ஆர்வலர்கள் சங்கமித்த நிகழ்ச்சி அது. குழந்தையின் முதல் மழலைப் பேச்சைக் கேட்கும் ஆவலுடன் மொத்தக் கூட்டமும் ஆர்வத்துடன் அமர்ந்திருந்தது. “வணக்கம். தயவு செய்து யாரும் சிரிக்காதீங்க” எனப் புன்முறுவலுடன் நிகழ்ச்சியின் கதாநாயகி கிகி ஜாங், கொஞ்சும் தமிழில் பேசத் தொடங்கியதும் ஒட்டுமொத்த அரங்கத்தின் ஆர்ப்பரிப்பும் அடங்க வெகு நேரமானது.

தமிழகத்திலேயே தாய்மொழியான தமிழைப் பிழையின்றி பேசவும் எழுதவும் பலர் திணறும் சூழலில் சீனப் பெண்ணான கிகி ஜாங் மிகவும் அழகாகப் பிற மொழி கலப்பின்றி, தூய தமிழில் பேசுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தமிழ் மீதான பற்று காரணமாகத் தன் பெயரை நிறைமதி என மாற்றிக் கொண்டவர், தமிழ் மொழியை சீன மாணவர்களுக்குக் கற்றுத் தரும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

கிகி ஜாங், தமிழில் பேசும் காணொலிகளுக்கும் அவர் தொகுத்தளித்த பொங்கல் விழா கொண்டாட்ட நிகழ்ச்சி களுக்கும் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு. குறிப்பாகத் தமிழ் ரசிகர்கள் அவரைப் பாராட்டிவருகின்றனர்.

தமிழைத் தீவிரமாக நேசிக்கும் இந்த சீன தமிழச்சி, தமிழுடனான தன் 11 ஆண்டு கால அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். “இந்தியாவில் இந்தி மட்டுமே பேசுவார்கள் என்ற எண்ணம் சீனாவில் மேலோங்கியுள்ளது. அதே மன ஓட்டத்தில் இருந்த நான் 2007-ல் சீன வானொலியில் பணிபுரிந்தபோது இந்தியாவில் இந்தி தவிர்த்துத் தமிழ், பெங்காலி உட்படப் பல்வேறு மொழிகள் பேசப்படுவதை அறிந்தேன்.

குறிப்பாகத் தென்னிந்தியாவில் தமிழ் மொழியின் ஆளுமையை அறிந்துகொண்டேன். அப்போது எனக்குக் கிடைத்த தமிழ் அறிமுகம் நாளடைவில் ஈர்ப்பாக மாறியது. தொடர்ந்து தமிழ் கலாச்சாரம், பண்பாடு ஆகியவை குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. சீனத் தகவல் தொடர்பியல் பல்கலைக்கழகத்தில் 2007 முதல் 2011 வரை செம்மொழித் தமிழைப் படித்தேன்.

தமிழைக் கேட்க இனிமையாக இருந்தாலும் அதைக் கற்றுக்கொள்ளச் சிரமமாக இருந்தது. குறிப்பாகத் தமிழ் எழுத்துகளில் லகர, றகர உச்சரிப்புகள் கடினமாக இருந்தன. மொழி உச்சரிப்பு சரியாக வருவதற்கு தொண்டைக்குழியில் தண்ணீர் வைத்துப் பயிற்சிசெய்தேன். சொற்களை உச்சரிப்பதில் சிரமம் இருந்தாலும் அவைதாம் மொழியின் அழகியலாகவும் இருக்கின்றன.

தமிழ்ப் புத்தகங்களையும் திரைப்படங்களையும் தேடித் தேடிப் படிக்கவும் பார்க்கவும் செய்தேன். பாரதியார் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆழமான கருத்துகள் கொண்ட கவிதைகள் எளிய நடையில் இருப்பதைக் கண்டு வியந்தேன். ஒரு கட்டத்தில் தமிழர்களின் பேச்சுத் தமிழ் வித்தியாசமாக இருப்பதைப் புரிந்துகொண்டேன்.

மிகச் சிறந்த தமிழ் மொழியை ஆங்கிலம் கலந்து பேசுவது கவலையாக இருந்தது. எனினும், மொழிப் புரிதலுக்காக இணையதளம் வழியாகப் பேச்சுத் தமிழையும் கற்றுக்கொள்கிறேன்.

பிற நாடுகளுடன் வர்த்தக மேம்பாட்டைப் பலப்படுத்த சீனாவின் யுனான் பல்கலைக்கழகத்தில் இந்தி, சிங்களம் உள்ளிட்ட சில தெற்காசிய மொழிகளுக்குத் துறைகள் அமைத்து சீனர்களுக்கு மொழி சார்ந்த கல்வி கற்றுத்தரப்படுகிறது. இந்தியாவில் தமிழகத்தின் முக்கியத்துவத்தை சீனா நன்றாக உணர்ந்துள்ளது. மேலும், தமிழர்கள், சீனர்கள் இடையே பழங்காலம் முதலே நல்லுறவு இருக்கிறது.

இதைக் கல்வி, வர்த்தகம் போன்றவற்றின் மூலம் பலப்படுத்த சீனா விரும்புகிறது. அதனால், யுனான் பல்கலைகழகத்தில் தமிழ் மொழிக்குத் தனி துறையை 2017-ல் தொடங்கி, நான்கு ஆண்டு பட்டப் படிப்பையும் சீன அரசு அறிமுகம் செய்தது. அந்தத் துறைக்கு நான் பேராசிரியராக  நியமிக்கப்பட்டேன்.

இப்போது ஆறு சீனர்கள் ஆர்வத்துடன் தமிழ் படித்துவருகிறார்கள். தமிழ் மொழியுடன் அதன் கலாச்சாரம், பண்பாடு குறித்தும் கற்றுத் தருகிறோம். நல்லவரவேற்பு இருப்பதால் தமிழ்த்துறை மேலும் விரிவுபடுத்தப்படும்.

தமிழகத்தில் பல்வேறு தொழில்களில் சீன நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்துவருகின்றன. தமிழ் மொழிப் பெயர்ப்பாளர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, தமிழ் படிப்பவர்களுக்கு சீனாவில் வேலை வாய்ப்புகள் அதிகம். சீனா உட்படப் பல்வேறு நாடுகளில் தாய்மொழிவழிக் கல்விக்குத்தான் அதிக  முக்கியத்துவம் தரப்படுகிறது.  தமிழகத்தில் நிலைமை நேர்மாறாக இருப்பது அதிர்ச்சி தருகிறது.

எனவே, தமிழக அரசும் தாய்மொழிவழிக் கல்விக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். இளைஞர்களும் தாய்மொழியான தமிழைப் பாதுகாக்க, அதைப் பிற மொழிகள் கலப்பின்றி பேச வேண்டும். தமிழ் மொழி வளர்ச்சிக்கு சீனாவில் ஆராய்ச்சி மையம் அமைப்பதே என் லட்சியம். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்” என்று சொல்லும் கிகி ஜாங், தமிழரை மணந்து கொள்ள விரும்புவதாகச் சொல்கிறார்.

படம்: ம. பிரபுகிகி ஜாங்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close