[X] Close

தேர்வு வழிகாட்டி: மாணவர்களுக்குப் பெற்றோர் செய்யும் உதவி


exam-time

  • kamadenu
  • Posted: 03 Mar, 2019 22:31 pm
  • அ+ அ-

தேர்வுகள் நெருங்கிவிட்டாலே மாணவர்கள் இவற்றையெல்லாம் செய்ய வேண்டும்; இந்த நடைமுறைகளைத் தவிர்க்க வேண்டும் என ஏராளமான அறிவுரைகள் மழையாகப் பொழியும். சில வீடுகளில் குழந்தைகளைவிடப் பெற்றோர்களே அதிக பதற்றத்துடன் இருப்பார்கள்.

தாங்களே தேர்வு எழுதுவதுபோல் தேர்வு நாட்களில் மன அமைதியில்லாமல் அல்லாடுவார்கள். பெற்றோரின் இந்தத் தேவையில்லாத பதற்றமே மாணவர்களின் தன்னம்பிக்கையைக் குறைத்துவிடும் என்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம்.

இன்றைக்கு மழலையர் வகுப்பில் படிக்கும் குழந்தைக்குக்கூட தேர்வு வைக்கிறார்கள். குழந்தை இயல்பாக இருந்தால்கூட பெற்றோர் விடமாட்டார்கள். “மிஸ் கேட்கும் போது பாடலை திக்காமல் சொல்லணும். எதையும் மறந்துடக் கூடாது” என ஆயிரம் முறை அறிவுறுத்திப் பள்ளிக்கு அனுப்புவார்கள்.

மழலை வகுப்புப் படிக்கும் குழந்தையை வைத்திருக்கும் பெற்றோரின் நிலையே இப்படியென்றால் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோரின் நிலை ஏழு கடலைத் தாண்டும் சாகசகத்துக்குச் சமமாக உள்ளது. இத்தனைப் பதற்றம் தேவையில்லாதது என்கிறார் ராமானுஜம். தேர்வு நேரத்தின்போது பெற்றோர் பின்பற்ற வேண்டிய மூன்று முக்கிய வழிமுறைகளை அவர் பரிந்துரைக்கிறார். “தேர்வு தொடங்கிவிட்டது.

அதனால் ஒழுங்காகப் படி; டிவி பார்க்காதே; வெளியே சென்று விளையாடாதே; எப்போதும் புத்தகமும் கையுமாகதான் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி அவர்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கக் கூடாது. இரண்டாவது, மாணவர்களுக்கு நிம்மதியான உறக்கம் அவசியம். நன்றாகத் தூங்கினால்தான் மூளை புத்துணர்வாக இருக்கும். அவர்கள் சரியான நேரத்தில் உறங்குவதைப் பெற்றோர் உறுதிசெய்ய வேண்டும்.

அப்போதுதான் மாணவர்கள் படிக்கும் பாடங்கள் மனத்தில் பதியும். மூன்றாவது, எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளைக் கொடுக்க வேண்டும். மலச்சிக்கலை உண்டாக்கும் பரோட்டா, கேக், ஐஸ்கிரீம், டீ, காபி போன்றவற்றைத் தவிப்பது நல்லது. காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து அதிகமுள்ளவற்றைக் கொடுக்க வேண்டும்” என்கிறார் அவர்.

எப்படிப் படித்தாலும் நல்லது

தேர்வுக் காலத்தில் பெற்றோர் செய்யும் மற்றொரு விஷயம், தாங்கள் பார்க்கும் அனைவரிடமும் குழந்தையின் தேர்வு குறித்துப் பேசுவது. “இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம் எழுதப்போறான். இந்தப் பாடத்துலதான் கொஞ்சம் வீக். எப்படி எழுதப் போறானோ” எப்போதும் தேர்வைப் பற்றியே பேசுவார்கள். 

பெற்றோரின் இந்தத் தேவையில்லாத பேச்சு குழந்தைகளுக்குப் பதற்றத்தைத்தான் ஏற்படுத்தும். அவர்களுக்குத் தேர்வு மீதிருக்கும் பயத்தை அதிகரித்துத் தன்னம்பிக்கையைக் குறைக்கக்கூடும்.

“தேர்வு நாட்களில் மாணவர்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து படிப்பார்கள். குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறையாவது சிறு நடைப்பயிற்சியோ லேசான உடற்பயிற்சியோ செய்யலாம். மனத்துக்குப் பிடித்த பாடலைக்கூட கேட்டுவிட்டு வரலாம்” என்கிறார் ராமானுஜம்.

இறுக்கம் வேண்டாமே

சிலர் தேர்வு நேரத்தில் உறவினர்கள் யாரையும் வீட்டுக்கு அழைக்க மாட்டார்கள். அதேபோல் அவர்களும் வெளியே எந்த விசேஷத்துக்கும் செல்லாமல் தேர்வுகள் முடியும்வரை வீட்டிலேயே முடங்கியிருப்பார்கள்.

பெற்றோரும் குழந்தைகளும் இதுபோல இறுக்கமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார் ராமானுஜம். “எல்லா நாட்களைப் போல் தேர்வு நாட்களிலும் நம் இயல்பில் இருப்பதே நல்லது. அதேபோல் ஒவ்வொரு குழந்தைக்கும் படிக்கும் விதம் மாறுபடும். வீட்டில் எத்தனைப் பேர் இருந்தாலும் சில குழந்தைகள் படிப்பார்கள். சிலர் மனத்துக்குள்ளேயே படிப்பார்கள்.

மேலும் சிலர் வாய்விட்டுச் சத்தமாக படிப்பார்கள். ஒருமுறை படித்தாலே சிலருக்கு மனத்தில் பதிந்துவிடும். சிலர் தனிமையில் இருந்தால்தான் படிப்பார்கள். இப்படிப் படிக்கும் விதம் ஒவ்வொரு மாணவருக்கும் மாறுபடும். ஆனால், பெரும்பாலான பெற்றோர் இதையெல்லாம் புரிந்துகொள்வதில்லை.

ஏன் மெதுவா படிக்கிறே? நல்லா சத்தமா வாய்விட்டுப் படி என்பார்கள். பாட்டு கேட்டுக்கொண்டே படித்தால் இப்படிப் படித்தால் பாடம் மனத்தில் பதியுமா? அறையில் தனியாக உட்கார்ந்து படி எனக் கட்டளையிடுவார்கள். பெற்றோரின் இப்படியான கட்டளைகள் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்குத் தேவையில்லாத மனக் கஷ்டத்தை உண்டாக்கும். அவரவருக்கு எப்படிப் படிக்கப் பிடிக்குமோ அப்படியே அவர்களைச் செயல்படவிடுவது நல்லது” என்கிறார் ராமானுஜம்.

மாணவர்கள் தேர்வில் வெற்றிபெறுவது அவசியம்தான். ஆனால், அதற்காக அவர்கள் மீது அதிகச் சுமையை ஏற்றக் கூடாது. இதனால், தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்தாலோ தேர்ச்சி பெறவில்லை என்றாலோ மாணவர்களின் மனநிலை மோசமாகிவிடக்கூடும் என்பதைப் பெற்றோர் கவனத்தில்கொள்ள வேண்டும். தேர்வெழுதச் செல்லும் மாணவர்களுக்கு, “எதுவும் பிரச்சினையில்லை; உனக்குத் தெரிந்ததை நல்லா எழுதிவிட்டு வா” எனப் பெற்றோர் அளிக்கும் நம்பிக்கைதான் முக்கியம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close