[X] Close

வட்டத்துக்கு வெளியே: ஆட்சியரான ஆசிரியை


group1-exam

  • kamadenu
  • Posted: 03 Mar, 2019 08:47 am
  • அ+ அ-

எல்.ரேணுகாதேவி

தோல்விகளால் ஆன பாதையில் சென்று, குரூப் –1 தேர்வின் மூலம் துணை ஆட்சியர் பணி ஆணையைப் பெற்றுள்ள நிறைமதி.

கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் சுக்காலியூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர் நிறைமதி. ஆசிரியர் பணியில் இருந்துகொண்டே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் நடத்தும் குரூப் -1 தேர்வை 2017-ல் எழுதினார். தகுதித் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு ஆகிய இரண்டிலும் வெற்றிபெற்று, நேர்முகத் தேர்வுக்குச் சென்றார். அதிலும் வெற்றிபெற்ற நிறைமதிக்குத் தற்போது துணை ஆட்சியர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

அடித்தளமிட்ட அம்மா

“சின்ன வயசுல இருந்தே, ஊரே பாராட்டுற மாதிரி பெரிய ஆபீசரா வரணும்னு அம்மா சொல்லுவாங்க. நானும்  வீட்டுக் கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு நல்லாப் படிச்சேன். பிளஸ் டூ வரைக்கும் நான்தான் வகுப்பில் முதல் மாணவி. அப்போ எனக்கு டாக்டராகணும்னு ஆசை. கட் ஆஃப் மார்க் குறைவாக இருந்ததால எம்.பி.பி.எஸ். படிக்க முடியலை. அதனால் இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சியில் டிப்ளோமா படித்தேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தொகுப்பூதிய அடிப்படையில் 2004-ல் அரசு ஆசிரியர் பணியை பெற்றேன்” என்கிறார் நிறைமதி.

ஆசிரியர் பணியாற்றிக்கொண்டே தொலைதூரக் கல்வியில் எம்.ஏ., பி.எட். படித்தார். பிறகு கணித ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். இதனிடையே திருமணம் ஆனது. ஆசிரியர் பணியாற்றினாலும் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற எண்ணமும் பெரியதாக எதையும் சாதிக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் நிறைமதியை வாட்டின. “அப்போதான் ஐஏஎஸ் பயிற்சிக்காக யூபிஎஸ்சி தேர்வெழுத நினைத்தேன். ஆனால், அதற்கு எப்படி விண்ணப்பிப்பது, எவற்றையெல்லாம் தேர்ந்தெடுத்துப் படிப்பது என்பதெல்லாம் தெரியாமல் இருந்தேன். 

அப்போது மனித நேய அறக்கட்டளை சார்பில்  ஐஏஎஸ் தேர்வுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கும் விளம்பரத்தைப் பற்றித் தெரியவந்தது. அந்தப்  பயிற்சிக்குத் தகுதித் தேர்வு நடத்தப்பட்டுத்தான் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். நான் அந்தத் தேர்வில் வெற்றிபெற்றுப் பயிற்சிக்காக 2007-ல் சென்னைக்கு வந்து விடுதியில் தங்கிப் படிக்கத் தொடங்கினேன்” என்கிறார் அவர்.

வெற்றிபெற உதவிய தோல்விகள்

ஐஏஎஸ் தேர்வெழுத, தான் பார்த்துவந்த ஆசிரியர் பணியிலிருந்து நீண்டகால விடுப்பு எடுத்துக்கொண்டு படிக்கத் தொடங்கியுள்ளார். “நான் சென்னைக்குப் படிக்க வந்தபோது என்னுடைய மகனுக்கு இரண்டு வயது. கணவரும் மாமியாரும்தான் குழந்தையைப் பார்த்துக்கொண்டார்கள். அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் என்னால் இந்த நிலைமைக்கு உயர்ந்திருக்க முடியாது” என்கிறார் நிறைமதி.

ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராவது மட்டுமில்லாமல் இடையில் வரும் மற்ற அரசுத் துறை சார்ந்த தேர்வுகளையும் அவர் எழுதியுள்ளார். ஆனால்,  பல தேர்வுகளை எழுதி முதல் நிலையைத் தாண்டினாலும் அடுத்த நிலைக்குச் செல்லும்போது சிறு சிறு தவறுகளால் வாய்ப்பு கிடைக்கவில்லை அவருக்கு.  இதனால் சொந்த ஊருக்குத் திரும்பிய நிறைமதி 2013-ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். 

இந்நிலையில் 2015-ல் நடைபெற்ற மாவட்டக் கல்வி அலுவலருக்கான தேர்வை எழுதி அதில் நேர்முகத் தேர்வுவரை சென்றார்.  “மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வில் நிச்சயமாக எனக்கு வேலை கிடைத்துவிடும் என முழு நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், ஏதோவொரு காரணத்தால் கிடைக்கவில்லை. ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக  மத்திய, மாநில அரசுப் பணியாளர்களுக்கான தேர்வை எழுதினேன்.

மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வில் நேர்முகத் தேர்வு வரை சென்றும் வாய்ப்பு கிடைக்காததால் சோர்ந்துவிட்டேன். அப்போதான் ஏன் எனக்கு இவ்வளவு முயற்சிக்குப் பிறகு வாய்ப்பு கிடைக்கவில்லை? எந்த இடத்தில் நான் தவறு செய்கிறேன் என்பதை ஆராயத் தொடங்கினேன். தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடம் எனக்குத் தைரியமூட்டியது.

தன்னம்பிக்கை கொள்ளவும் செய்தது. தவறிலிருந்து சரியான வழிக்குப் பாதை கிடைத்தது. தேர்வில் கையெழுத்து சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டிலேயே மாதிரித் தேர்வுகளை எழுதி, என்னுடைய கையெழுத்துக்கு நானே மதிப்பெண் அளித்துக்கொள்வேன். இப்படிப் பல சோதனைகளை எனக்கு நானே செய்துபார்த்தேன்” என்கிறார்.

ஓராண்டுக்குப் பிறகு கிடைத்த வெற்றி

தோல்விகளைக் கண்டு முடங்கிவிடாமல் அடுத்தகட்டப் பணிகளில் மூழ்கிப்போனார் நிறைமதி. இதனால்தான் 2017-ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வில் தன்னால் முழுமையாகக் கவனம்செலுத்த முடிந்தது என்கிறார். “ஓராண்டு கழித்து  வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் நான் தேர்ச்சி பெற்றிருந்தேன். கடந்த மாதம் நடந்த நேர்முகத் தேர்வில் எனக்குத் துணை ஆட்சியருக்கான பணி ஆணை வழங்கப்பட்டது. அப்போது உண்டான மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

ஒவ்வொரு முறையும் தேர்வெழுதிவிட்டு வரும்போது இந்தத் தேர்வில் பாஸ் ஆகிடுவேனா என ஏக்கத்துடன் காத்திருப்பார் என் அம்மா. ஆனால், நான் இப்போது துணை ஆட்சியர் ஆகிவிட்டேன் என்று சொல்லி அவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த முடியவில்லை, சில மாதங்களுக்கு முன்பு அம்மா எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டார்.

எனக்காகப் பல கஷ்டங்களைத் தாண்டி ஊரே பாராட்டும் நபராக வரவேண்டும் என்ற விதையை என்னுள் ஊன்றியவர் அம்மாதான். இப்போது அவர் இல்லை என்பது வேதனையாக இருக்கிறது” என்று சொல்லும்போதே நிறைமதியின் கண்களில் நீர் நிறைகிறது.

விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தெளிவான குறிக்கோள், தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளும் மனப்பான்மை போன்றவையே நிறைமதியைத் தற்போது துணை ஆட்சியராக உயர்த்தியுள்ளன.

படங்கள்: பிரகாஷ்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close