[X] Close

மதுரை-சென்னை இடையே பகலில் புதிய ரயில் சேவை தொடக்கம்: 6.30 மணி நேரத்தில் செல்லும் ‘தேஜஸ்’ சொகுசு ரயில்


tehas-train

  • kamadenu
  • Posted: 02 Mar, 2019 11:56 am
  • அ+ அ-

ந.சன்னாசி

மதுரை- சென்னைக்கு சுமார் 6.30 மணி நேரத்தில் செல்லும் பகல்நேர ‘தேஜஸ்’ சொகுசு ரயிலை, பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். மதுரை- சென்னைக்கு மதுரை வழியாக இரவு நேரத்தில் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்கின்றன. பகலில் வைகை, குருவாயூர் ரயில்கள் மட்டும் செல்கின்றன. ஏற்கெனவே மும்பை- கோவா இடையே இந்த சொகுசு ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், மதுரை - சென்னை இடையே இந்த சொகுசு ரயிலை இயக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதற்காக சர்வதேசத் தரத்துடன் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட தேஜஸ் ரயில் பெட்டிகள், சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப்-ல் கடந்த ஆண்டு நவம்பரில் தயாரிக்கப்பட்டன. இந்நிலையில் கன்னியாகுமரியில் நேற்று பல நலத்திட்டங்களை தொடங்கிவைக்கவும், பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவும் வந்த பிரதமர் நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் மதுரை- சென்னை இடையே செல்லும் தேஜஸ் சொகுசு ரயிலின் இயக்கத்தை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி வைத்தார்.

மதுரையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட 13 பெட்டிகளுடன், முதல் பிளாட்பாரத்தில் இருந்து தேஜஸ் ரயில் புறப்பட்டது. இதில் சுமார் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். வார நாட்களில் வியாழக்கிழமை தவிர, மற்ற அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும். மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் தேஜஸ் ரயில் இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது. மறு மார்க்கமாக தினமும் காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பி பகல் 12.30 மணிக்கு மதுரையை வந்தடைகிறது. கொடைரோடு, திருச்சி ரயில் நிலையங்களில் மட்டும் இந்த ரயில் நிற்கும். 

மொத்தம் 13 பெட்டிகள் இணைக்கப் பட்டுள்ளன. 56 பேர் பயணிக்கும் உயர்ரக குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி பெட்டி ஒன்றும், தலா 78 பேர் பயணிக்கும் குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி கொண்ட 12 பெட்டிகளும் இடம் பெற்றுள்ளன. அனைத்துப் பெட்டிகளிலும் சிறப்பான உணவக வசதி உள்ளது. எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு முன்பதிவு செய்வது போல இந்த ரயிலுக்கும் முன்பதிவு செய்யலாம். இந்த ரயில் இயக்கத்தைக் காண பிளாட்பாரத்தில் ஏராளமானோர் திரண்டனர். விழாவில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜு, மணிகண்டன், ரயில்வே கோட்ட மேலாளர் நீனு இட்டியாரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கோட்ட முதுநிலை தொழில்நுட்பப் பொறியாளர் சித்தின் நெல்சன் கூறியதாவது: இந்த சொகுசு ரயிலுக்கு பயணிகளிடம் அமோக வரவேற்பு இருக்கும். இதில் களைப்பின்றி பயணம் செய்யலாம். ரயில் பெட்டிகளில் பைபர் மற்றும் பிளாஸ்டிக் தகடுகளால் ஆன அழகிய உட்புற தோற்றம், சொகுசாக அமர்ந்து பயணம் செய்யும் வசதியான இருக்கைகள், ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் சிறிய வீடியோ எல்ஈடி திரைகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ரயிலில் டிவி, ஜிபிஎஸ், இணையதளம் உட்பட பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன. எந்த இடத்தில் ரயில் செல்கிறது என் துல்லியமாக அறியும் வசதி, ஒவ்வொரு பெட்டியிலும் 6 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. ஒவ்வொரு இருக்கையிலும் செல்போன் சார்ஜர் செய்யும் வசதி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பயணி கீதா சுவாமிநாதன்: முதன்முறையாக தேஜஸ் ரயிலில் பயணிப் பது மகிழ்ச்சி. மற்ற ரயில்களை விட பாதுகாப்பாக உள்ளது. மூத்த குடிமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தனியார் பஸ்களில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுத்து சென்னை செல்வ தற்கு இந்த ரயிலில் சொகுசாக பயணிக் கலாம் என்றார்.

பயணி விக்னேஷ்: ‘தேஜஸ்’ ரயில் பற்றி கேள்வி பட்டு, நேற்று முன்தினம் நள்ளிர வில் தான் இணையம் மூலம் பதிவு செய்தேன். 6.30 மணி நேரத்தில் சென்னை செல்லலாம் என்பதால் ஐ.டி. துறையில் பணிபுரிபவர் களுக்கும், தொழில் முனைவோர் களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நடுத்தர மக்களும் பயணிக்கும் வகை யில் கட்டணத்தை இன்னும் குறைத்தால் நல்லது. ரயிலில் ஸ்மார்ட் ஜன்னல், தானியங்கி பிரெஷ்னர் டிஸ்பென்சர், நவீன கழிப்பறைகள் உள்ளன என்றார்.

கட்டண விவரம்: உயர்தர ஏசி பெட்டியில் பயணிக்க சைவ, அசைவ உணவுகளுடன் தலா ஒருவருக்கு கட்டணம் ரூ. 2295, உணவு இன்றி ரூ.1940. ஏசி பெட்டியில் உணவுடன் தலா ஒருவருக்கு ரூ.1195. உணவின்றி பயணிக்க ரூ.895.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close