[X] Close

நாகேஷிடம் நம்பியார் சொன்ன ரகசியம்!


nambiyar

‘தேன்நிலவு’ படப்பிடிப்பில் மனைவி ருக்மணியுடன்

  • kamadenu
  • Posted: 01 Mar, 2019 17:39 pm
  • அ+ அ-

புகழின் உச்சாணிக் கொம்பில் சஞ்சரித்த திரைப் பிரபலங்கள் எல்லோரும் தங்கள் வாழ்க்கைச் சரிதத்தை எழுத விரும்பியதில்லை. அப்படிப்பட்டவர்களின் திரை வாழ்க்கையையும் நிஜ வாழ்க்கையையும் அருகிலிருந்து பார்த்து வியந்த வாரிசுகளும் சீடர்களும், பெரும் பிரமிப்புடன் அதைச் செய்திருக்கிறார்கள்.

தன் தாத்தா எம்.என்.நம்பியாரின் நிஜ பிம்பத்தையும் நிழல் பிம்பத்தையும் தானறிந்த வகையில் ‘நம்பியார் சுவாமி: தி குட், தி பேட் அண்ட் தி ஹோலி’ என்ற தலைப்பில் வாழ்க்கை வரலாற்று நூலாக ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார் தீபக் நம்பியார். இவர், நம்பியாரின் மகள் வயிற்றுப் பேரன்.

சென்னையில் மார்ச் 7ம் தேதி நூல் வெளியிடப்படுகிறது. புத்தகம் பற்றியும் அதை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்ட தன் தாத்தா பற்றியும் நம்முடன் மனம் திறந்தார்…. அவருடனான உரையாடலின் ஒரு பகுதி…

உங்கள் தாத்தா பற்றிய நூல் எழுதத் தூண்டியதற்கு அவரது நூற்றாண்டு என்பதைத் தாண்டிய காரணம் இருக்கிறதா?

என்னை வளர்த்தது முழுவதுமே தாத்தாதான். அவரை நான் அப்பா என்றுதான் அழைப்பேன். 28-வது வயதில் அமெரிக்கா செல்லும்வரை அவருடன்தான் இருந்தேன். அங்கே போன பிறகு நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானறிந்த தாத்தாவைப் பற்றிப் பொழுதுபோக்காக எழுதத் தொடங்கினேன்.

பின்னர் எழுத எழுதப் பக்கங்கள் கூடின. ஷூட்டிங்கில் நடந்த நிறைய விஷயங்களை என்னுடன் பகிர்ந்திருக்கிறார். அதையெல்லாம் நினைவுபடுத்தி எழுத நினைத்தபோது அது அவரது ஆளுமையை முன்வைக்கும் விரிவான புத்தகமாக உருவாகியிருந்தது.

நூலில் தாத்தாவைப் பற்றி வேறு என்ன பகுதிகள் இடம்பெற்றுள்ளன?

தாத்தாவுடைய 4 வயதில் தொடங்கி குடும்ப விவரங்களைக் கொடுத்திருக்கிறேன். அவர் எப்போது கண்ணனூரிலிருந்து ஊட்டிக்குப் போனார், நாடகக் குழுவில் எப்படிக் கஷ்டப்பட்டு வளர்ந்தார், எம்.ஜி.ஆருடன் அவருடைய முதல் படம், அவர் உடனான நட்பு, இருவரும் சினிமாவுக்குள் எப்படி ஒரே நேரத்தில் வந்தார்கள், அவர்களது மாடர்ன் தியேட்டர், ஜூபிடர் பிக்சர்ஸ் காலம் பற்றியெல்லாம் முடிந்தவரை சரியான தகவல்களைத் திரட்டி எழுதியிருக்கிறேன்.

1930-களுக்குப் பிறகுதான் சினிமா துறை மாற்றம் கண்டது. அந்தக் காலகட்டத்தில்தான் எம்ஜிஆரும் தாத்தாவும் சினிமாவுக்குள் வந்தார்கள். நூலில் ‘ஏ வேர்ட்ஸ் ஆப் லெஜண்ட்’ என்ற ஒரு பகுதி உண்டு. இதில் தாத்தாவைப் பற்றி கருணாநிதி, ஜெயலலிதா, மனோரமா, ரஜினி, சி.வி.ராஜேந்திரன், பி.வாசு எனப் பலரும் பகிர்ந்த விஷயங்கள் உண்டு.

தாத்தாவுடைய கட்டுக்கோப்பான உடல், சண்டைகளில் அவர் கொண்டிருந்த நாட்டம் பற்றி பேசியிருக்கிறீர்களா?

இரண்டுமே இருக்கின்றன. எம்.ஜி.ஆரும் நம்பியாரும் கத்திச் சண்டையை எவ்வளவு சிறப்பாக இடுவார்கள் என்பது எல்லோருமே அறிந்ததுதான். அவரது கட்டுக்கோப்பான உடல் பற்றியும் எல்லோருக்கும் தெரியும். உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.

விளையாட்டு என்றால் அவருக்கு உயிர். தினமும் டென்னிஸ் தினமும் விளையாடுவார். குத்துச்சண்டையில் அவருக்குத் தெரியாத டெக்னிக்குகளே இல்லை. 85 வயதுக்குப் பிறகுதான் அவருக்கு லேசாகத் தொப்பையே வந்தது.

வயதான பிறகும் தாத்தாவுக்கு முடி நரைக்காமல் இருந்தது என்று கேள்விப் பட்டிருக்கிறோம். அது உண்மையா?

உண்மைதான். தாத்தாவுக்கு 80 வயதுக்குப் பிறகுதான் முடியே நரைக்கத் தொடங்கியது. பார்ப்பவர்கள் எல்லோரும் டை அடித்திருக்கிறாரோ என்றே சந்தேகப்படுவார்கள். ஒரு முறை நடிகர் நாகேஷ், தாத்தாவிடம் ‘உங்களுக்கு முடி நரைக்காமல் இருக்கிறதே எப்படி?’ என்று படப்பிடிப்பில் ரகசியத்தைக் கேட்டிருக்கிறார்.

‘அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், காலையில 4 மணிக்கு எழுந்து மெரினா பீச் வந்துவிடு’ என்று தாத்தா சொல்லியிருக்கிறார். ரகசியத்தைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் 4 மணிக்கெல்லாம் நாகேஷ் சாரும் கிளம்பி மெரினாவுக்கு வந்து கேட்டிருக்கிறார்.

அதற்கு தாத்தா, ‘ஒரு நூறு மில்லி கறுப்பு டை உள்ள பாட்டிலை வாங்குவேன். அந்த டையை நான் தலையில் பூச மாட்டேன். அதை அப்படியே குடித்துவிடுவேன். அதான் ரகசியம்’ என்று சொல்லி முகத்தை சீரியஸாக வைத்துக்கொள்ள, உலகையே சிரிக்க வைத்த நாகேஷ், அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்.

என்றாலும் சிரித்து முடித்ததும் நம்மை இப்படி ஏமாற்றிவிட்டாரே என்று முகத்தை ‘உர்’ என்று வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாரம். அன்று நாள் முழுக்க படப்பிடிப்பில் இதைச் சொல்லிச் சொல்லி தாத்தாவை நாகேஷ் திட்டிக்கொண்டே இருந்தாராம். அவர் எப்போதுமே மன அழுத்ததோடு இருந்ததே இல்லை. ஏதாவது காமெடி செய்துகொண்டே இருப்பார்.

கவலை இல்லாமல் இருந்ததுகூட அவரது முடி நரைக்காததற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

உங்கள் தாத்தாவின் வெற்றியில் உங்கள் பாட்டியின் பங்களிப்பைப் பற்றிச் சொல்லுங்கள்.

தாத்தா ஷூட்டிங் போய் சம்பாதிப்பதோடு சரி. குடும்பம் முழுவதையுமே ருக்மணி பாட்டிதான் கவனித்துகொண்டார். வேலைக்கு அவர் அஞ்சி நின்றதை நான் பார்த்ததே இல்லை. இருவருக்கும் இடையே உண்மையான அன்பும் மரியாதையும் பரஸ்பரம் இருந்தன. சின்னச் சின்ன சண்டை வந்தால்கூட, கடைசியில் தாத்தா அமைதியாகப் போய்விடுவார். பாட்டி வைத்ததுதான் சட்டம். வீட்டுக்கு என்னென்ன தேவை என்பதை எல்லாம்கூட பாட்டிதான் முடிவு செய்வார்.

பிள்ளைகளுடன் நம்பியார் எப்படி நேரத்தை செலவிட்டார்?

தாத்தா பிஸியாக நடிச்ச காலத்தில் பாட்டியோடவோ அவர்களது பிள்ளைகளோடவோ நேரத்தைச் செலவிட்டதே இல்லை. தினமும் 3 ஷூட்டிங் செல்வார். காலை 6 மணிக்குக் கிளம்பினால், இரவு 12 மணிக்குத்தான் வீடு திரும்புவார். பிள்ளைகளைக்கூட அவரால் சரியாகப் பார்க்க முடிந்ததில்லை. என்னுடைய அம்மா ஸ்நேகா நம்பியார் என்றால் அவருக்கு உயிர். அம்மா எது சொன்னாலும் தட்டாமல் கேட்பார்.

படங்கள் உதவி: ஞானம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close