[X] Close

பரமத்திவேலூரில் பிளாட்டினம் இருக்கா?- ஆய்வை நிறுத்திய அதிகாரிகள் குழப்பத்தில் பொதுமக்கள்


platinum

  • kamadenu
  • Posted: 28 Feb, 2019 14:19 pm
  • அ+ அ-

ஒரு நாட்டின் தங்க இருப்பை வைத்தே, அந்த நாட்டின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. இந்த வகையில் தங்கம் மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது. அதேசமயம், தங்கத்தைக் காட்டிலும் விலையுயர்ந்த உலோகங்களும்  உண்டு. தங்கத்தைக் காட்டிலும் பல மடங்கு மதிப்பு மிக்கது பிளாட்டினம்.

பிளாட்டினத்தை ‘வெள்ளைத் தங்கம்’ என்றே அழைக்கின்றனர் ஆய்வாளர்கள். வெள்ளியைக் காட்டிலும் கூடுதல் பளபளப்புடைய பிளாட்டினத்தின் பயன்பாடு கி.மு. 700-ம் ஆண்டுகளிலேயே தொடங்கி விட்டதாகவும், 11-ம் நுாற்றாண்டில் ஸ்பானிஷ் நாட்டில் பிளாட்டின ஆபரணங்கள் பெருமளவு பயன்படுத்தப் பட்டதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிக வெப்பத்தை தாங்கக்கூடிய, அரிதான உலோகமாக கருதப்படும் பிளாட்டினம்,  பல்வேறு தொழில்துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், பிளாட்டின படிமங்கள்,  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் அருகேயுள்ள கருங்கல்பட்டி கிராமத்தில் இருப்பதாக  மத்திய அரசின் புவியியல் ஆய்வுத் துறை (ஜியோலாஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா) கடந்த பத்தாண்டுகளுக்கு முன் கண்டறிந்தது.

இதையடுத்து,  2008-ல் மத்திய புவியியல் ஆய்வுத் துறையும், தமிழ்நாடு கனிமள நிறுவனமும் இணைந்து, பிளாட்டினம் படிமங்கள் எங்கெங்கு உள்ளன? எத்தனை அடி ஆழத்தில் உள்ளது? எவ்வளவு சதவீதம் பிளாட்டினம் உள்ளது? ஒருவேளை பிளாட்டினம் கிடைத்தால், அது உலகத்தரம் வாய்ந்ததாக இருக்குமா? என்றெல்லாம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. தங்கத்தைக் காட்டிலும் விலை மதிப்புமிக்கதாக கருதப்படும் பிளாட்டினம், கருங்கல்பட்டி மட்டுமின்றி, அருகேயுள்ள தொட்டியம்தோட்டம், பாமகவுண்டம்பாளையம், தாசம்பாளையம், சித்தம்பூண்டி கிராமங்களிலும் இருப்பது தெரியவந்தது.  நாடு சுதந்திரமடைவதற்கு முன்,  இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள், இப்பகுதியில் சுரங்கம் தோண்டி, கனிம வளங்களை வெட்டி எடுத்துச் சென்றதற்கான தடயங்களும் கண்டறியப்பட்டன.

பிளாட்டினம் படிவம் இருப்பதை உறுதிசெய்ய, இயந்திரம் மூலம் பூமியில் பல நூறு அடிவரை துளையிட்டு, குழாய்கள் மூலம் உருளை வடிவிலா கற்களை வெளியே எடுத்து, தரம் பிரித்தனர் மத்திய புவியியல் ஆய்வுத் துறையைச் சேர்ந்த  ஆராய்ச்சியாளர்கள்.

பின்னர், அவற்றில் தரமானக் கற்களை தனியாக எடுத்து, அவற்றை மாவுபோல அரைத்து, மத்திய புவியியல் ஆய்வுத் துறைக்குச் சொந்தமான ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பும் பணியிலும்  ஈடுபட்டனர்.

இதனால், பிளாட்டினம் சுரங்கம் அமைய வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்பட்டது. மேலும், பிளாட்டினம் சுரங்கம் அமைந்தால்  அரசுக்கு வருவாய் கிடைப்பது மட்டுமின்றி,  வேலைவாய்ப்பும் பெருகும். இதன்மூலம், பல வகைகளிலும் நாமக்கல் மாவட்டம் ஏற்றமடையும்.

சர்வதேச அளவிலும் நாமக்கல் மாவட்டம் பெயர் பெறும் எனவும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்,  2016-ம் ஆண்டுக்குப் பின், திடீரென  இந்த ஆய்வுப் பணி நிறுத்தப்பட்டது. ஆய்வு மேற்கொள்வதற்காக பரமத்திவேலூர் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மத்திய புவியியல் ஆய்வுத் துறை அலுவலகமும் மூடப்பட்டு விட்டது. இதனால், பிளாட்டின படிமங்கள் இருப்பு உறுதி செய்யப்பட்டுவிட்டதா அல்லது இல்லையா என்பது குறித்த விவரங்கள் மர்மமாகவே உள்ளன.

இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறும்போது, “கருங்கல்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பிளாட்டினம் இருப்பதாகக் கூறி, தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், அந்தப் பணிகள் இரு ஆண்டு களுக்கு முன்  நிறுத்தப்பட்டன. ஆய்வு மேற்கொண்டவர்களும்,  இடத்தை காலிசெய்துவிட்டுச் சென்றுவிட்டனர். மிஞ்சியது குழப்பம்தான்” என்றனர்.

நாமக்கல் மாவட்ட கனிமவளத் துறை அதிகாரிகள் கூறும்போது, “பரமத்திவேலூரில் பிளாட்டினம் இருப்பு குறித்த ஆய்வுப் பணிகளை, மத்திய அரசின் புவியியல் ஆய்வுத் துறையினர்தான்  மேற்கொண்டனர். இதில், கனிம வளத் துறையினரின் பங்கு எதுவுமில்லை” என்றனர்.

வீழ்ச்சியடைந்த நிலத்தின் மதிப்பு!

பரமத்திவேலூர் அருகேயுள்ள கருங்கல்பட்டி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பிளாட்டினம் படிம இருப்பு குறித்த ஆய்வுப் பணியை மத்திய அரசின் புவியியல் ஆய்வுத் துறை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில்,  பிளாட்டினம் சுரங்கம் அமைய வாய்ப்புள்ளதாக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டடது. இதற்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்படலாம் எனவும் தவல்கள் பரவின. இதனால், அப்பகுதியில் உச்சத்தில் இருந்த நிலங்களின் மதிப்பு மளமளவென சரிந்தது. விளை நிலங்களையும் சிலர் விற்பனை செய்யத்  தயாராகினர். ஆனால், பிளாட்டின சுரங்கத்தின் நிலைமை என்னவென்றே தற்போது தெரியாததால், நிலங்களின் மதிப்பு பழைய  நிலைக்கு திரும்பியுள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

பிளாட்டின படிமங்கள் இருப்பதாக கண்டறியப்பட்ட கிராமங்களில், பூமியில் சில அடி ஆழத்தில் வண்ணக் கற்கள் கிடைக்கின்றன. இவற்றைக் கண்டெடுக்கும் நபர்கள், அவற்றை பாலீஷ் செய்து, விற்பனை செய்துவந்ததாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close