[X] Close

அரசியல்வாதிகளே... அட்டென்ஷன் ப்ளீஸ்!


thanneer-pandhal

  • வி.ராம்ஜி
  • Posted: 27 Feb, 2019 10:41 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

இந்தக் கட்சி அந்தக் கட்சி என்று பாகுபாடே இல்லாமல், பரபரப்புச் சூட்டைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள். காரணம்... விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல். பிப்ரவரி முடிந்து மார்ச் நெருங்கும்போதே, சுட்டெரிக்கத் தொடங்கிவிடும் வெயில், இந்த முறை எக்குத்தப்பாக இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.

எப்போதும் தப்பாமல் தப்பிக்கொண்டே இருக்கிறது மழை. ஆனால் வருடந்தோறும் தப்பாமல், சுள்ளெனக் கிளம்பி ரவுண்டுகட்டி அடிக்கிறது வெயில். இதோ... பிப்ரவரி முடிந்து மார்ச் தொடங்கப் போகிறது. ‘இந்த வெயிலோட ஆட்டத்தை பாக்கத்தானே போறீங்க’ என்பது மாதிரி, மூன்று மாவட்டங்களில் சதமடித்து ‘நல்லா கெளப்பறாய்ங்கய்யா பீதியை’ என்பது மாதிரி, ஆகிவிட்டது வெயிலின் தாக்கம்.

கரை வேட்டிப் பாகுபாடுகள், கட்சியிலும் அரசியலிலும்தானே. தாகத்துக்கு ஏது பிரிவினைகள்? மக்களின் தாகத்தைப் போக்க, அரசியல்வாதிகள் கொஞ்சம் முயற்சி செய்தால், லட்சக்கணக்கான ஓட்டுகள் விழுகின்றனவோ இல்லையோ... கோடிப் புண்ணியமாகப் போகும் உங்களுக்கு!

தண்ணீரா... காவிரி, முல்லைப்பெரியாறு, கிருஷ்ணா என்றெல்லாம் பயந்துவிடவேண்டாம். தமிழகம் முழுவதும் உள்ள தெருமுனைகள், முக்கிய சாலைகள், டிராபிக் சிக்னல் பாயிண்டுகள், மருத்துவமனை வாசல்கள், பேருந்து நிறுத்தங்கள் என மக்கள் வந்து செல்லும் இடங்களில், பந்தலும் தண்ணீர்ப்பந்தலும் அமைத்து உதவுங்களேன்.

மோர், பானகமெல்லாம் கூட தேவையில்லை. நிற்பதற்கு ஒரு பந்தல், குடிப்பதற்கு ஒரு டம்ளர் தண்ணீர் என்று இருந்தாலே, இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம். வறண்ட தொண்டையை லேசாக நனைத்தாலே புத்துயிர் பெற்ற குதூகலத்தைக் கொடுப்பது, இந்தத் தண்ணீர்தான்.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். தண்ணீரின் அருமை கூட வெயிலில் தெரியும். எனவே, எப்போதும் அரக்கபரக்க வெயிலில் ஓடியாடிக்கொண்டிருப்பவர்களுக்கும் எப்போதும் வெயிலில் நின்றுகொண்டே, போக்குவரத்தை சரிசெய்துகொண்டிருக்கும் போலீசாருக்கும், இந்த தண்ணீர்ப்பந்தல், மிகப்பெரிய ரிலாக்ஸ்; ஆகச்சிறந்த தாகசாந்தி என்பதை அரசியல்வாதிகள் உணர்ந்து, உதவுங்களேன் என்கிறார்கள் பொதுஜனங்கள்.

முக்கியமாக, டிராபிக் சிக்னல் பாயிண்ட்டில், பச்சை விழுவதற்காக, 99, 98, 97 என்று கடும் வெயிலில் காத்திருப்பவர்கள் ஏராளம். வண்டி சூடு. பெட்ரோல் சூடு. வெயில் சூடு. தார்ச்சாலை சூடு. எனவே, சிக்னலைக் கடந்ததும் சிக்கலில்லாத இடமாகப் பார்த்து, தண்ணீர்ப்பந்தல் அமைக்கலாம் என்று ஐடியா கொடுக்கிறார்கள் பலரும்.

அதேபோல், கடைவீதி என்பதையெல்லாம் தாண்டி, கடைகளும் மிகப்பிரமாண்டமான ஜவுளிக்கடைகளும் ஷாப்பிங் மால்களும் முக்கியமான சாலைகளிலேயே வரத்தொடங்கிவிட்டன. இந்த இடங்களில், தண்ணீர்ப்பந்தல் அமைப்பது, ஏகப்பட்ட மக்களின் வயிற்றில் நீர்வார்க்கும்; குளிரச்செய்யும் என்பது உறுதி.

தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுங்க என்பார்கள். மன்னர்கள் காலத்தில் ஏரி,குளமெல்லாம் வெட்டினார்கள். புண்ணியம் தேடிக்கொண்டார்கள். இப்போதைய அரசியல்வாதிகள், தண்ணீர்ப்பந்தல் அமைத்தாலே, மகா புண்ணியம்தான். மறந்தும் இருந்துவிடாமல், தமிழகம் முழுவதும் தண்ணீர்ப்பந்தல் அமையுங்களேன் அரசியல்வாதிகளே!

இது, மக்களுக்கும் உதவி. பிரச்சாரத்துக்கு வெயிலில் அலைகிற கட்சிக்காரர்களுக்கும் பேருதவி. குறைந்த செலவு... ஆனால் பெரிய புண்ணியம். 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close