[X] Close

கதையை சரிபண்ணிடாலாம்னு சொன்ன ஆர்.சுந்தர்ராஜன்; டென்ஷனான பாரதிராஜா


rsundarrajan-bhagyaraj

ஆர்.சுந்தர்ராஜன் - கே.பாக்யராஜ்

  • வி.ராம்ஜி
  • Posted: 27 Feb, 2019 09:18 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

கதையை சரிபண்ணிடலாம் சார் என்று சொன்ன ஆர்.சுந்தர்ராஜனின் பேச்சைக் கேட்டதும் டென்ஷனாகிவிட்டார் இயக்குநர் பாரதிராஜா.

இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய முதல்படம் ‘பயணங்கள் முடிவதில்லை’. கோவையைச் சேர்ந்த ஆர்.சுந்தர்ராஜனும் கே.பாக்யராஜும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். உள்ளூரில் நிறைய நாடகங்களை இயக்கி மேடையேற்றியிருக்கிறார்கள்.

ஒருகட்டத்தில் பாக்யராஜ், சென்னைக்கு வந்தார். இயக்குநர் பாரதிராஜாவின் முதல்படமான ‘16 வயதினிலே’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அடுத்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் முதலான படங்களிலும் பணியாற்றிய பாக்யராஜ், தனது முதல் படத்தை இயக்க பாரதிராஜாவிடம் இருந்து வெளியே வந்தார்.

அந்த சமயத்தில், பாக்யராஜை ’புதிய வார்ப்புகள்’ படத்தின் நாயகனாக்கினார் பாரதிராஜா. அந்த சமயத்தில் தன் நண்பர் ஆர்.சுந்தர்ராஜனிடம், ‘நானும் படம் பண்ண வெளியே கிளம்பிட்டேன். அதனால பாரதிராஜா சாருக்கு, ஆள் வேணும். எப்படியாவது அவர்கிட்ட பேசி உன்னை அஸிஸ்டென்டா சேத்துவிடுறேன்’ என்று சொன்னார்.

அப்போது கதையில் கொஞ்சம் சிக்கல் இருப்பது குறித்தும் பாக்யராஜ் சொல்லியிருக்கிறார்.

ஒருநாள், சுந்தர்ராஜனை அலுவலகத்தில் உட்காரச் சொல்லிவிட்டு, ‘அஞ்சு நிமிஷத்துல ரூம்க்குப் போயிட்டு சட்டையை மாட்டிட்டு வந்திடுறேன். அதுக்குள்ளே டைரக்டர் சார் வந்துட்டார்னா, ‘இப்ப வந்துருவேன்’ன்னு சொல்லு. வேற எதுவும் பேசாதே. நான் வந்து பேசிக்கிறேன்’ என்று சொல்லிச் சென்றார் பாக்யராஜ்.

அப்போது, அங்கே, பாரதிராஜா வந்தார். ‘ராஜா இப்ப வந்துருவான் சார்’ என்றார். அவர் அமைதியாக இருந்தார். அடுத்த இரண்டாவது நிமிடத்தில், ‘ராஜா வெளியே போயிட்டான் போல. கதைல கொஞ்சம் சிக்கல் இருக்கறதா நீங்க நினைக்கிறீங்கன்னு சொன்னான். ஒரு பிரச்சினையும் இல்ல சார். கதையை சரிபண்ணிடலாம்’ என்று ஆர்.சுந்தர்ராஜன் சொல்ல, டென்ஷனாகிவிட்டார் பாரதிராஜா.

‘ஆர்.சுந்தர்ராஜனை அமைதியா இருக்கச் சொன்னேன். கேக்கல. டைரக்டர் சார் செம கோபமாயிட்டார். அப்புறம் அவர்கிட்ட எப்படி சேத்துவிடமுடியும்?

ஆனா, ஆர்.சுந்தர்ராஜன், யார்கிட்டயும் அஸிஸ்டெண்டா இல்லாமலேயே டைரக்டரானார். முதல் படமான ‘பயணங்கள் முடிவதில்லை’ சில்வர் ஜூப்ளி நாட்களையெல்லாம் கடந்து ஓடுச்சு’ என்று தன் நண்பன் ஆர்.சுந்தர்ராஜன் குறித்து பாக்யராஜ் விழா ஒன்றில் தெரிவித்தார்.

1982ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி ‘பயணங்கள் முடிவதில்லை’ திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட 37 வருடங்களாகிவிட்டன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close