[X] Close

ஒரே வெண்ணிலா; ஒரே மயிலு; ஒரே விஜி! – ஸ்ரீதேவி நினைவுகள்


sridevi

ஸ்ரீதேவி

  • வி.ராம்ஜி
  • Posted: 24 Feb, 2019 20:49 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி 

 - இன்று (24.2.19) ஸ்ரீதேவி நினைவு தினம் 

சினிமாவில் ஒரு ரவுண்டு வருவது என்பது சாதாரணமில்லை. அதிலும் நடிகைகள் ஒரு கட்டம் வரை வருவார்கள். ஒரு வட்டத்துக்குள் புகழ் பெறுவார்கள். அடுத்தடுத்து, காணாமல் போய்விடுவார்கள். மார்க்கெட் போய்விட்டது என்றும் கிளாமர் கிராமர் காரணங்களும் சொல்லப்படும். ஆனால், தமிழ்த் திரையுலகில் இருந்து இந்தியத் திரையுலகமே அண்ணாந்து பார்த்த அந்த நடிகைக்கு, இணையாகச் சொல்லக்கூடியவர் இனி எப்போது கிடைப்பார் என்பது கேள்விக்குறிதான். அந்த ஆச்சரியக்குறி நாயகி… ஸ்ரீதேவி.

பளீர் விழிகளும் குண்டுக் கன்னங்களும் ரெட்டை ஜடையும் சீட்டிப்பாவாடை கவுனும் கொண்டு, சின்னக்குழந்தையாய் அறிமுகமானது முதலே, மக்களின் மனங்களில் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டு, உட்கார்ந்துகொண்டார் ஸ்ரீதேவி.

எம்ஜிஆர் தூக்கிக்கொண்டு பாட்டு பாடியிருக்கிறார். சிவாஜி, இதோ எந்தன் தெய்வம் என்று உருகி உருகிப் பாடி, தூங்கச் செய்திருக்கிறார். பிறகு இளம் வயதிலேயே இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் படத்தில், மிகப்பெரிய கேரக்டரில் நடித்து வெளுத்துவாங்கினார். ‘மூன்று முடிச்சு’ படத்தில் கமலைக் காதலிப்பார். ரஜினி விரட்டி விரட்டி இவரைக் காதலிப்பார். இறுதியில் ரஜினியின் அப்பாவைக் கல்யாணம் செய்துகொண்டு, ரஜினிக்கு சித்தியாகி, அவரை வறுத்தெடுப்பார். இத்தனைக்கும் ஸ்ரீதேவிக்கு அப்போது டீன் வயதுதான்.

பாரதிராஜாவின் முதல் படமான ’16 வயதினிலே’ தந்த மாற்றங்கள், தமிழ்த் திரையுலகையே அதிரடித்தன. மயிலு எனும் கதாபாத்திரத்தில், மயிலைப் போன்ற அழகுடனே அசத்தினார். ‘செந்தூரப்பூவே’ பாடலுக்கு இவரின் ஊஞ்சலாட்டத்தைக் கண்டு, அன்றைய இளைஞர்கள் சொக்கித்தான் போனார்கள். மனதில் ஊஞ்சல்கட்டி ஸ்ரீதேவியை ஆடச் செய்து அழகுபார்த்தார்கள்.

இதில் ஸ்ரீதேவிக்கு வில்லனாக இருந்த ரஜினிக்கு, கவிக்குயில் படத்தில் தங்கையாக இருந்தார். அடுத்து கெட்டகுணங்கள் கொண்டு பிஸ்னஸ் செய்யும் மோசக்கார கணவன் ரஜினிக்கு ’காயத்ரி’யாக நடித்தார்.

கமலுடன் கல்யாணராமன், குரு, வாழ்வேமாயம், மீண்டும் கோகிலா, வறுமையின் நிறம் சிகப்பு, நீலமலர்கள், சிகப்பு ரோஜாக்கள் என வரிசையாக நடித்தார். அதேபோல், ரஜினியுடன் தர்மயுத்தம், தனிக்காட்டு ராஜா, ப்ரியா (ஆனால் ரஜினிக்கு ஜோடி இல்லை இவர்), நான் அடிமை இல்லை, அடுத்த வாரிசு என்று வலம் வந்தார். ’ஜானி’யின் பாடகி கதாபாத்திரத்தில், அப்படியொரு மெச்சூரிட்டி நடிப்பை வெளிப்படுத்தி, பாந்தமான கேரக்டருக்கே உயிர் கொடுத்தார்.

இந்தப் பக்கம் சிவகுமார், விஜயகுமார் என்றெல்லாம் கூட நடித்தார். இவரின் பகலில் ஒரு இரவு பார்த்துவிட்டு, தூக்கம் தொலைத்தார்கள் இளைஞர்கள். இயக்குநர் பாலுமகேந்திரா கமலையும் ஸ்ரீதேவியையும் வைத்து இயக்கிய, ‘மூன்றாம் பிறை’ படத்தில் இவரைப் பார்த்துவிட்டு, ‘நடிப்பு ராட்ஷஷி’ என்று போற்றினார்கள். விஜி எனும் கேரக்டராகவே வாழ்ந்தார்.

தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என நடிக்காத மொழிப்படங்கள் இல்லை. இவரின் அழகையும் நடிப்பையும் கண்டு, இந்தித் திரைப்பட உலகம் மிரண்டு போனது. இவர் நடித்த ‘நாகின்’ படம், அதிரிபுதிரி வசூலைக் குவித்தது. அதைப் பார்த்துவிட்டு, அந்தப் படத்தை ‘நீயா’ என்ற பெயரில், ஸ்ரீப்ரியா  தமிழில் ரீமேக் செய்து, வெற்றியைச் சுவைத்தார் என்பது தனிக்கதை.

இந்தித் திரையுலகில் கனவுக்கன்னி என்று கொண்டாடப்பட்டவர்கள் இரண்டுபேர். முதலாமவர் ஹேமமாலினி. அடுத்து ஸ்ரீதேவி. இந்த இடத்தை இன்னும் எவரும் தொடவில்லை.

புடவைக்கட்டில் பாந்தம் காட்டுவார். பாவாடை தாவணியில் அழகு சேர்ப்பார். மாடர்ன் டிரஸ்ஸில் ஸ்டைலாக இருப்பார். ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ என்று நீச்சல் உடையில் வந்த போதும், ‘ஹேய் ராகம் ஒன்று’ என்ற பாடலுக்கு ராணி ஆடையில் ஆடியபோதும், மீண்டும் கோகிலாவில் மடிசாருடன் வந்து அமர்க்களப்படுத்திய போதும், அடுத்தடுத்த உயரங்களையும் உள்ளங்களையும் அடைந்துகொண்டே இருந்தார்.

திருமணம், குழந்தைகள், கணவர், வாழ்க்கை என்ற போதும் கூட, ஸ்ரீதேவியின் புகழ், அதே உச்சத்தில்! தனித்துவமிக்க நடிப்பை வழங்கியதால்தானோ என்னவோ… ஸ்ரீதேவிக்கு நிகரில்லை எனும் பெயரும்புகழும் பெற்றார்.

இன்று 24.2.19 ஸ்ரீதேவியின் நினைவு தினம். தங்கள் வீட்டுப் பெண்ணாகவே ஸ்ரீதேவியை வரித்துக்கொண்ட தமிழ் நல்லுலகில் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகின் எல்லா மொழிக்காரர்களும் கூட… ‘மயிலு ஸ்ரீதேவியை மறக்கவே முடியாது’ என்று அவரின் நினைவுடன் சிலிர்த்துச் சிலாகித்து பேசுகிறார்கள்.

சினிமாக்காரர்களை நட்சத்திரம் என்பார்கள். ஆனால் ஸ்ரீதேவி நிலா. ‘என் வானிலே ஒரே வெண்ணிலா’ என்றுதான் இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் ஸ்ரீதேவியை!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close