[X] Close

’கமல் எல்லாத்துலயும் தலையிடுவாரா?’ - இயக்குநர் சந்தானபாரதி விளக்கம்


kamal-santhana-bharathi

கமல் - சந்தானபாரதி

  • வி.ராம்ஜி
  • Posted: 21 Feb, 2019 10:14 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

‘கமல் எல்லாத்துலயும் தலையிடுவார்னு சொல்றது உண்மையா?’ என்பதற்கு இயக்குநர் சந்தானபாரதி விளக்கம் அளித்தார். 

நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதி, சமீபத்தில் தனியார் இணையதள சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

கமல், ஒரு படத்தில் நடித்தால், அந்தப் படத்தின் இயக்கம் உள்ளிட்ட எல்லா வேலைகளிலும் அவருடைய குறுக்கீடு இருக்கும் என்று எல்லோரும் குற்றமாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒருவிஷயத்தை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும். சினிமா என்பது ஒரு டீம் ஒர்க். படத்தில் உள்ளவர்கள் அனைவரும் அவரவர் திறமையை அந்தப் படத்தில் குவிப்பதால், பெருமடங்கு வெற்றி சாத்தியமாகிறது.

சிவாஜிகணேசன் அவர்கள், ஒரு படத்தின் எந்த வேலைகளிலும் கலந்துகொள்ளமாட்டார். டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதை அவர் நடித்துக்கொடுத்துவிட்டுப் போவார். ஆனால் எம்ஜிஆர் அப்படியில்லை.

தன்னுடைய எல்லாப் படங்களிலும் எம்ஜிஆர், மிகக் கவனமாக இருப்பார். கதையில் கவனம் செலுத்துவார். படத்தின் ஓபனிங்கில் கவனம் செலுத்துவார். ஒரு சண்டைக்காட்சி எப்படி இருக்கவேண்டும் என்று இயக்குநரிடமும் ஸ்டண்ட் மாஸ்டரிடமும் டிஸ்கஸ் பண்ணி, தன்னுடைய ஐடியாக்களைச் சொல்லுவார். உடன் நடிப்பவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவார்.

அவ்வளவு ஏன்... பாட்டு எப்படி இருக்கவேண்டும், இசை எப்படி அமையவேண்டும், பாடலின் வரிகள் என்னென்ன என்பது முதற்கொண்டு கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்டவர்களிடம் அதைக் கேட்டுவாங்குவார் எம்ஜிஆர்.

கமலிடம் இப்படியான குணங்கள்தான் உண்டு. மேலும் ஒரு சினிமாவின் சகல துறைகளிலும் விஷய ஞானம் உள்ளவர் கமல். புதுப்புது டெக்னிக்குகளை இன்றைக்கு சினிமா உலகில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். இதில் பல விஷயங்களை பரீட்சார்த்த முயற்சியில் செய்து அறிமுகப்படுத்தியவர் கமல்.

ஒரு படம் நன்றாக வரவேண்டும் என்றுதானே இத்தனையும் செய்கிறார் கமல். இதைக் குறுக்கீடு, தலையீடு என்று எப்படிச் சொல்லமுடியும்? அதேபோல், ‘இந்தக் காட்சியில் இப்படி நடித்தால் நன்றாக இருக்கும்?’ ‘இந்தக் காட்சியில் உங்களுக்கு வசனம் கம்மிதான்’ என்று இயக்குநர்களான நாங்கள் சொன்னால், அதையெல்லாம் கேட்டுக்கொண்டு அதற்குத் தகுந்தபடி நடித்துக்கொடுப்பார் கமல்.

இதையெல்லாம் கமல் என் பால்யநண்பர் என்பதற்காகச் சொல்லவில்லை. கமல் ஒருபடத்துக்குக் கொடுக்கிற ஆர்வத்துக்கும் முனைப்புக்கும், குறுக்கீடுகளுக்கும் வித்தியாசம் இருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். அதற்காகச் சொன்னேன்.

இவ்வாறு இயக்குநர் சந்தானபாரதி தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close