[X] Close

கொங்கு மண்டலத்தின் கல்வித் துறை பிதாமகன்!- இன்று ஜி.ஆர்.தாமோதரன் 105-வது பிறந்த நாள்


kongu-zone

  • kamadenu
  • Posted: 20 Feb, 2019 10:37 am
  • அ+ அ-

சிலர் வரலாற்றில் இடம்பெறுவார்கள்; சிலர் மட்டுமே வரலாற்றை உருவாக்குவார்கள். இன்று உலகத் தரத்திலான கல்வியில் கொங்கு மண்டலம் சிறந்து விளங்குகிறது. இதற்கான விதையை விதைத்த ஜி.ஆர்.டி. எனப்படும் ஜி.ஆர்.தாமோதரனின் 105-வது பிறந்த நாள் இன்று. தமிழக கல்வி வரலாற்றில் மகத்தான பங்கு இவருக்கு உண்டு. ஆம், உலகப் பிரசித்திப் பெற்ற பிஎஸ்ஜி  தொழில்நுட்பக் கல்லூரியை உருவாக்கியவர்களில் ஒருவர் ஜி.ஆர்.தாமோதரன். கல்வித் துறையில் சாதித்த இவரைப் பற்றி இன்றைய தலைமுறைக்கு விளக்குவது பெருமிதத்துக்கு உரியது.

இந்தியாவின் சிறந்த தொழில் நகரங்களில் ஒன்று என்ற பெருமையை, கொங்கு மண்டலத்தின் மையமான கோவைக்குப் பெற்றுத் தந்ததில் இன்ஜினீயரிங் துறைக்கு மிகப் பெரிய பங்குண்டு. விவசாயமே பிரதானமாக இருந்த கோவையில் 1888-ல் சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் தொடங்கிய `கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்டு வீவிங் மில்ஸ் நூற்பாலை`,  தொழில் வளர்ச்சியின் முதல் அடியை எடுத்துவைக்கச் செய்தது. அடுத்த வளர்ச்சி,  இன்ஜினீயரிங் துறையால்தான் நிகழ்ந்தது. கோவையில் உருவான பொறியாளர்கள் இதற்கு அடித்தளமிட்டனர். இதற்கு வழிவகுத்தவர் ஜி.ஆர்.டி.

கோவையில் திவான் பகதூர் பி.எஸ்.ஜி.ரங்கசாமி நாயுடு-கிருஷ்ணம்மாள் தம்பதிக்கு, 1914 பிப்ரவரி 20-ம் தேதி பிறந்தார் ஜி.ஆர்.தாமோதரன். கோவை பீளமேட்டில் உள்ள சாதாரண ஆரம்பப் பள்ளியில் படித்த இவர், சர்வஜனா உயர்நிலைப் பள்ளியில் இறுதியாண்டு பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர், கோவை அரசுக் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தார். தொடர்ந்து, இங்கிலாந்து சென்று கிங்க்ஸ் கல்லூரியில் எலெக்ட்ரிகல் மெக்கானிக்கல் பொறியியல் பட்டம் பெற்றார்.

முதல் `முதல்வர்`

பின்னர் ஊர் திரும்பிய அவர், பி.எஸ்.ஜி.  இன்ஜினீயரிங் கல்லூரியைத் தொடங்குவதில் முக்கியப் பங்காற்றினார். அக்கல்லூரியின் முதல்வராகவும் பொறுப்பேற்றார். பொறியியல் மாணவர்கள் வருவதற்கு முன்பே கல்லூரிக்கு வந்து,  வகுப்புகள் தொடங்கும் வரை கல்லூரி முகப்பு வாயிலில் கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு நின்று கொண்டிருப்பார் என்பார்கள். அவரது ஆடையும், பூட்ஸும் பெரிய கம்பீரத் தோற்றத்தை அவருக்குக் கொடுக்கும். பொறியியல் மாணவர்கள் அவரைப் பார்த்தது தலைதாழ்ந்து வணக்கம் தெரிவித்துவிட்டு, வகுப்புகளுக்குச் செல்வது கண்கொள்ளா காட்சி. மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்த அவர், கல்லூரி விடுதியின் வார்டனாகவும் இருந்து கண்காணிப்பார். திடீர் திடீரென உணவின் தரத்தை ஆராய்ந்து, ஆரோக்கியமானதாகவும், சுவையாகவும் உள்ளதா என்பதைப் பரிசோதிப்பார். தங்கும் அறைகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்வார். பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் விடுதிக் கட்டிடங்கள், அவரது மேற்பார்வையில் வித்தியாசமான முறையில் கட்டப்பட்டன.

பாரம்பரியம் மிக்க சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1978 முதல் 1981 வரை ஆற்றல்மிக்க துணைவேந்தராகப் பொறுப்பு வகித்துள்ளார் கல்வியாளர் ஜி.ஆர்.டி. அதுமட்டுமா? பொறியியல் கல்லூரிகளைச் சீராயும் ஏஐசிடிஇ குழுவின் தலைவர், பாலிடெக்னிக் கல்விச் சீரமைப்பு சிறப்புக் குழுத்  தலைவர், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் சிண்டிகேட் உறுப்பினர், பல்வேறு கல்லூரிகளின் நிர்வாகி என கல்வித் துறையில் இவர் வகித்த பொறுப்புகள், பதவிகள் ஏராளம்.

பொள்ளாச்சி எம்.பி.

இதுமட்டுமா, அரசியலிலும் இவரது பங்கு மகத்தானது. பொள்ளாச்சி தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கல்வியாளர் என்ற முறையில் தமிழ்நாடு சட்டமேலவைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெரியார், காமராஜர், அண்ணா, சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன், அவிநாசிலிங்கம், வி.கே.ஆர்.வி. ராவ்,  என்.ஜி.ரங்கா, டி.டி.கிருஷ்ணமாச்சாரி போன்ற மிகப் பெரிய ஆளுமைகள் இவருக்கு நண்பர்கள். அறிவியலையும், தமிழையும் தன் இரு கண்களாக நேசித்தவர் ஜி.ஆர்.டி.  அனைவரும் கல்வி பெற வேண்டுமென்ற நோக்குடன்கடமையாற்றினார். இவரது நூற்றாண்டு விழா 2014-ல்கோவையில் கொண்டாடப்பட்டது. இவரது  மகன்கள் டி.வித்யபிரகாஷ், டி.பத்மநாபன்.

தமிழ் மீடியத்தில் படிக்க வைத்த அப்பா

"அறிவியலை எளிய முறையில் மாணவர்களுக்கு கொண்டுசேர்க்க வேண்டு மென்பதில் அப்பாவுக்கு மிகுந்த விருப்பம்" என்றார் அவரது மகனும், ஜி.ஆர்.டி. ஃபவுண்டேஷன் தலைவரு மான வித்யபிரகாஷ் தாமோதரன். "நான் முதலில் கான்வென்ட் பள்ளியில் படித்தேன். பின்னர், மணி பள்ளியில் சேர்த்து, தமிழ் மீடியத்தில்படி என்று சொன்னார். அதன்படி, நான் தமிழ் மீடியத்தில்தான் நான் படித்தேன். காலையில் 7.30 மணிக்கே கிளம்பி, பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரிக்குச் சென்றுவிடுவார். வார்டனாகவும் அவரே இருப்பார். மாணவர்களுடன் தமாஷாகப் பேசிக் கொண்டிருப்பார் என்று சொல்வார்கள். மாணவர்களை விளையாட்டில் மிகவும் ஊக்குவிப்பார்.

என்னை இன்ஜினீயரிங் படிக்குமாறு கூறினார். ஆனால், ரெக்கமன்டேசன் செய்யவில்லை. நானே இன்டர்வியூவுக்குச் சென்று, தேர்வானேன். ஆனால், 5 வருஷம் இன்ஜினீயரிங் படிக்க எனக்குப் பொறுமையில்லை. அதனால், அப்பா விடம் சென்று, `நான் இன்ஜினீயரிங் படிக்கவில்லை. ஆனால், தொழில்நுட்பம் கற்றுக்கொண்டு இன்ஜினீயராகிவிடுகிறேன்` என்றுகூறி, பி.எஸ்சி. கணிதம் படித்தேன்.

விமானம் ஓட்ட விரும்பிய அப்பா, ஓராண்டு பயிற்சி பெற்றார். அப்போது நான் அங்கே அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அப்பாபயிற்சி முடிக்கவில்லையென்றாலும், பின்னர்நான் விமானம் ஓட்டப் பயிற்சிபெற்று, உரிமம் பெற்றேன். தமிழ்நாட்டிலேயே

எம்.பி.ஏ. பாடப்பிரிவை முதலில் தொடங்கியவர் அப்பா தான்.அவரது மாணவர்கள்ஏராளமானோர் பேராசிரியர்களாகவும், பல்வேறு உயர் பதவிகளையும் அலங்கரித்தனர். பல இடங்களுக்கு மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றார்.ஜிஆர்டி அறக்கட்டளையைத் தொடங்கி, பல சமூக நலப் பணிகளில் ஈடுபட்டார். பின்னர், ஜிஆர்டி கல்லூரிகள் தொடங்கப்பட்டன. நான் அந்த அறக்கட்டளையில் இருந்தேன். பின்னர், தனியாக ஜிஆர்டி ஃபவுண்டேஷன் தொடங்கி, நீலாம்பூரில் ஊரகப் பள்ளியை நடத்தி வருகிறேன்.

`கலைக்கதிர்` மாத இதழ்

மக்களுக்கு எளிய முறையில் அறிவியல் கற்றுக் கொடுப்பதற்காக 1950-களில் `கலைக்கதிர்` என்ற மாத இதழைத் தொடங்கினார். அந்த காலகட்டத்தில் தமிழில் வந்த முதல் விஞ்ஞான இதழ் என்று இதைச் சொல்லலாம்.  வண்ணமயமான அறிவியல் சம்பந்தப்பட்ட அட்டைப்படம். அருமையான தமிழில் பௌதீகம், ரசாயனம், கணிதம், தாவரவியல், உயிரியல், மண்ணியல், வானியல் மற்றும் விஞ்ஞானம் குறித்த கட்டுரைகள்  தெளிவாகத் தமிழில் அச்சிடப்பட்டிருக்கும்.

இதற்கான பிரிண்டிங்

இயந்திரத்தை ஜெர்மனியிலிருந்து தருவித்தார். இந்த இதழுக்காக அப்போதே கணினியில் போட்டோ செட்டிங்குகள் செய்து, அச்சடிக்கும் முறையைக் கொண்டுவந்தார். அப்போதைய காலத்தில், தமிழகத்தில் மட்டுமல்ல,  இந்தியாவிலே ஒரு மாத இதழுக்கு இந்த முயற்சியை மேற்கொண்டது அப்பாதான். அவரது வழிகாட்டுதலில் பல அறிஞர்கள் தமிழில் அறிவியல் கட்டுரைகளை எழுதத் தொடங்கினர். எனது பெயரின் தமிழாக்கம்தான் கலைக்கதிர்.  கடந்த சில மாதங்களுக்கு முன்புவரைகூட கலைக்கதிர் வெளியானது. போதுமான அளவுக்கு விஞ்ஞானக் கட்டுரைகள் வரவில்லை. இதனால், கலைக்கதிர் இதழை நிறுத்திவிட்டோம்.

`தி ப்யூச்சர் இன் யுவர்செல்ப்` என்ற நூலையும் வெளியிட்டார். மிகுந்த வரவேற்பு பெற்ற புத்தகம் அது. இதேபோல, தமிழ், ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதினார். மேலும், பல ஆங்கிலஅறிவியல் நூல்களையும் தமிழாக்கம் செய்து கலைக்கதிர் பதிப்பகம் வெளியிட்டது. அதேபோல, முதன்முதலாக `தமிழ் அறிவியல் கலைச்சொல் அகராதியை` வெளியிட்டார். கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் கலைக்கதிர் கட்டிடம் பெரிய லேண்ட்மார்க்காக இருந்தது. அவிநாசி சாலையில் செல்லும் பேருந்துகளின் ஓட்டுநர்கள் `கலைக்கதிர் அச்சகம்` என்று ஸ்டாப்பிங் பெயரை சப்தமிட்டுச் செல்வார்கள்.

`இந்து` ஆசிரியருடன் நட்பு

`தி இந்து' முன்னாள் ஆசிரியர் ஜி.கஸ்தூரிக்கும், அப்பாவுக்கும் மிகுந்த நெருக்கம் உண்டு. `இந்து` குழுமத்தின்  சொந்த விமானம் மூலம் கோவைக்கு தினமும் காலையில் நாளிதழ்கள் வந்து இறங்கும். அதை நான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பேன். 1970-களில் கோவையிலேயே `தி இந்து` நாளிதழ்களை பிரின்ட் செய்யத் திட்டமிட்டபோது, கலைக்கதிர் அச்சகத்தின் அருகில் இருந்த காலியிடத்தை `தி இந்து` அச்சடிக்க வழங்கலாம் என நானும், அப்பாவும் முடிவெடுத்தோம். நாங்களே கட்டிடமும் கட்டிக் கொடுத்தோம். அவர்கள் இயந்திரத்தை நிறுவி, கோவையில் நாளிதழ்களை பிரின்ட் செய்யத் தொடங்கினர். இரவு 12, 12.30 மணிக்கு பிரின்டிங் தொடங்கும். நான் உடனே அங்கே சென்று, மிஷினில் இருந்து பேப்பரை எடுத்துக்கொண்டு வந்து படிப்பேன்.  கட்டிட வாடகை தொடர்பாக  சென்னைக்குச் சென்று கஸ்தூரியை சந்திப்பேன். `இந்து` குடும்பத்தைச் சேர்ந்த ராம், முரளி உள்ளிட்டோர் மிகுந்த நெருக்கமானார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு, சொந்தக் கட்டிடம் கட்டி, அச்சகத்தை மாற்றிக் கொண்டனர்.

பெரியவீட்டுக்காரர் குடும்பத்தார்

கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின் காட்சித் தொடர்பில் துறை இணைப் பேராசிரியரும், திரைப்பட ஆய்வாளருமான என்.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘தென்னிந்தியாவின் தொழில் நகரமான கோவை,  இப்போது கல்வி நகரமாகவும் வளர்ந்து வருகிறது. நூறாண்டுகளுக்கு முன் விவசாய பூமியாக இருந்த கோவையில் மூன்று பள்ளிகள் மட்டுமே இருந்தன.

கோவை சங்கனூர் பள்ளம் பகுதி 300 ஆண்டுகளுக்கு முன் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அப்போது, அங்கிருந்த மக்கள் பாப்பநாயக்கன்பாளையம் மற்றும் பூளைமேடு பகுதிக்கு குடிபெயர்ந்தனர். `பூளைமேடு பெரியவீட்டுக்காரர் குடும்பத்தார்` என்று அழைக்கப்பட்ட பெரிய வீடு சாம கோவிந்தசாமி நாயுடுவின் நான்கு குமாரர்களால் 1924-ல்  தொடங்கப்பட்ட `சர்வஜனா'` தொடக்கப்பள்ளி கோவையின் கல்விப் புரட்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. காந்திஜியால் 'சர்வஜனா சுகினோ பவந்து' என்று வாழ்த்தப்பட்ட இப்பள்ளியை, பெரியார் நேரில் பார்வையிட்டுள்ளார்.

தாகூரின் `ஜன கன மன` பாடல்,  நம் நாட்டின் தேசிய கீதமாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இப்பள்ளியில் பாடலாக வழக்கத்திலிருந்தது. `தீண்டத் தகாதவர்கள் வகுப்பறைக்குள்  அனுமதிக்கப்பட வேண்டுமென்று சட்டம் இயற்றப்பட்ட அதே ஆண்டில், இப்பள்ளி தொடங்கப்பட்டது இதன் சிறப்பு' என்கிறார் வரலாற்று  ஆய்வாளர் செந்தலை கவுதமன்.

புதிய பாடத் திட்டங்கள்

பி.எஸ்.ஜி. சகோதரர்களில் ஜி.ரங்கசாமிநாயுடு, கல்வியால்  மட்டுமே சமூக ஏற்றத்தாழ்வுகளை  களைய முடியும் என்ற நம்பிக்கையுடன், சர்வஜனா பள்ளியைத் தொடர்ந்து, பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியையும் ஆரம்பித்தார். இவருடைய மூத்த குமாரர் ஜி.ஆர்.தாமோதரன்,  லண்டனில் கல்வி பயின்று, பேராசிரியர் வில்லியம்ஸ் என்பவரின் கீழ் உதவிப்  பேராசிரியராகவும் பணிபுரிந்தார். பின்னர் நாடு திரும்பி, பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனங்களின் வளச்சிக்குப் பெரும் பங்காற்றினார். இவரது  சீரிய மேற்பார்வையால் பி.எஸ்.ஜி. கலை,  அறிவியல் கல்லூரியில் பல புதிய பாடத் திட்டங்கள் அறிமுகமாகின.

குறிப்பாக,  சமூகப் பணி பட்டப் படிப்புகளை அறிமுகம் செய்ததுடன், மாணவர்களை சமூகத்துடன் இணைந்து செயல்படவும் தூண்டினார்.

மாணவர்களுக்கு வழிகாட்டி யாய் இருந்தது போலவே, ஆசிரியர்களுக்கும் சிறந்த ஆலோசகராக இருந்துள்ளார் ஜி.ஆர்.டி. ஆசிரியர்களின் உயர் கல்விக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பையும், கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளை ஊக்குவிப்பதிலும்  தனிக்கவனம் செலுத்தினார். வெளிநாடுகளுக்கு சென்று மேற்படிப்பு என்பதை கனவுகூட காணமுடியாத பல ஆசிரியர்கள், இவரின் உதவியால் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ரஷ்யா போன்ற நாடுகளுக்குச் சென்று பயனடைந்ததும், சாதாரண கல்லூரிப் பணியில் சேர்ந்து பல்கலைக்கழக வேந்தரானவர்களும் உண்டு.

கோடைகாலப் பள்ளி

ஆசிரியர்களின் கற்பித்தலை மேம்படுத்த இவர் உருவாக்கிய 'கோடைகாலப் பள்ளி' உலகப் பிரசித்திப் பெற்றது.  உலகின் பல கல்வி நிறுவனங்களிலிருந்தும் பேராசிரியர்கள் பங்குபெறும் இந்தப் பயிற்சி வகுப்புகளை ஒருகட்டத்தில் `யுனெஸ்கோ`வே ஏற்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கு நவீனப் பாடங்களாக பல கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகள், இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில்  துணைவேந்தராக இருந்தபோது உருவாக்கப்பட்டவை. இவற்றில், மேலாண்மை, விஷுவல் கம்யூனிகேஷன் (காட்சித் தொடர்பியல்),இண்டஸ்ட்ரியல், கம்யூனிகேஷன் டிசைன் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

கல்வி மட்டுமின்றி, கோவையின் தொழில் வளர்ச்சியிலும் ஜிஆர்டி-யின் பங்கு நினைவுகூரத்தக்கது. கோவையின் சிறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில்முனைவோர் பயனடையும் வகையில் சிட்கோ, சீமா போன்ற அமைப்புகள் உருவாகக் காரணமாக இருந்தார். தனது ஓய்வூதியம் முழுவதையும் பி.எஸ்.ஜி.கல்லூரியின் நூலகத்துக்கு வழங்கியது குறித்து பெருமைபட்டுக்கொள்கிறார் அவரது பேரன் அர்ஜுன்."அவரின் பாதச்சுவடுகள் பெரியது. எங்களால் அவைகளை நிரப்பமுடியாது. ஆனால், முடிந்த அளவுக்கு தொடரப் பார்க்கிறோம்" என்கிறார் ஜி.ஆர்.டி. கல்வி நிறுவனங்களின் செயலர் கீதா பத்மநாபன். அவர்கள் மட்டுமல்ல, கல்வியாளர்கள் அனைவருமே தொடர வேண்டிய பாதையைதான் அவர் விட்டுச்சென்றிருக்கிறார்" என்றார் நெகிழ்வுடன்.

கல்வி வளர்ச்சிக்கு உறுதியேற்போம்

கல்வித் துறை வணிகமயமாகி வரும் தற்போதைய சூழலில், ஜி.ஆர்.டி. போன்றவர்களின் தன்னமற்ற கல்விச் சேவையே, தமிழகத்தில் கல்வித் துறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தது எனலாம். கல்வி, அறிவியல் மேம்பாட்டுக்குப் பாடுபட்ட பன்முகத் தன்மையாளர் ஜி.ஆர்.டி.யின் 105-வது பிறந்த நாளான இன்று, அவரை நினைவுகூர்வதுடன், கல்வி வளர்ச்சியில் நம்மாலான சிறு முயற்சியை மேற்கொள்வோம் என உறுதியேற்போம்.

இங்கிலாந்தில் எடுத்த முடிவும், கோவையின் வளர்ச்சியும்...

பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் டி.நந்தகுமார் கூறும்போது, "ஜி.ஆர்.தாமோதரன், ஜி.கே.சுந்தரம், டெக்ஸ்டூல் பாலசுந்தரம், டெக்ஸ்மோ ராமசாமி ஆகியோர் உயர் கல்விக்காக இங்கிலாந்து சென்றனர். உலகப் போர் காரணமாக அவர்கள் தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியா திரும்பியவுடன், டெக்ஸ்டைல்ஸ், பவுண்டரி, இன்ஜினீயரிங் தொழில்களைத் தொடங்கலாம் என அவர்கள் முடிவெடுத்துள்ளனர். அப்போது ஜி.ஆர்.தாமோதரன் `நீங்கள் தொழில்களைத் தொடங்குங்கள். நான் உங்களுக்கு இன்ஜினீயர்களை உருவாக்கித் தருகிறேன்' என்று கூறியுள்ளார்.

பின்னர், நாடு திரும்பியவுடன், பிஎஸ்ஜி இன்ஜினீயரிங் கல்லூரியைத் தொடங்கினார். இன்று சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றுள்ள பிஎஸ்ஜி கல்லூரியிலிருந்து வெளிவந்துள்ள  பல்லாயிரக்கணக்கான இன்ஜினீயர்கள், கொங்கு மண்டலத்தின் வளர்ச்சியில் மிகுந்த பங்களிப்பு செய்தனர். மூன்று தலைமுறை மாணவர்களுடன் நெருங்கிப் பழகிய ஜிஆர்டி,

ஏராளமான தொழில்முனைவோர் உருவாக காரணமாகவும் இருந்தார். பல தொழில்நுட்ப வார்த்தைகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். கோவையில் பல்வேறு தொழில் அமைப்புகளைத் தொடங்குவதிலும் பங்காற்றிய ஜிஆர்டி, பல அமைப்புகளின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். கோவை மட்டுமின்றி, கொங்கு மண்டலத்தின் வளர்ச்சியில் அவரது பங்கு மகத்தானது" என்றார் பெருமிதத்துடன்.

கேமரா காதலர்கள்

அப்பாவுக்கு, கேமரா , புகைப் படம், வீடியோ கலை மீது மிகுந்த விருப்பம் உண்டு. 1974-ல்   வீடியோ கேமரா அறிமுகமா னபோது, அப்பா சொந்தமாக வீடியோ கேமரா வாங்கி வைத்திருந்தார். இவரைப் போலவே ஜி.கஸ்தூரிக்கும் புகைப்படக் கலை மீது மிகுந்த ஆர்வம். ஒருமுறை கஸ்தூரி வீட்டுக்குச் சென்றபோது, வீட்டின் முன் என்னை நிற்கவைத்துப் படமெடுத்தார்.

மிகச் சிறந்த புகைப்படம். பெரிதாக பிரிண்ட்செய்து எனக்கு அனுப்பிவைத்தார். அவரது பெயரை எழுதி, என் வீட்டில் வைத்திருக் கிறேன். யார் வந்தாலும் அதை காண்பிப்பேன்" என்றார் வித்யபிரகாஷ்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close