[X] Close

’சலங்கை ஒலி’ கே.விஸ்வாத்ஜீ.. வாழ்த்துகள்ஜீ!


kviswanath-birthday

இயக்குநர் கே.விஸ்வநாத்

  • வி.ராம்ஜி
  • Posted: 19 Feb, 2019 11:26 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

சிறந்த படங்கள் நூறை எடுத்துக்கொண்டால், அந்தப் படங்களின் பட்டியலில் இவரின் படங்கள் பல வரிசைகட்டி நிற்கும். சிறந்த டைரக்டர்கள் எனப் பட்டியலிட்டுப் பார்த்தால், அந்த டாப் டென்னில், இவரின் பெயரும் முக்கிய இடம்பிடிக்கும். அந்தப் படங்களுக்குச் சொந்தக்கார இயக்குநர்... கே.விஸ்வநாத்.

ஆந்திர மாநிலத்துக்காரர், தெலுங்குத் திரையுலகின் தனிக்காட்டு ராஜா. நாலுபாட்டு, நாப்பது ஃபைட்டு என்று லாஜிக் இல்லாமல் மேஜிக் செய்யும் தெலுங்குப் பட உலகில், இவரின் படங்கள் தனி ரகம். புது தினுசு.

கலை, இசை, நடனம்... இதைக் கருவாகக் கொண்டு கதை பிடிப்பதில் அசகாயசூரர் கே.விஸ்வநாத். இதற்கு கலையை அறிந்திருக்க வேண்டும். இசையை உணர்ந்திருக்கவேண்டும். நடனத்தைப் புரிந்திருக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தக் கலையையும் இசையையும் நடனத்தையும் நமக்குள் வியாபிக்கச் செய்யவேண்டும். அதுதான் ஓர் படைப்பாளனின் திறமை; வெற்றி. இயக்குநர் கே.விஸ்வநாத், அப்படியான உன்னதக் கலைஞன்!

ஜகன்மோகினி, ரிவால்வர் ரீட்டா, பாதாள உலகம் மாதிரியான மசாலாப் படங்களுக்கும் பேய்ப்படங்களுக்கும் டப்பிங் செய்யவேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அந்தக் காலங்களில் இதுமாதிரியான படங்கள் டப் செய்யப்பட்டு வந்தன. பின்னாளிலும் எத்தனையோ படங்கள் சிரஞ்ஜீவி, வெங்கடேஷ், விஜயசாந்தி, ராஜசேகர் படங்களும் அதன் பின்னர் ஜூனியர் என்.டி.ஆர், நாகார்ஜூனா, மகேஷ்பாபு படங்களும் டப் செய்யப்பட்டு வந்தன.

ஆனால், தெலுங்குப் பட இயக்குநர் கே.விஸ்வநாத், நம் தமிழ் ரசிகர்களுக்கு, டப்பிங் செய்து அறிமுகமாகவில்லை. அப்படியே தெலுங்குப் படமாகவே அறிமுகமானார். மனதிலும் இடம்பிடித்தார். அந்தப் படம்தான் ‘சங்கராபரணம்’. தெலுங்கில் எடுக்கப்பட்ட சங்கராபரணம், தமிழகத்தின் தியேட்டர்களிலும் தெலுங்கு பேசியே வெளியானது. நூறு, இருநூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

கிட்டத்தட்ட, கே.பாலசந்தர் தெலுங்கில் ‘மரோசரித்ரா’ படத்தை எடுத்தார். அது தமிழகத்தில், தெலுங்கிலேயே வெளியாகி, ஐநூறு நாட்களைக் கடந்து வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு, பாலசந்தர் படம், கமல் நடித்த படம், சரிதா நாயகி என்றெல்லாம் பல காரணங்களும் இருந்தன. ஆனால், தெலுங்குப் பட டைரக்டர், தெலுங்குப் பட நடிகர், அதிலும் வயதான நடிகர்தான் நாயகன் என்றெல்லாம் இருந்தும் கூட, தெலுங்குப் பட சங்கராபரணத்தைக் கொண்டாடினார்கள் தமிழ் ரசிகர்கள். அதுதான் கே.விஸ்வநாத் எனும் படைப்பாளியின் பிரமாண்ட வெற்றி.

பிறகு, சாகர சங்கமம் மூலம் கமலுடன் இணைந்தார். கமல், ஜெயப்ரதா, ஒளிப்பதிவாளர் நிவாஸ், இளையராஜா, வைரமுத்து எனும் கூட்டணியுடன் நடனக்கலையையும் தோற்றுப் போன நடனக்கலைஞனின் வலியையும் ‘சாகரசங்கமமாக’ தந்தவர்  தமிழில் ‘சலங்கை ஒலி’யாக டப் செய்தார். நல்ல படங்களின் பட்டியலில் சலங்கை ஒலி, முக்கிய இடத்தில் இன்றைக்கும் இருக்கிறது. கமலின் ஆகச்சிறந்த படங்களின் வரிசையிலும் இளையராஜாவின் மயக்கும் இசையிலான படங்களின் தரவரிசையிலும் இந்தப் படம் தனித்துவத்துடன் திகழ்கிறது.

இதையடுத்து கமல், ராதிகாவின் நடிப்பில், ‘சுவாதி முத்யம்’ தமிழில் ‘சிப்பிக்குள் முத்து’ என டப் செய்யப்பட்டு வெளியானது. மீண்டும் கமல், இளையராஜா, வைரமுத்து கூட்டணியுடன் தமிழர்களின் மனதில் இடம் பிடித்தார் கே.விஸ்வநாத். அப்பாவி இளைஞன், சிறுவயதில் விதவை, அன்புக்கு மிஞ்சியது இந்த உலகில் ஏதுமில்லை என இழையோட விட்ட கதையில் சொக்கிப் போனார்கள் ரசிகர்கள்.

சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜூனா, மம்முட்டி என பலவிதமான நடிகர்கள். பலவிதமான கதாபாத்திரங்கள். நடுவே, கமலுடன் பாசவலை படத்தில் நடிக்கவும் செய்து இயக்கவும் செய்தார். குருதிப்புனல், முகவரி, யாரடி நீ மோகினி முதலான எண்ணற்ற படங்களில், நல்ல நல்ல கேரக்டர்களிலும் நடித்து அசத்தினார். இன்றைக்கும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

விருதுகள் பலவும் கே.விஸ்வநாத்தின் விலாசம் தேடி வந்தன. பத்மஸ்ரீ விருது, தாதா சாகேப் பால்கே விருது, ஐந்து முறை தேசிய விருதுகள் என பெற்றிருக்கிறார் விஸ்வநாத். ஆந்திர அரசின், உயர்ந்த விருதான நந்தி விருது, 20 முறை வழங்கப்பட்டிருக்கிறது இவருக்கு!

கே.விஸ்வநாத், தனித்துவம் மிக்கவர். அவரைப் படங்களைப் போலவே! சொல்லப்போனால், இவரின் தனித்துவமே, இவரின் படங்களிலும் எதிரொலித்தன. மகா கலைஞன் என்று அதனால்தான் கொண்டாடிக்கொண்டிருக்கிறது, இந்தியத் திரையுலகம்!

‘சலங்கை ஒலி’ இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு, இன்று 19.2.19 பிறந்தநாள். அவர் இன்னும் இன்னும் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் திகழவும் அவரின் புகழ் நிலைக்கவும் வாழ்த்துவோம்.

கே.விஸ்வநாத்ஜீ... மனம் கனிந்த வாழ்த்துகள்ஜீ!

   

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close