[X] Close

’என்னடா படம் எடுக்கறே நீ? அடுத்த தடவை எங்கிட்ட கதை சொல்லிட்டு எடுன்னு பாட்டி சொன்னாங்க!’ – கே.பாக்யராஜ் கலகல


bhagyaraj

கே.பாக்யராஜ்

  • வி.ராம்ஜி
  • Posted: 16 Feb, 2019 19:20 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

’என்னடா படம் எடுக்கறே நீ? அடுத்த தடவை எங்கிட்ட கதை சொல்லிட்டு, அப்புறமா படம் எடுன்னு என்னோட பாட்டி சொன்னாங்க’ என்று இயக்குநர் கே.பாக்யராஜ் பேசினார்.

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், சமீபத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

இப்ப இருக்கிற ரசிகர்கள், ரொம்பத் தெளிவா இருக்காங்க. படம் பாத்து, படம் பாத்து, அடுத்த சீன் இதான் இருக்கும், அடுத்த சீன் இதான் இருக்கும்னு கரெக்ட்டா யோசிக்கிறாங்க. ‘மச்சி மாட்டிக்காதே’ன்னு படம் பாத்துட்டிருக்கும்போதே, மெசேஜ் தட்டிடுறாங்க. ‘மாப்ளே, நீ தப்பிச்சிட்டேடா’னு ஸ்டேட்டஸ் போடுறாங்க.

அதுமட்டுமில்லாம, இது எந்த மொழிப்படத்துலேருந்து எடுத்தது, அந்தப் படம் எந்த மொழிப்படத்துலேருந்து காப்பியடிச்சதுன்னு பட்டுபட்டுன்னு சொல்லிடுறாங்க.

அந்தக் காலத்துலயும் இப்படிலாம் ஒருசிலர் இருந்திருக்காங்க. அப்படித்தான் படம்லாம் எடுக்க ஆரம்பிச்சிட்டேன். அப்ப ஒருசமயம், சொந்த ஊருக்குப் போனேன். அங்கே எங்கூட கேரம்போர்டு விளையாடிட்டிருந்தவரைப் பாத்தேன். ‘என்ன பாக்யம், நல்லாருக்கியா?’ன்னு கேட்டாரு. ‘ரொம்ப நல்லாருக்கேன்’ன்னு சொன்னேன்.

’ஆமா, கதைலாம் ரெடி பண்ணிட்டுதானே, படமெடுக்கப் போவீங்க?’ன்னு கேட்டாரு. ‘என்னங்க இப்படிக் கேட்டுட்டீங்க. கதையெல்லாம் ரெடி பண்ணிட்டு, வசனம்லாம் எழுதிட்டுத்தான், படம் எடுக்கப் போவோம்’னு சொன்னேன். ‘அப்புறம் ஏன் சரியாவே படம் எடுக்கமாட்டேங்கறீங்க? என்னமோ போ’ன்னு சொல்லிட்டுப் போயிட்டார். எனக்கு எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சுப் பாருங்க.

அப்படித்தான், நான் வெளியூர் போகும்போதெல்லாம் என்னோட நண்பர்களும் எங்கூட வருவாங்க. மும்பைக்குப் போயிருந்தோம். அப்ப, பூர்ணிமாவுக்கு ஸ்கர்ட், புதுடிசைன்ல மாடர்ன் டிரஸ்லாம் வாங்கினேன். ‘வீட்ல அம்மணிக்கு வாங்கணும்னா வாங்கிக்கங்கடா’ன்னு சொன்னேன். ‘ஆமா, அவ மாடர்ன் டிரஸ்ஸைப் போட்டுட்டாலும்…’னு சலிச்சுக்கிட்டாங்க. ‘நல்லவேளை, நீ சினிமா ஸ்டாரை கல்யாணம் பண்ணிட்டே. எம் பொண்டாட்டி, குண்டாயிட்டாப்ல’னு எப்பப் பாத்தாலும் புலம்பிக்கிட்டே இருந்தான்.

இப்ப, நயன்தாரா மாதிரி த்ரிஷா மாதிரி பொண்ணு இருக்கணும்னு நினைக்கிறோமே. கமலஹாசன் மாதிரி, ஜெமினி கணேசன் மாதிரி புருஷன் இருக்கணும்னு அவங்க நினைச்சிருந்தாக்க, நம்ம நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப் பாருடான்னு சொன்னேன்.

அப்புறமா, இந்த விஷயமே, ஒரு கதையா, கருவா உருவாச்சு. அதான் ‘சின்னவீடு’ படம். ஒரு நல்ல மெசேஜ் சொல்லுவோம்னு ‘சின்னவீடு’ படம் எடுத்தேன். அப்புறமா ஊருக்குப் போனேன். என்னோட பாட்டி எங்கிட்ட, ‘ஏண்டா, என்ன படம்டா எடுத்துவைச்சிருக்கே?’ன்னு திட்டினாங்க.

‘இல்ல பாட்டி, பொண்டாட்டி குண்டா இருக்கானு ஒருத்தன் தப்பு பண்றான். அதுக்குப் பிறகு…’ன்னு சொல்ல ஆரம்பிச்சதுமே, ‘பொண்டாட்டி குண்டா இருக்கானு, தப்பு பண்ண ஆரம்பிச்சிடுறதா? ஏன், உங்க அம்மா கூடத்தான் குண்டா இருப்பா. அதனால, உங்க அப்பன், தப்புத்தண்டானு இறங்கிட்டானா என்ன?

அடுத்த தடவை படம் எடுக்கும் போது, முதல்ல எங்கிட்ட கதையைச் சொல்லு. அப்புறமா படத்தை எடு’ன்னு பாட்டி சொன்னாங்க. நான் அசடு வழிஞ்சு நின்னேன்.

இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close