[X] Close

’ஷ்...இப்பவே கண்ணைக் கட்டுதே’ வடிவேலு காமெடி; வியந்து சொல்லும் இயக்குநர் வெங்கடேஷ்


vadivelu-avenkatesh

வடிவேலு

  • வி.ராம்ஜி
  • Posted: 14 Feb, 2019 12:35 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

‘ஷ்... இப்பவே கண்ணைக் கட்டுதே’ வடிவேலு காமெடியும் அந்த வார்த்தையை வடிவேலு சொன்ன விதமும் மறக்கவே முடியாது என்று இயக்குநர் ஏ.வெங்கடேஷ் தெரிவித்தார்.

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் தற்போது ‘நேத்ரா’ எனும் த்ரில்லர், சஸ்பென்ஸ் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், அவர் தனியா இணையதள சேனலுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவருடைய ‘ஏய்’ திரைப்படம் குறித்தும் அதில் வடிவேலு காமெடி குறித்தும் கேட்கப்பட்டது.

இதுகுறித்து இயக்குநர் வெங்கடேஷ் தெரிவித்ததாவது:

வடிவேலு அண்ணன், சாதாரண காமெடி நடிகனே இல்லை. மிக பிரமாண்டமான கலைஞன் அவர். பாடி லாங்வேஜ் மூலம் சிரிக்க வைக்கவேண்டுமா? அப்படியே சிரிக்கச் செய்வார். டயலாக் டெலிவரி மூலமும் சிரிக்க வைப்பார். பாடி லாங்வேஜும் இல்லாமல், டயலாக்கும் இல்லாமல், அமைதியாக இருந்தே, ஒரு பார்வை பார்த்தபடியே சிரிக்கவைப்பார்.

ஷங்கரோட ‘காதலன்’ படத்துல வடிவேலு நடிச்சார். அப்போ அவர் வளர்ந்துக்கிட்டிருந்தார். அதுல நான் அஸோஸியேட் டைரக்டர். அப்பலேருந்தே அவர் கூட நல்ல பழக்கம் உண்டு.

இப்ப வரைக்கும், நான் ஒவ்வொரு படம் பண்ணும்போதும் வடிவேலு அண்ணனிடம் ‘இந்த படத்துல சேர்ந்து பண்ணுவோம்னு கேட்டுக்கிட்டே இருக்கேன். அவரை ஹீரோவா வைச்சுக் கூட படம் பண்ணத் தயாரா இருக்கேன்.

சரத்குமாரை வைச்சு ‘ஏய்’ படம் பண்ணும்போது, வடிவேலு அண்ணனோட காமெடி படத்துக்கு பெரிய பலமா இருந்துச்சு. சரத்குமாரும் வடிவேலு அண்ணனும் போஸ்ட் ஆபீஸ்ல செய்ற காமெடி பெரிய ஹிட்டாச்சு. அப்போ, அந்த சீன் ரிகர்சல் பாத்தோம். அஞ்சாறு தடவை பாத்தோம். எல்லாம் ஓகேயாச்சு. ‘ஒரேயொரு தடவை ரிகர்சல் பாத்துருவோம்’னு சொன்னேன். ‘மறுபடியுமா”ன்னு கேட்டார் வடிவேலு அண்ணன். ‘ஆமாண்ணே’ன்னு சொன்னேன்.

உடனே அவர், ‘ஷ்... இப்பவே கண்ணைக் கட்டுதே’ன்னு சொன்னாரு. ’அண்ணே, என்ன சொன்னீங்க. இன்னொரு தடவை சொல்லுங்கண்ணேன்னு கேட்டேன். சொன்னாரு. ‘செமயா இருக்குண்ணே. இந்த டயலாக்கையும் சேத்துக்கலாம். சூப்பரா ஹிட்டடிக்கும்ணேன்னு சொல்லி, அந்த வசனத்தையும் வைச்சோம்.

அந்த டயலாக், இப்போ வரைக்கும் சமூக வலைதளங்கள்ல சுத்திக்கிட்டே இருக்கு. மீம்ஸ் போட்டு கொண்டாடிட்டிருக்காங்க. அதான் வடிவேலு அண்ணனோட ஸ்பெஷல்.

இவ்வாறு இயக்குநர் ஏ.வெங்கடேஷ் தெரிவித்தார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close