[X] Close

இனிக்க இனிக்க... லவ்வர்ஸ் டே வாழ்த்துகள்!


lovers-day

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 10:34 am
  • அ+ அ-

ஜெமினி தனா

பிப்ரவரி -14.  அழகிய ரோஜாக்களை கையில் ஏந்தியபடி மற்றவர்களின் பார்வைகளை அலட்சியம் செய்தபடி இதயத்துக்குள் சுழன்று கொண்டிருப்பவளைக் காண ஓடும் காதல் ராஜாக்களின் தினம் இன்று. ராணிக்களின் நாளும் கூடத்தான்!  

30 வருடங்களுக்கு முன்பு மனதுக்குப் பிடித்த  பெண்ணின் கடைக்கண் பார்வையாவது நம் மீது திரும்பாதா என்று பின் தொடர்ந்த விடலைப் பையன்கள் எல்லாம்  காளிப்பயல்கள்  என்று விமர்சிக்கப்பட்டார்கள். சாமானிய விஷயமா அது...  நாம் பின் தொடர்வது நமது வீட்டுக்கும் தெரியக் கூடாது... பின் தொடரும் அந்தப் பெண்ணின் வீட்டுக்கும் தெரியக்கூடாது... இடையில் தெரிந்தவர்களும் (அப்பாவுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான்) அறியக்கூடாது.

இப்படி அஞ்சி அஞ்சியே பாதிக்கு மேல் ஓடிவிடும் தைரியத்தில் சற்றேனும் எஞ்சியிருந்தால்தான் பெண்ணிடம்  தட்டுத்தடுமாறியாவது, திக்கித் திணறியாவது பேச முடியும். இதில்  பெண்களைக் கவர  சாகசம் வேறு... கீழே விழுந்தாலும்  வலியை மறந்து ஒன்றுமில்லாததுபோல் புன்னகைத்தப்படி சைக்கிளை எடுத்து, ஹேண்டில்பார் சரிசெய்து செல்வதற்கும் (இப்போது பைக்) ஒரு கெத்து வேண்டும்.

இள வயது பையன்கள்...  மூச்சுக் கூட விட மறந்து  எதிரில் வந்தவளிடம் சொல்லத் தயங்கி, சொல்லத் தயங்கி... கடைசியில் அந்தப் பெண்ணுக்குக் கல்யாணமே பேசி முடித்திருப்பார்கள்.

மணந்தால் மகாதேவன்.. இல்லையேல் மரணதேவன் என்று காதலுக்கு  போர்க்கொடி தூக்கும் பெண்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணும் காலம் அது.  திரைப்படங்களில் கூட   இலை மறை காய்மறையாக காட்டப்படும் கணவன் மனைவியின் அந்நியோன்யமான  அன்பு, காதல் என்னும் வார்த்தையையும், காதலையும் உயர்ந்த இடத்தில் வைத்திருந்தது.

மனம் என்பது ஒன்றுதான். அதில்  ஒருவர் மட்டும்தான் குடியிருக்க வேண்டும். அப்படி வரும் ஒருவனை அந்த இடத்திலிருந்து தூக்கி எறிந்துவிட்டு வேறொருவனை வைப்பதா என்னும் ரீதியில் காதலை திருமணத்தோடும் வாழ்க்கையோடும் இறுக்கி முடிச்சு போடப் பட்டிருந்த காலம் அது. அதனாலேயே பெண்கள் வீட்டைத் தவிர வெளி ஆண்கள் உறவினர்களாக இருந்தாலும்  எதிரில் வந்தால் ஏறெடுத்தும் காணாமல்   தரையை தலை பார்த்தப்படி கடந்து விடுவார்கள்.

ஒருவேளை, காதலில் விழுந்துவிட்டால், காதலனே கணவன் என்பதில் உறுதியாக இருப்பார்கள். ‘கட்டுனா அவனைத்தான் கட்டுவேன். இல்லேன்னா காலம் முழுசும் கன்னியாவே இருந்துடுறேன்’ என்று சொன்னவர்களும் உண்டு. பிற்பாடு, அந்த வீடு, அதட்டி உருட்டி மிரட்டி கல்யாணம் செய்துவைக்கும். நான்கைந்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு சீரும்சிறப்புமாக வாழ்ந்தார்கள்.

ஆண்கள் மட்டும் என்னவாம்? காதல் தோல்வி என்றொரு வார்த்தை உண்டு. தாடி வைத்துக்கொள்வார்கள். தேவதாஸ் போல் திரிவார்கள். பிறகு வீடு நச்சரிக்க, மிரட்ட, கல்யாணம் பண்ணிக்கொண்டு, பெண் குழந்தை பிறந்தால், காதலியின் பெயரைச் சூட்டி ஆறுதல் பெறுவார்கள்.   

நவீன யுகம். மாற்றமில்லாமல் மாறிக்கொண்டிருக்கும் காலம்.  ஆண்கள், பெண்களின் கடைக்கண் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இப்போது இல்லை.  அவனும் நோக்க.. அவளும்  (தலை கவிழும்  லோகத்தில்தான் நாம் இல்லையே) நோக்குகிறாள். பார்வைகள் பரிமாறப்படுகிறது. நட்பு உறுதிசெய்யப்படுகிறது.  பொருளாதாரமும் அலசப்படுகிறது. இரண்டு பேருடைய முகவரிகள் தேவையில்லை. 24 மணி நேரமும்  தொடர்பை வலுப்படுத்த   கட்டணமில்லா ஃபோன் சேவை நிறுவனங்கள், நேரில் தவிர அவ்வப்போது  முகம்பார்த்து கொஞ்சிகொள்ளவும் தயவு புரிகிறது.  தந்தையின் தயவில் மட்டுமே வாழ்ந்த  குடும்பத்தில்  இளைய தலைமுறையினர்    பங்களிப்பு பொருளாதாரத்தில் குடும்பத்தையே   பெருமைபடுத்தும் வகையில் இன்று இருக்கிறது.

 தந்தையிடம்  அனுமதி பெற்ற காலம் போய், ஆலோசித்து செயல்பட்ட காலமும் கடந்து, இன்று காதல் குறித்த தகவலை செய்தியாக மட்டும் தெரிவிக்குமளவுக்கு போய்விட்ட இளைய தலைமுறையினர்  பெருகிவிட்டனர்.

  வீடு வாங்கும் விலையில் பைக்கும், தென்னந்தோப்புக்கே இணையான  விலையில் காரும், பத்து பவுன் பதக்கசங்கிலிக்கு இணையான ஃபோனும், பார்ப்பதையெல்லாம் சொந்தமாக்கிக்கொள்ளும் பண செலவழிப்பும்  தான் இன்றைய காதலை தீர்மானிக்கிறது என்று சொல்லுபவர்களும் உண்டு. இவை மறைமுகமாக சொல்லப்படவில்லை.  உத்தமக் காதல் புரியும் உன்னத ஜோடிகளே ஒப்புகொள்கிறார்கள்.

இன்றைய சூழ்நிலையில் தனது மகனுக்கு/ மகளுக்கு வரன் பார்க்கும் பெரும்பாலான பெற்றோர்களின் எதிர்பார்ப்பு  என்னவாக இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? சொந்த வீடு, வெளியில் சென்று வர குறைந்த பட்சம் கார், அவசரத்துக்கு பைக், வங்கியில் போதிய இருப்பு கூடவே  மாதம் கணிசமான சம்பளம், குடும்பத்தில் குறைந்த உறுப்பினர்கள்  இப்படியான பட்டியல்களை நீட்டிக்கொண்டே போகிறார்கள்.  இவையெல்லாம் இருந்தால், காதலுக்கு பச்சைக்கொடி, கிரீன் சிக்னல் என்று காட்டத் தயாராகத்தான் இருக்கிறார்கள்.

தீபாவளி போல பொங்கலைப் போல, இளைய தலைமுறையினரிடம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது காதலர்தினம். இந்த தினத்தை, காதலர்கள் மட்டுமின்றி, கல்யாணமாகி, குழந்தை பெற்றுக்கொண்டவர்கள் கூட கொண்டாடத்தான் செய்கிறார்கள்.

பின்னே... மனைவியைக் காதலிப்பதும் கணவனை நேசிப்பதும் இன்னும் இன்னும் உசத்தியில்லையா?

ஓகே... காதலிப்பவர்களுக்கு இனிக்க இனிக்க காதலர் தின வாழ்த்துகள்!

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close