[X] Close

செய்திகள் வாசிப்பது..! - வெ.இறையன்பு


radio-day-irayanbu

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 19:45 pm
  • அ+ அ-

வெ.இறையன்பு 

சகல பொழுதுபோக்குகளுக்கும் சாதனமாக வானொலி இருந்த காலம் உண்டு. ‘ரேடியோப் பெட்டி’ என அதற்கு நாமகரணம். அதை உயரத்தில் வைத்திருப்பதற்கென்று பிரத்யேகப் பலகை. அதன் மீது கம்பீரமாக அதன் இருப்பு. நம் சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொண்டும், ஆற்றிக்கொண்டும் அனுசரணையாக இருந்த அது, வீடுகளில் அயர்வைப் போக்கும் ஆசானாகவும் திகழ்ந்தது.

காலையில் ஒருவிதமான கையொப்ப இசை. அதற்குப் பிறகே நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கும். ஆகாஷவாணியின் செய்திகள் மட்டுமே ஆதாரப்பூர்வமானவை. அவை வாசிக்கும் நேரங்களில் கடிகார முள் சரியான நேரத்திற்கு திருப்பி வைக்கப்படும். செய்திகள் வாசிப்பது என்று சற்று கம்பீரம் கலந்த சரோஜ் நாராயணசாமியின் குரலில் மோனலிசாவின் புன்னகையில் இருக்கிற அத்தனை ரசங்களைப்போல பாவங்கள் வெளிப்படும். எங்கு வானொலியில் செய்தி ஒலித்தாலும் அந்தப் பக்கம் செல்கிற அத்தனை வழிப்போக்கர்களும் ஒரு நிமிடம் நின்று முக்கியச் செய்திகள் இருக்கின்றனவா என்று கேட்டுவிட்டுச் செல்வார்கள். நாட்டின் தலைவர்கள் உடல்நலமில்லாமல் இருந்தால் ‘என்ன ஆயிற்று!’ எனக் கேட்பதற்கு செய்தி எப்போது வாசிப்பார்கள் என மக்கள் காத்திருப்பார்கள். ‘அண்ணா பேசுகிறார்’ என்று அறிவிக்கப்பட்டால் வானொலி இருக்கும் வீடு சாவடியாகும். தேர்தல் நேரத்தில் முடிவுகளைக் கேட்க கூட்டம் கூடும். வானொலி இருக்கும் வீடு அன்று வசதியானதாகக் கருதப்பட்டது.

பிறகு வந்தது இணைப்புத் தேவைப்படா டிரான்சிஸ்டர். எந்த இடத்திற்கும் எடுத்துச் செல்லலாம் என்பதே அதன் மகத்துவம். அளவு குறையக்குறைய மவுசு அதிகம். குடும்பக்கட்டுப்பாட்டை திக்கெங்கும் பரப்பியதில் அகில இந்திய வானொலிக்கு மிகப் பெரிய பங்கு. அதை ‘ஆகாஷ்வாணி’ எனச் சொல்வதா என்று தமிழகத்தில் கிளம்பியது மிகப் பெரிய சர்ச்சை. இந்தியா - பாகிஸ்தான் போர் 1971-ஆம் ஆண்டு நடந்தபோது தேசப்பற்றை ஊட்டியதில் வானொலிக்கு இருந்தது பெரும் பங்கு.

யாராவது முக்கியத் தலைகள் சாய்ந்தால் சோகமான இசை வானொலியில் கிளம்பும். அதுவே அன்று வெற்றிடத்திற்கு அடையாளம்.

நாங்கள் சிறுவராய் இருந்தபோது பிடித்த பாடல் வருகிறதா என வானொலியைத் திருப்பிப் பார்த்திருப்போம். காதைத் திருகினால் கான மழை பொழிவது வானொலி மட்டுமே. விநாடி வினா நிகழ்ச்சி வானொலியில் பிரபலம். இளைஞர்களை ஊக்குவிக்க இளைய பாரதம். கல்லூரிகளில் நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளின் தொகுப்பாக மலரும். நம் பெயர் வானொலியில் வராதா என பொது வினாக்களுக்கு விடையெழுதிப் போடுவோம். வந்துவிட்டால் துள்ளிக் குதிப்போம்.

முத்துப்பந்தல் என்கிற ஒரு நிகழ்ச்சி. இன்றைய திரைப்படத் தொகுப்பு நிகழ்ச்சிகளுக்கு அதுவே முப்பாட்டன். கதைபோல ஒரு சம்பவத்தைச் சொல்லி அதன் இடையே சூழலுக்குத் தகுந்தவாறு திரைப்படப் பாடல் ஒன்றை ஒலிக்கச் செய்வார்கள். அதற்கு நான் உரையெழுதி அனுப்பினேன். பள்ளி முகவரி போட்டே அஞ்சல் செய்தேன். தேர்வானதாய் கடிதம் வந்தது. பள்ளி முழுவதும் அதே பேச்சு. தந்தையுடன் திருச்சிக்குப் பயணித்தேன். நிலையம் சென்றதும் பேரதிர்ச்சி. முத்துப்பந்தல் நிகழ்ச்சி மாணவர்களுக்கு அல்ல, பெரியவர்களுக்கே என அவர்கள் சொன்னதும் என் அத்தனை கப்பல்களும் கடலில் மூழ்கின. கையிலிருந்த எதுவும் நழுவி கீழே விழுந்து உடையவில்லை. காரணம், அந்தக் கடிதம் மட்டுமே கையிலிருந்தது. அன்று அப்பாவிற்கு அதிக செலவு வைத்து விட்டோமே என்று எதுவுமே சாப்பிடாமல், ‘பசியே இல்லை’ எனச் சமாளித்து வீடுவந்து சேர்ந்தேன். அப்படி என் முதல் முயற்சி முற்றிலும் தோல்வியானது. முத்துப்பந்தலில் முத்தெடுக்க முயன்று மூழ்கிப் போனேன்.

எங்களுக்கு திருச்சி வானொலியே காதுகளுக்குத் தாயகமாக இருந்தது. தேநீர்க் கடைகளிலும், உணவகங்களிலும் மக்களை ஈர்க்க ரேடியோப் பெட்டிகள் அன்று அத்தியாவசியம். ஊருக்கொரு ரேடியோ ரூம் உண்டு. அதை இயக்குவதற்கு ஆட்கள் இருந்தார்கள். கொழுக் மொழுக்கென்றிருக்கும் குழந்தை படம் போட்ட மர்ஃபி ரேடியோக்கள் அன்று பிரபலம். அந்தக் குழந்தையைப்போல ஆகவேண்டுமென்றே அத்தனை தாய்மார்களும் குழந்தையைக் காட்டி சோறு ஊட்டுவார்கள். குருவிக்காரர்கள் தோளில் வானொலிப்பெட்டியும் தொங்கும். அன்று தவணை முறையில் ரேடியோ விற்பனை உண்டு.

வானொலி என்றால் மறக்க முடியாதது வீடும் வயலும் நிகழ்ச்சி. மாலை வேளையில் அற்புதமான பாடலுடன் அது ஆரம்பமாகும். அதைக் கேட்காமல் உழவர்கள் தூங்க மாட்டார்கள். பயிர்சாகுபடியிலும், பயிர்க்காப்பு முறையிலும் வானொலிக்குப் பெரும் பங்கு இருந்தது. பயிர்களுக்கு பூச்சிமருந்து அடிக்கவும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவும் விழிப்புணர்வை ஏற்றியதில் வானொலிக்கு முதலிடம்.

திரையிசை அன்று குறைவு. வர்த்தக ஒலிபரப்பில் அது அவ்வப்போது எட்டிப்பார்க்கும். திரைத்துறையினர் வழங்கும் தேன்கிண்ணத்திற்காக மூடிய செவிகளும் திறந்துகொள்ளும். திருச்சி வானொலியின் சூரியகாந்தி என் சமவயதினருக்குப் பசுமையாய் நினைவிருக்கும். தென்னூர் கிருஷ்ணமூர்த்தி அத்தனை வேடங்களிலும் அபாரமாய் நடிப்பார். வானொலியில் நாடகங்களில் மின்னும் வீரம்மாள், மன்னை ஜெயராமன், பார்வதி ராமநாதன் ஆகி யோர் குடும்ப உறுப்பினர்களைப்போல ஆகிப்போனார்கள்.

வானொலியில் நாட்டுப்பற்றுப் பாடல்கள், இலக்கியப் பேருரைகள், கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள் என அறிவை அடர்த்தியாக்கும் பல நிகழ்வுகள். அவற்றைக் கேட்டுக் கேட்டு கேள்வி ஞானம் அனைவருக்கும் கூடியது. செந்தமிழிலில் பேசுகிற முறையை மாற்றி, பேச்சுத் தமிழில் ஐந்து நிமிடம் பேசி இன்று ஒரு தகவலின் மூலம் என்றும் இதயத்தில் நிலைத்திருக்கும் இடத்தைப் பிடித்தவர் தென்கச்சி சுவாமிநாதன். நகைச்சுவையே பேச்சாக ஜொலித்தவர் முசிறி வீராசாமி.

பொங்கல் திருவிழாவின்போது சென்னையில் அவசியம் நடக்கும் கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச். சேப்பாக்கம் பொங்கி வழியும். வானொலி நேர்முக வர்ணனை மூலைமுடுக்குகளிலெல்லாம் ஆட்டத்தைப் பார்க்கும் ஆனந்தத்தை அள்ளித் தரும். திடீரென முளைத்தது தமிழ் வர்ணனை. ராமமூர்த்தி, கூத்தபிரான் ஆகியோர் அழகு தமிழில் வர்ணிக்க, மணி என்பவர் சிறப்புக் கருத்து தெரிவிக்க தமிழ்மயமானது கிரிக்கெட்.

தமிழர்களின் திரைப்பட ஆர்வத்தைத் தீர்க்க வந்தது இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் வர்த்தக நிகழ்ச்சி. கே.எஸ். ராஜாவின் குரல் அனைவருக்கும் அத்துப்படி. நூற்று ஐம்பது பெயர்களை மளமளவெனப் படித்து நேயர்கள் அனைவரையும் திருப்திப்படுத்துவார். வானொலிக்கென்றே ரசிகர் பட்டாளம் இருந்தது. விரும்பிக் கேட்ட நேயர்களில் அவர்கள் பெயர் நாளொன்றுக்கு மூன்று முறை ஒலிக்கும். போடிநாயக்கனூர் நீலா, கொண்டைக்கவுண்டன்பாளையம் முத்துக்குமார், நிலக்கோட்டை பள்ளப்பட்டி ஆறுமுகம், ராஜதானிக்கோட்டை சித்தன் ஆகியோர் பெயர் அனைவருக்கும் தெரிந்தவை.

அரசு வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பாளர் பதவி அவ்வளவு எளிதல்ல. அத்தனை கெடுபிடிகள். நிறையத் தெரிந்திருக்க வேண்டும். அகில இந்திய வானொலியில் பணியாற்றுவது பெரும் பேறு. உச்சரிப்பை அவர்கள் பேசுவதை வைத்து சரிபார்த்துக்கொள்ளலாம். இன்று தனியார் வானொலி நிலையங்களின் ஆதிக்கம். தொகுப்பாளர்கள் உச்சரிப்பில் ‘ல’, ‘ள’, ’ழ’ எதுவும் உருப்படியாக இல்லை. ‘பள்ளி’ மருவி ‘பல்லி’ ஆகிவிட்டது.

வானொலியை அனுபவிக்க தனிப்பெட்டி தேவையில்லை. கைபேசியே போதும். நிகழ்ச்சியாளர்கள் பேசிக்கொண்டேயிருப்பதால் அது சத்தங்களின் சாம்ராஜ்யமாகி விட்டது. தொலைக்காட்சி வந்த பிறகு புதிதாகப் பிறந்த குழந்தையை எல்லோரும் கவனிக்க பெரிய குழந்தை அழுவதைப்போல கேலிச்சித்திரம் ஒன்று வெளியானது. அந்த நிலையை பண்பலை மாற்றியமைத்தது. பணியாற்றிக்கொண்டே பாடல் கேட்க பண்பலையே பல இடங்களில் ஒலிக்கிறது. இரவு வாகனம் ஓட்டுபவர்களுக்கு அதுவே பேச்சுத் துணை. எங்கு போக்குவரத்து நெரிசல் என்பதுகூட உடனடியாக அறிவிக்கப்படும் மின்னல் வேக அணுகுமுஈறை.

காட்சிப்படுத்துதலை வானொலி கற்றுத் தந்தது. நாமாக அதில் வருபவர்களுக்கு உருவம் ஒன்றை உருவாக்கினோம். கடைசி வரை அவ்வுருவம் தெரியாமலிருந்தது சுவாரசியம். இன்று குரல்களின் பரிச்சயம் நெரிசலின் காரணமாகக் குறைந்து வருகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close