[X] Close

‘‘75 வயதாகும் எனது தாயை மோடி அரசு பழிவாங்குகிறது’’ - ராபர்ட் வதேரா பரபரப்பு குற்றச்சாட்டு


robert-vadra

  • நெல்லை ஜெனா
  • Posted: 12 Feb, 2019 16:37 pm
  • அ+ அ-
75 வயதாகும் எனது தாயை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு பழிவாங்குகிறது என பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா குற்றம்சாட்டியுள்ளார். லண்டனில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடுகள் உள்ளிட்ட சொத்துகள் வாங்கிய விவகாரத்தில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக, ராபர்ட் வதேரா மற்றும் மனோஜ் அரோரா மீது, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் சில தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதால், வதேராவுக்கு பிரதிபலனாக சொத்துக்கள் வாங்கி தரப்பட்டதாக பாஜக புகார் கூறி வருகிறது. இதுபோலவே ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் நிலம் வாங்கியது உள்ளிட்ட விவகாரங்களிலும் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார்கள் தொடர்பாக அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, டெல்லி நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா முன்ஜாமின் பெற்றார். வரும் 16-ம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என அப்போது அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று பிப்ரவரி -6ம் தேதி வதேரா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். தொடர்ந்து 3 நாட்கள் அவரிடம் விசாரணை நடைபெற்றது. வதேரா மட்டுமட்டுமின்றி அவரது தயார் மவுரினிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பிகானிர் நில விவகாரம் தொடர்பான விசாரணைக்காக ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு வதேரா மற்றும் மவுரினுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி வதேராவும், அவரது தயார் மவுரின் ஆகியோர் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். முன்னதாக விசாரணைக்கு செல்லும் முன்பாக வதேரா தனது பேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது: ‘‘கடந்த நான்கரை ஆண்டுகளாக எதும் செய்யாமல், விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் என்னை விசாரணைக்காக அழைப்பது வெறும் அரசியல் தான். இது பாஜகவின் தேர்தல் வித்தை என மக்கள் எண்ண மாட்டார்களா? நான் மட்டுமல்லாமல், 75 வயதாகும் எனது தாயை விசாரணைக்காக அழைத்திருப்பது இந்த அரசின் மிக மோசமான பழிவாங்கும் அரசியலையே காட்டுகிறது. மூத்த குடிமக்களை இவ்வாறு அலைக்கழிப்பது என்ன நியாயம்? தனது மகளை இழந்து சோகத்தில் தவித்த எனது தாயை என்னுடன் சில காலம் தங்கி இருக்குமாறு கூறினேன். அதற்காக அவர் விசாரணை என்ற பெயரில் கொடுமையை அனுபவிப்பது எந்த விதத்தில் நியாயம்?’’ எனக் கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close