’ரஜினி கேரக்டரில் சிவகுமார்; சிவகுமார் கேரக்டரில் ரஜினி!’ - எஸ்.பி.முத்துராமனின் ‘மாத்தியோசி’ ஹிட்டு

புவனா ஒரு கேள்விக்குறி
வி.ராம்ஜி
ரஜினி கேரக்டரில் சிவகுமாரையும் சிவகுமார் கேரக்டரில் ரஜினியையும் நடிக்க வைப்பதாக திடீரென்று யோசித்தோம். செயல்படுத்தினோம். இப்படி மாற்றி யோசித்ததில் பெரும் வெற்றியையையும் பெற்றோம் என்று இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தெரிவித்தார்.
ஏவிஎம்மில் எடிட்டிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றினார். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தின் மூலமாக உதவி இயக்குநராக பணியாற்றியவர், இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தரிடம் ஏராளமான படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். பிறகு ‘கனிமுத்துபாப்பா’ படத்தின் மூலமாக இயக்குநரானார்.
இதையடுத்து கமல், ரஜினி முதலானவர்களுடன் ஏராளமான படங்களை இயக்கினார்.
இதுகுறித்து எஸ்.பி.முத்துராமன் தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
எழுத்தாளர் மகரிஷியின் நாவலை பஞ்சு அருணாசலம் அவர்கள் படமாக்க முடிவு செய்தார். என்னிடமும் சொன்னார். அந்தக் கதை வித்தியாசமாகவும் நல்ல கருத்தைச் சொல்லும்விதமாகவும் இருந்தது.
இந்தப் படத்தில் இரண்டு நாயகர்கள். இதற்கு சிவகுமாரையும் ரஜினியையும் நடிக்க வைப்பது என்று முடிவானது. பிறகு திடீரென்று எங்களுக்கு ஒரு யோசனை. அதாவது படத்தில், கொஞ்சம் கெட்ட குணங்கள் கொண்ட கேரக்டரை ரஜினி செய்வதாக இருந்தது. அவருடன் இருக்கும் நல்லவராக, சிவகுமார் நடிப்பதாகவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இப்போது எங்களின் யோசனை என்னவென்றால், அதுவரை ரஜினி வில்லனாகத்தான் நடித்துக் கொண்டிருந்தார். அந்த ரஜினியை நல்லவனாகவும் அதுவரை நல்லவனாகவே நடித்துக்கொண்டிருந்த சிவகுமாரை, கெட்டகுணங்கள் கொண்ட வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்கவைத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.
ரஜினியிடம் சொன்னோம். அவர் ஓகே சொல்லிவிட்டார். சிவகுமார், ஏற்கெனவே மகரிஷியின் நாவலைப் படித்திருந்தார். அவரிடம் சொன்னபோது, ‘என்ன சார் இது, நல்லவன் கேரக்டர் பண்றேன் சார். வில்லனிக் ரோல் பண்ணினா இமேஜ் என்னாகறது சார்?’னு ரொம்பவே தயங்கினார். ‘இதுவரை பண்ணிட்டிருந்ததிலேருந்து கொஞ்சம் மாத்திப் பண்ணும்போது, உங்களுக்கும் நடிக்க ஸ்கோப் கிடைக்கும். உங்க கேரக்டர் மேல பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு வந்துரும். நீங்களும் பேசப்படுவீங்க’ன்னு அவரை கன்வின்ஸ் பண்றதுக்குள்ளே போதும்போதும்னு ஆகிருச்சு.
ஒருவழியா சம்மதம் வாங்கி படம் பண்ணி மிகப்பெரிய வரவேற்பும் கிடைச்சிச்சு. அதுதான் புவனா ஒரு கேள்விக்குறி. ரஜினி, சிவகுமார் ரெண்டுபேருக்குமே அவங்களோட நடிப்பால பேரு கிடைச்சிச்சு.
இவ்வாறு இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தெரிவித்தார்.
இதை மிஸ் பண்ணாதீங்க...
- ரஜினியை கமல்னு, கமலை ரஜினின்னு கூப்பிட்டிருக்கேன்! இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கலகல
- ‘சிவாஜி அண்ணனுக்கு கம்மியான டயலாக்கா?’ மகேந்திரனின் ‘தங்கப்பதக்கம்’ நினைவுகள்
- ‘பாக்யராஜ் பத்தி தப்புக்கணக்கு போட்டுட்டேன்! - இளையராஜா ஓபன் டாக்
- ‘சர்வம் சுந்தரம்’ பாட்டு; நான் நிதானத்துலயே இல்ல; ஏவிஎம் செட்டியார் சொன்ன ஒத்தை வார்த்தை! - கவிஞர் வாலி ஞாபகங்கள்