[X] Close

சென்னையில் தண்ணீர் தண்ணீர்! - கோடையை மிரட்டப்போகுது தண்ணீர்ப்பஞ்சம்!


chennai-water-problem

  • kamadenu
  • Posted: 08 Feb, 2019 12:26 pm
  • அ+ அ-

ஜெமினி தனா

அலங்காரச் சென்னை கூடிய விரைவில் அல்லலுக்கு ஆளாகப் போகிறது எனும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது தண்ணீர் பிரச்சினை. 

ஒருபக்கம், நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. அந்த அதள பாதாளத்திலும் நீரை மாசுபடுத்த இருக்கவே இருக்கின்றன எக்கச்சக்க  காரணங்கள்.

இதை விட்டுவிடுவோம்.

அடுத்தது மழைநீரை வாங்கி கைகொடுக்க, அள்ளி வழங்க,  பூண்டி, சோழவரம், புழல், செம்பரப்பாக்கம் என சென்னையைச் சுற்றிலும் ஏரிகள் இருக்கிறதே என்று கேட்கலாம். ஏரிகள் இருக்கின்றன. ஆனால் அவற்றில், தண்ணீரைக் காணோமே!

கடந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழையில், தமிழகத்தின் இண்டுஇடுக்கெல்லாம் மழை வெளுத்துவாங்கியது. கோவைப் பக்கம் மழை, திருச்சியில் கனமழை, திருநெல்வேலியில் மழைக்காக பள்ளி விடுமுறை, புதுக்கோட்டைப் பக்கமும் கும்பகோணம் பக்கம் செம மழை என்றெல்லாம் தினமும் செய்திகள் வந்தவண்ணமிருக்க, அதை ஏக்கத்துடனும் ஆசையுடனும் எதிர்பார்ப்புடனும் படித்தும் பார்த்தும் கொண்டிருந்தார்கள், சென்னைவாழ் மக்கள். ஆமாம்.. வட கிழக்கு பருவ மழையும் கைவிரித்துவிட்டது. சென்னைக்கு வராமலேயே ‘டாட்டா’காட்டிவிட்டது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் 2018ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 12 சதவிகிதம் குறைவாகவும், வடகிழக்கு பருவமழை 24 சதவிகிதம் குறைவாகவும் பெய்ததாகக் கூறினார்.

குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சென்னை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் இயல்பை விட 50 சதவிகிதம் குறைவாக மழை பெய்திருக்கிறது என்றும் தெரிவித்தார். ஆக சென்னை வாசிகள் கோடை தாகத்தைச் சமாளிக்கும் வகையில்   ஏரிகளில் போதிய நீர் இருப்பும் இல்லை என்பது ஏமாற்றமே.    

சென்னையின் குடிநீர் தாகத்தைத் தீர்த்துவைக்கும் நான்கு ஏரிகளின் மொத்த நீர்  கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கன அடி.  ஏரிகளில் உள்ள நீரும், இதைத் தவிர  வீராணம் ஏரியிலிருந்தும், ஆழ்துளை கிணறுகளில் இருந்தும், நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் இயங்கும் கடல்நீரை குடிநீராக்கும் முறையிலிருந்தும் பெறப்படும் நீரும் சென்னை மக்களின் தாகத்தைத் தீர்க்க பெரிதும் உதவுகிறது. ஆனாலும் இவை போதுமானதாக இருக்காது என்பதே கண்ணீர் வரச்செய்யும் உண்மை.

இந்தநிலையில், கடந்த ஆண்டை  விட இந்த  ஆண்டுகளில் உள்ள  நீர் இருப்பு வெகுவாகவே குறைந்துள்ளது. மொத்தமே 1 டிஎம்சி  தண்ணீர் மட்டுமே உள்ள நிலையில் கோடைக்காலத்துக்கு முன்பே நீர் முழுவதும் வறண்டுவிடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது ஆந்திராவில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இதன் வழியாகத்தான் கிருஷ்ணா நதிநீர் பூண்டி ஏரிக்கு வந்துசேரும். ஒட்டுமொத்த சென்னை மக்களின் தாகத்தைத் தீர்க்க முடியாவிட்டாலும் தொண்டைக்குள் ஈரத்தைத் தக்கவைக்கலாம் என்பதே ஆறுதலான விஷயம்தான்.

கொட்டித் தீர்க்கும்  கனமழையும், வாட்டி வதைக்கும் வெயிலும் சென்னைக்கு ஒன்றும் புதிதல்ல. சென்னைவாசிகளுக்கு இது பழக்கமானதுதான். ஒன்று  அதிக மழையில் தண்ணீரில் மக்கள் மிதப்பார்கள். அல்லது தண்ணீருக்காக மக்களே வெள்ளமாய் மிதப்பார்கள். பரிதவிப்பார்கள்.

இறுதி நேரத்தில் கூட அதிசயம் நிகழலாம் என்பது தண்ணீர்ப் பஞ்சத்துக்கு பொருந்தாது. இந்தக் கோடையில் தண்ணீர்ப் பஞ்சம், பஞ்சமில்லாமல் சென்னையை வைத்து செய்யப் போகிறது என்பதால்  கூடுதல் முன்னெச்சரிக்கையை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மழையின்மை, பருவ மழை  ஏமாற்றம், நிலத்தடி நீர் பாதாளத்தில்… என்றிருக்க, கேன்களிலும், தண்ணீர் லாரிகளிலும் நிரப்பும் தண்ணீருக்குக் கூட பஞ்சம் வரலாம். சட்டியில் இருந்தால்தானே அகப்பைக்கு கிடைக்கும்!

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டிலிருந்து சமையலறை, குளியலறையிலிருந்து வெளியேறும் நீரை சுத்திகரித்து செடிகளுக்கும், தோட்டங்களுக்கும் விடலாம்.

வெஸ்டர்ன் கழிப்பறைகள் அதிக நீரை செலவு செய்ய வழிவகுக்கும். வயதானவர்கள், மூட்டுவலியால் பாதிப்படைந்தவர்கள் தவிர  மற்றவர்கள் இந்தியன் கழிப்பறையைப் பயன்படுத்தினால் தண்ணீரும் சிக்கனமாகும். ஆரோக்கியமும் உண்டாகும்.

ஊர்ல அருவியில்தான் குளிப்பேன். அதனால் இங்கேயும் அருவி போல ஷவர்தான் என் டேஸ்ட் என்பவர்கள் சிறிது காலம் ஷவரைக் கழற்றி வையுங்கள்.  பாத்டப்பில் பத்துபேர் குளிக்குமளவு நீரை நிரப்பி குளித்தால்  பத்தாண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் தொட்டு உடலை துடைத்துக்கொள்ளத்தான் முடியும் என்பதை உணர்ந்து சிக்கனமாக கையாளுங்கள்..

அரிசி களைந்த நீரில் காய்கறிகளை அலசுங்கள். அலசிய நீரை அழகுக்கு வைத்திருக்கும் செடிகளுக்கும் ஊற்றலாம். வாட்டர் ஃப்யூரி பையரில் இருந்து வெளியேறும் வீணான நீரை பக்கெட்டில் சேமித்து பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாம்.

தண்ணீரைப் பிடித்து வைத்து பாத்திரங்கள் கழுவினால் தண்ணீரின் தேவை குறையும். தண்ணீர்ச் செலவும் கம்மியாகும்.

ஆட்டோமெடிக் வாஷிங் மிஷினுக்கு தண்ணீர்  அதிகம் தேவை. இயன்றால் கைகளால் துணிகளை அலசுங் கள். அல்லது தண்ணீரின் அளவைக் குறைத்து மிஷினை ஓடவிடுங்கள். 

செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறேன் என்று பைப்பை பிடித்தப்படி நிற்காமல் சொட்டு நீர் பாசனம் போல் தெளித்து விடுங்கள். பஞ்சராகி லீக்காகும் தண்ணீர் குழாய்களை அப்புறப்படுத்தி, புதிய குழாய்களை மாட்டுங்கள். வெளியே செல்லும்போது  தண்ணீர் பைப்புகள் நன்றாக மூடியிருக்கின்றனவா என்று பார்ப்பது நல்லது.

ஆக தங்கத்தைப் பாதுகாப்பது போல தண்ணீரைப்  பாதுகாக்க வேண்டும்.

கோடையில் சைக்கிள்களில் நைலான் கயிற்றில் சுருக்கு போட்டு கொள்ளும் அவலம் குடங்களுக்கு நேரும். அது சரி... அந்தக் குடங்களை நிரப்புவதற்குத் தண்ணீர் வேண்டுமே!

அந்தக் காலத்தில், வீண் செலவு செய்பவர்களை ‘பணத்தை தண்ணி மாதிரி செலவு செய்றாம்பா’ என்பார்கள். தண்ணீர்ப் பஞ்சம் தலை விரித்தாடாத காலகட்டம் அது. இப்போது தண்ணீரை கண்ணீர் போல செலவு செய்யவேண்டிய அவலம் சென்னை மக்களே!

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close