[X] Close

பறவைக் காதலரான எழுத்தாளர்!


bird-lover-writer

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 16:22 pm
  • அ+ அ-

பொதுவாக எழுத்தாளர்கள் இலக்கியத்தை காதலிப்பார்கள். ஆனால், கோவை எழுத்தாளர் க.ரத்னம், அவரது 89 வயதிலும் பறவைகளைக் காதலித்துக் கொண்டிருக்கிறார்.

அவரைத் தேடிச் சென்றபோது, கோவை சிங்காநல்லூர் வேலப்ப நகரில் உள்ள அவரது வீட்டின் மேல்மாடியில் அமர்ந்துகொண்டு, பறவைகளை கவனித்துக் கொண்டிருந்தார். "இங்கே உட்கார்ந்துட்டுகூட 12 விதமான பறவைகளைப் பார்க்கலாம். வருஷா வருஷம் நூற்றுக்கணக்கான ‘ஸ்வாலோ’ பறவைகள் வந்துசெல்லும். ஆனா, இந்த வருஷம் ஏனோ வரலை. சூழ்நிலைகள் மாறிப்போச்சு. அவற்றுக்கும் தொந்தரவுகள் வந்துருச்சு இல்லியா?’’ என்கிறார் சன்னக் குரலில்.

சில மாதங்களுக்கு முன் நேரிட்ட விபத்தில்  இடுப்புக்கு கீழே மூட்டு எலும்பு முறிந்து,  அறுவைசிகிச்சை செய்யப்பட்டு தடியூன்றித்தான் நடக்கிறார். அந்த நிலையிலும், பறவைகள் ஆராய்ச்சி மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சென்றுவந்ததை நினைவுகூர்கிறார்.

‘‘கவிதை, நாவல், சிறுகதை மட்டுமல்ல,  ஜோக்குகள், துணுக்குகளும்கூட நிறைய எழுதியிருக்கேன். 1960-1975-களில் குமுதம், ஆனந்த விகடன், சாவி, கல்கி, அமுதசுரபினு தமிழில் உள்ள அத்தனை இதழ்களிலும் என் படைப்புகள்  ஏராளமாய்  வெளிவந்திருக்கு. ‘ஹவ் டூ வாட்ச் த பேர்டு?’னு ஒரு ஆங்கிலப் புத்தகம். அமெரிக்கப் பறவைகள் பற்றி அந்நாட்டு எழுத்தாளர் ஒருத்தர் எழுதியது. அதைப் படிச்சதுல ‘பேர்டு வாட்ச்சிங்’ல ஆர்வம் வந்துருச்சு. 1965-லிருந்து அஞ்சு வருஷம் ஊர் ஊரா பறவைகளைக் காண பைனாக்குலர வச்சுக்கிட்டு சுத்தினேன். பார்த்த பறவைகள், அவற்றைப் பார்த்த இடங்கள் எல்லாம் டைரியில எழுதிடுவேன். அப்படி திரட்டிய 250 பறவைகளைப் பற்றிய குறிப்புகளை, 1974-ல் ‘தென்னிந்திய பறவைகள்’ என்ற 500 பக்க நூலாக தமிழக அரசு பாடநூல் நிறுவனம் வெளியிட்டது. அந்த நூலை மெய்யப்பன் பதிப்பகம் வண்ணப் படங்களுடன்,  ‘தமிழ்நாட்டு பறவைகள்’ என்ற தலைப்பில் வெளியிட்டது. அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது.

1988-ல் ‘தமிழில் பறவை பெயர்கள் ஆய்வு’, 2000-ல்  ‘இவர்கள் பார்வையில் அகலிகை’ என்ற இலக்கிய ஆய்வு நூலும், 2004-ல் ‘தமிழ்நாட்டுப் பறவைகள்’ என்ற ஆய்வு நூலும் தமிழக அரசின் பரிசுகளைப் பெற்றது" என்றவர், சிறுகதைச் சாளரம், சிறுகதை முன்னோடிகள், தமிழ்நாட்டு மூலிகைகள், சங்க இலக்கியத்தில் யானை, திராவிட இந்தியா மொழிபெயர்ப்பு, கம்பன் ராமகாதையில் பறவைகள் ஆய்வு, திருக்குறள் சொல்லடைவு தமிழ் மற்றும் ஆங்கில விளக்கம் ஆய்வு, டப்ளின் நகரத்தார் மொழிபெயர்ப்பு, செகாவ் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு பற்றியெல்லாம் பேசினார்.

குறிப்பாக, புதுமைப்பித்தன் எழுத்துகள் ஈர்த்த விதம், அவரின் அச்சில் வராத கையெழுத்துப் பிரதிகளை தேடித்தேடி பதிப்பிக்க ஐந்திணை பதிப்பகத்தை அணுகியது குறித்தும் பேசினார். அப்படியே தனது பால்ய கால நினைவுகளை பகிர்ந்தார்.

பயமுறுத்திய `பிளேக்`

‘‘கீரணத்தம் என் அம்மத்தா ஊர். அங்கதான் 1931-ம் வருஷம் டிசம்பர் 13-ம் தேதி  பிறந்தேன். குரும்பபாளையத்துக்கு அப்பாரு குடிபோனாரு. தொடக்கப் பள்ளி அங்கேதான். உயர்நிலைக் கல்வி இடிகரை பள்ளியில். நான் 8-ம் வகுப்பு படிக்கிறப்ப கோயமுத்தூரை பிளேக் நோய் தாக்க, மக்கள் கிராமத்தை காலி செஞ்சுட்டு ஓட ஆரம்பிச்சாங்க. பள்ளிக்கூடம் 2 மாசம் மூடிட்டாங்க. அப்ப நான் எட்டாம் வகுப்பு. பரீட்சையே நடக்கலை. அப்பவெல்லாம் பிளேக் நோய் தாக்கினவங்களை தொடக்கூட மாட்டாங்க. செத்துடுவாங்கன்னு ஊட்டை விட்டு திண்ணையில போட்டுடுவாங்க. அவங்களுக்கு ட்ரீட்மென்ட் தர டாக்டருக, செத்தா எடுத்து புதைக்கிறதுக்கு கூலி ஆட்கள்கூட வரமாட்டாங்க. அப்படி செத்து திண்ணையில கிடந்தவங்களைப் பாத்திருக்கேன். அப்ப,  பிரெஞ்சு எழுத்தாளர் ஒருத்தர் பிளேக்குனு ஒரு நாவலை பிரெஞ்சுல எழுதியிருந்தார். பிளேக் கண்டவங்களை தொட்டுதூக்கி சிகிச்சை செய்து சேவையாற்றின கதை அது’’ என்கிறார் ரத்தினம்.

இடைநிலைப் படிப்பை கோவை அரசு கலைக் கல்லூரியிலும், எம்.ஏ. இலக்கியம் பட்ட மேற்படிப்பை பச்சையப்பன் கல்லூரியிலும் படித்த கதையை விவரிக்கிறார். தொடர்ந்து, 1955 முதல் 1990 வரை அரசுக் கல்லூரிகளில் விரிவுரையாளர், பேராசிரியராகப் பணியாற்றி, தஞ்சாவூர் அரசுக் கல்லூரியிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார்.

படிக்கிற காலத்தில் விந்தியா என்ற பாம்பே பத்திரிகையில் எனது முதல் சிறுகதை வெளியானது. அந்தக்காலத்திலேயே ரூ.10 சன்மானம் அனுப்பியிருந்தாங்க. அப்புறம்,  விகடனில்  நான் எழுதிய கதைகள் பிரசுரமாகியிருக்கு. தாமரையில் தலித் கதைகளும் வந்திருக்கு. 1961-ல் முதல்தொகுப்பு `பேதை நெஞ்சம்`. முழுக்க வசன கவிதை.  கல்கி, சுதேசமித்திரன் இதழ்களில் என் படைப்புகளுக்கு விமர்சனங்கள் வந்திருக்கு. அதை எழுதியவர் கோவி.மணிசேகரன். அதுக்கப்புறம்தான் `கல்லும் மண்ணும்` நாவல் எழுதினேன். என் சொந்தக் கிராமத்தின் பக்கத்தில் ஒரு மலைக்குன்று இருக்கும். அதற்கு ரத்னகிரினு பேரு. அதை வச்சுத்தான் எனக்கு ரத்தினம்னு பேரு வச்சாங்க. அந்த மலைக்குன்றை உடைத்துக் கல்லெடுத்துத்தான் ரோடு போடுவாங்க. கட்டிடம் கட்டுவாங்க. இந்த வேலைகளுக்கு ஜனங்க போறதும், கிராமத்து சந்தை நடக்கிறதுமா காட்சிகள் இருந்துட்டே இருக்கும். இதையெல்லாம் கலந்து `கல்லும் மண்ணும்` எழுதினேன். அது புத்தகமா வந்தவுடனே, வாசகர்களிடம் நல்ல வரவேற்பு. நிறைய கடிதங்கள் வந்துச்சு.

ஊர், ஊரா நான் பணிக்காக மாற்றலாகிப் போயிட்டிருந்தது, பறவைகளை வாட்ச் செய்ய வசதியா அமைஞ்சது. கல்கியோட பொன்னியின் செல்வனில் கோடியக்கரை வரும். அதை  படிக்கும்போது நான்கும்பகோணத்துல பணியிலஇருக்கேன். கோடியக் கரைக்கே போயிட்டேன். லட்சக்கணக்கான பறவைகளை அங்கே பார்த்தேன். பிறகு,  பறவை ஆராய்ச்சிக்காக மூணு முறை அங்க போயிருக் கேன். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பறவைகளைத் தேடி ராமேஸ்வரம் தீவுகள், பாம்பன்னு சுத்தியிருக்கேன். இப்ப, இலக்கியம் பற்றிய தேடல் இருக்கோ இல்லையோ, பறவைகள் பற்றிய தேடல் இளைஞர்களிடம் நிறைய வந்திருக்கு. சந்தோஷமாயிருக்கு" என்றார் உற்சாகத்துடன்.

அரிய புகைப்படம் கிடைத்தது எப்படி!

1955-ல் இவர் படித்த பச்சையப்பன் கல்லூரியின் மாணவர் பிரிவு உபச்சார விழாவில் எடுக்கப்பட்ட  ஒரு புகைப்படம் வீட்டில் மாட்டப்பட்டிருந்தது. அதில், பேராசிரியர்களாக  மு.வரதராசனார், க.அன்பழகன், ரா.பி.சேதுப்பிள்ளை, நடேச நாயக்கர் போன்றவர்களும் இடம்பெற்றிருந்தனர்.

"இந்தப் படத்துல இருக்க டி.சி.முருகேசன் என் வகுப்பு கிளாஸ்மேட். அவர் யாருன்னா,  பொன்மணி வைரமுத்துவின் அப்பா. அதாவது,  வைரமுத்துவின் மாமனார். டி.சி.முருகேசனின் மகன் இந்தப் புகைப்படத்தை எடுத்துக் கொண்டுவந்து, `அப்பாவின் முதலாமாண்டு நினைவஞ்சலிக்கு இந்தப் படத்தை புதுப்பிக்க வேண்டும். இதில் உள்ளவர்கள் பெயர்களை  எழுதிக் கொடுங்கள்' என்று கேட்டார். நானும் வரிசைப்படுத்தி எழுதித்தந்தேன். பின்னர், அந்த புகைப்படத்தின் ஒரு பிரதியை எனக்கும் தந்தார். அவர் மூலம் வைரமுத்து, அவரது மனைவி எல்லாம் பழக்கமானார்கள்" என்றார் ரத்னம் குழந்தையைப்போன்ற குதூகலத்துடன்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close