[X] Close

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் விடுவிக்கப்பட்ட கோவை ‘சின்னதம்பி' மீண்டும் ஊடுருவல்


top-slip

கோட்டூர் பேரூராட்சியில் உள்ள குமரன் கட்டம் பகுதியில் ஊருக்குள் நுழைந்த சின்னதம்பி.

  • kamadenu
  • Posted: 01 Feb, 2019 16:26 pm
  • அ+ அ-

கோவையில் பிடிக்கப்பட்டு, டாப்சிலிப்பில் விடுவிக்கப்பட்ட ‘சின்னதம்பி' என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்த காட்டு யானை நேற்று கோட்டூர் பகுதியில் ஊருக்குள் நுழைந்தது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர். வனத்துறை பணியாளர்கள் பட்டாசு வெடித்து யானையை வனத்துக்குள் விரட்டினர்.

கோவை சின்னத்தடாகம், சோமையனூர் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த சின்னதம்பி யானை, கடந்த 25-ம் தேதி கும்கி யானைகள் துணையுடன், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு, பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வனத்தில் விடுவிக்கப்பட்டது.

சின்னதம்பி கழுத்தில் மாட்டப் பட்டுள்ள ரேடியோ காலர் கருவி மூலம் அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். கடந்த 29-ம் தேதி வரை உலாந்தி வனச் சரகப்பகுதியில் சின்னதம்பியின் நடமாட்டம் காணப்பட்டது. 30 -ம் தேதி மானாம்பள்ளி வனச்சரகத்தின் கூமாட்டி, கருவறை பகுதியில் முகாமிட்டு இருந்தது. நேற்று அதிகாலை பொள்ளாச்சி வனச்சரகத்தின் மைத்ரி, பனப்பள்ளம், பந்தகால் அம்மன்பதி வனப்பகுதி வழியாக வெளியேறிய யானை, காலை 6 மணிக்கு பொங்காளியூர், மயிலாடுதுறை கிராமங்களில் உள்ள தென்னந் தோப்புக்குள் புகுந்தது. அங்கிருந்து கோட்டூர் பேரூராட்சியில் உள்ள குமரன் கட்டம் வழியாக காலை 7 மணிக்கு ஊருக்குள் நுழைந்தது.

கோட்டூர் பேரூராட்சி பகுதியில் நுழைந்த சின்னதம்பி அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றுக்கும், பொதுமக்களுக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல் விளைநிலங்களுக்குள் நுழைந்தது. தகவலறிந்து பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம், வனவர் பிரபாகரன், கார்டு சுரேஷ் ஆகியோர் தலைமையில் வேட்டை தடுப்புக் காவலர்கள் அடங்கிய 30 பேர் கொண்ட குழுவினர், சின்னதம்பியை வனத்துக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போக்கு காட்டிய யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்ட முயன்றனர். இதில் ஆவேசமான யானை, பிஏபி வாய்க்கால் பாலம் அருகே வனத்துறையினரை துரத்தத் தொடங்கியது. வனத்துறையினர் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்தும், சைரன்களை அலற விட்டும் யானையை விரட்டினர். 11 மணியளவில் கோபால்சாமி மலை அடிவாரத்தில் நுழைந்து வனத்துக்குள் சென்று மறைந்தது.

யானை மீண்டும் ஊருக்குள் நுழைந்து விடாமல் தடுக்க மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து தலைமையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாரிமுத்து கூறும்போது, யானையின் நடமாட்டத்தை ரேடியோ காலர் கருவி உதவியுடன் கண்காணித்து வருகிறோம். ஒரு வாரம் அதன் நடமாட்டம் கண்காணிக்கப் படும். அச்சுறுத்தல் தொடர்ந்தால் கும்கி யானைகள் துணையுடன் வனப்பகுதிக்குள் விரட்டப்படும். சின்னதம்பியை மீண்டும் இடமாற்றம் செய்வது அல்லது பிடித்து கரோலில் அடைப்பது குறித்து உயர் அதிகாரிகளின் அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close