வாழ்வாதாரத்தை பாதிக்கும் வெள்ளை ஈ: நலிவடையும் தென்னந்தடுக்கு தொழில்!

எஸ்.கோபு
தென்னை மரத்தின் கீற்றுகளைத் தாக்கும் வெள்ளை ஈ தாக்குதலால், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னந்தடுக்கு பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ள கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் முடங்கும்நிலை ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, திருப்பூர் மாவட்டம் உடுமலை, ஜல்லிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 3 லட்சம் ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி நடைபெறுகிறது.
இளநீரைத் தவிர, மரத்திலிருந்து கிடைக்கும் தென்னங்கீற்று, மட்டை, தேங்காய் ஆகியவற்றை மூலப்பொருட்களாக கொண்டு, தென்னந்தடுக்கு, சீமார், தென்னைநார், தென்னைநார் கட்டி, கொப்பரை உற்பத்தி என பல உப தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இதில், 2,000-க்கும் அதிகமான தென்னங் கீற்றுப்பட்டறைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தென்னங்கீற்றுகளைப் பயன்படுத்தி `தடுக்கு` தயாரிக்கும் தொழிலில் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை, பொன்னாலம்மன்துறை, மயிலாடுதுறை, பொங்காளியூர், கோழிப்பண்ணை, தேவிப்பட்டணம், சண்முகபுரம், நெகமம் பகுதிகளில் 200-க்கும் அதிகமான தென்னங்கீற்றுப் பட்டறைகள் உள்ளன. இங்குள்ள தென்னந் தோப்புகளில் கொள்முதல் செய்யப்படும் தென்னை ஓலைகள் தடுக்குகளாக தயாரிக்கப்பட்டு, திருப்பூர், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, பெரம்பலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.
தென்னை மரத்தில் இருந்து ஆண்டுக்கு 12 தென்னை மட்டைகள் விழுகின்றன. இவற்றில் உள்ள தென்னங்கீற்றுகளை மட்டும் வெட்டியெடுத்து, ஒருநாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்கின்றனர். பின்னர் தண்ணீரை வடிய வைத்து, ஈரப்பதமுள்ள கீற்றுக்களை ஒன்றோடுஒன்று பின்னி தடுக்குகளாக தயாரிக்கின்றனர். இதற்கு தண்ணீர் முக்கியம் என்பதால், ஆற்றோரத்திலும், தென்னந்தோப்புகளில் கிணறுகளுக்கு அருகிலும் பட்டறைகள் அமைத்து 5-க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டாக தடுக்கு பின்னும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆண்டு முழுவதும் தோப்புகளில் இருந்து தென்னங்கீற்றுகள் தட்டுப்பாடின்றி கிடைத்து வந்ததால் தடுக்கு பின்னும் தொழில் குடிசைத் தொழிலாக பரவி 5,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்கி வந்தது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தென்னை மரங்களில் `வெள்ளை ஈ` தாக்குதலால் தென்னங்கீற்றுகள் பாதிக்கப்பட்டு, கருப்பு நிறமாக மாறின. மேலும், அவற்றைப் பயன்படுத்த முடியாத சூழலும் உருவானது. இதனால், தென்னை ஓலைகளைக் கொண்டு தடுக்கு பின்னும் தொழில் முடங்கி, ஏராளமான பெண்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தடுக்குப் பட்டறை நடத்திவரும் நடராஜ் கூறும்போது, "பொள்ளாச்சி பகுதியில் பின்னப்படும் தென்னந் தடுக்குகள் நெருக்கமாகவும், நேர்த்தியாகவும் இருப்பதால், கும்பகோணம், சீர்காழி, சிதம்பரம், பெரம்பலூர் பகுதிகளில் பொள்ளாச்சி தென்னந் தடுக்குகளுக்கு வரவேற்பு அதிகம். இந்த தடுக்குகளைப் பயன்படுத்தி பந்தல், குடிசைகள், வெற்றிலைக் கொடிக்கால்களுக்கு மறைப்புகள் கட்டப்படுகின்றன. பொதுவாக, கார்த்திகை முதல் தை மாதம் வரை தென்னை ஓலைகள் வரத்து குறைவாக இருக்கும்.
ஆண்டுக்கு ஒரு மரத்தில் இருந்து 12 தென்னை ஓலைகள் கிடைக்கும். தற்போது 7 ஓலைகள்தான் கிடைக்கின்றன. கடந்த சில மாதங்களாக தென்னை மரத்தில் வெள்ளை ஈ பாதிப்பு உள்ளதால், தடுக்குகள் கருப்பு நிறத்துக்கு மாறியுள்ளன. மாசி மாதத்தில்தான் மரத்தில் ஓலைகள் எண்ணிக்கை அதிகரிக்கும். தற்போது 4 லட்சம் தென்னை மரங்கள் கஜா புயலில் சிக்கி விழுந்ததால், அவற்றிலிருந்து கிடைத்த தென்னங்கீற்றுகளைக் கொண்டு நாகை மாவட்டத்தில் தடுக்கு பின்னும் தொழில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவை பேராவூரணி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்படுவதால், பொள்ளாச்சி தடுக்குகளின் விற்பனையும் சரிந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், கிராமப்
புற பெண்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நாகரிக மாற்றத்தால் தற்போது மேற்கூரைகளுக்கு கலர் கூலிங் ஷீட்டுகள், தகர ஷீட்டுகள், பிளாஸ்டிக் ஷீட்டுகளைப் பயன்படுத்த தொடங்கியதால், தென்னை ஓலைகளின் பயன்பாடும் குறைந்து, தென்னந் தடுக்கு தயாரிக்கும் தொழில் நலிவடைந்து வருகிறது" என்றார்.