[X] Close

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவுக்கு புலி வருது... புலி வருது...


tiger-in-zoo

  • kamadenu
  • Posted: 31 Jan, 2019 10:17 am
  • அ+ அ-

பாய்ந்தோடும் புள்ளி மான்கள், பிளிறும் யானை, அசையாது கிடக்கும் முதலைகள், சீறும் பாம்புகள்... வனத்தில் மட்டுமே காணப்படும் இவற்றை நகருக்கு அருகில் பார்க்க முடியுமா? ஏன் முடியாது? சேலம் நகருக்கு அருகில், சேர்வராயன் கிழக்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காதான் மக்களுக்கு இந்த வாய்ப்பைக் கொடுக்கிறது.

சேலம் நகரிலிருந்து பத்தே கிலோமீட்டர் தொலைவில், மரங்கள் அடர்ந்து, இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது இந்தப் பூங்கா. ஏறத்தாழ  71.37 ஹெக்டேர் பரப்பிலான இந்தப் பூங்கா, சேலம் மக்கள் குறைந்த செலவில் சென்றுவருவதற்கு ஏற்றது. பிரம்மாண்ட டைனோசர், யானை சிலைகளுடன் வரவேற்கும் இப்பூங்காவில், கூண்டுக்குள் உலவுகின்றன விலங்குகள்.

மதுரை கோயில் ஆண்டாள் யானை, வாயைப்பிளந்து கிடக்கும் முதலைகள் கூட்டம், மெல்ல நடை போடும் வாத்துகளும், இன்னிசை எழுப்பும் லவ்பேர்ட்ஸ், குருவிகள், கிளி உள்ளிட்ட பறவைகள் பார்வையாளர்களைக் கவர்கிறது. இதுமட்டுமா? புள்ளிமான், கடமான், ஆமை, குள்ள நரி, வங்கா நரி, நீர்ப் பறவைகள், வெள்ளை மயில் ஆகியவையும்  பூங்காவை வலம் வருவோரைக் கவர்கின்றன.

“இங்கு குழந்தைகளுக்கு ரூ.5, பெரியவர்களுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை வார விடுமுறை தவிர,  வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பூங்கா செயல்படுகிறது.  டிக்கெட் வாங்கும் இடத்தில் ரூ.6 லட்சத்தில் டிக்கெட் கவுன்டர், கான்கிரீட் தளத்துடன் வண்ண அட்டை மேற்கூரை  அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்குள் மேடும், பள்ளமுமாக இருந்த பகுதிகளில் ரூ.10 லட்சத்தில் கான்கிரீட் சாலை,  ரூ.2.5 லட்சத்தில் பொதுமக்கள் அமர பனையோலைக் குடில்கள் என மொத்தம் ரூ.18.5 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

முதியோர்  பூங்காவை சுற்றி வர  பேட்டரி கார் வசதி  உள்ளது. மேலும், 6 பேர் அமரும் வகையில் இரண்டு பேட்டரி கார்களுக்கான திட்ட அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை வண்டலூர் வன உயிரியல் பூங்காவிலிருந்து இரண்டு புலிகள், சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவுக்கு வழங்கக் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் சேலம் மக்களை மகிழ்விக்க புலி வருகை தரவுள்ளது. வெளிமான் உள்ளிட்ட சில விலங்குகளையும் தருவிக்க வனத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார் வனச் சரகர் எம்.முரளிதரன்.

போக்குவரத்து வசதி மேம்படுத்தப்படுமா?

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவுக்கு வந்து,  செல்ல காலை, மாலையில் பேருந்து வசதி உள்ளது. வாடகைக் கார், ஆட்டோக்களிலும் தினமும் நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர். ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து இயக்கினால், இன்னும் அதிகமானோர் வர முடியும். மேலும், பூங்காவுக்குச் செல்லும் சாலைகளைச் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர் சேலம் மக்கள்.

அதேபோல, பூங்காவுக்குள் ஆங்காங்கே காதலர்கள் அமர்ந்து, பொதுமக்களை  முகம்சுழிக்கச் செய்கின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஜோடியாக சுற்றித் திரிகின்றனர். இவற்றையெல்லாம் தடுக்கும் வகையில் பூங்காவில்  சிசிடிவி  கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி, வனத் துறை அதிகாரிகள் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close