[X] Close

நல்முத்துகளை உருவாக்கும் நல்லமுத்து


nallamuthu

  • kamadenu
  • Posted: 31 Jan, 2019 10:11 am
  • அ+ அ-

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது` என்பதால், ஆரம்பப் பள்ளிக் காலத்திலேயே ‘மாணவனுக்குள் கலைஞனை‘ விதைத்து வருகிறது அவ்வூர் பள்ளி. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவ்வூர் மலைக் கிராமத்தில் இருக்கும் முன்மாதிரிப் பள்ளி அவ்வூர் அரசு ஆரம்பப்பள்ளி. 4-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் தற்போது 64 மாணவர்கள் பயில்கின்றனர்.

தலைமை ஆசிரியருடன் சேர்த்து மூன்று ஆசிரியர்கள் மற்றும்  பெற்றோர்-ஆசிரியர் கழகம் நியமித்த 2 ஆசிரியர்கள் மாணவர்களை பயிற்றுவிக்கின்றனர். கேரம் விளையாட்டில் மாவட்ட அளவில் இப்பள்ளி முதலிடம். தொலைக்காட்சி பேச்சரங்குகளில் இப்பள்ளி மாணவர்கள் பலமுறை பங்கேற்றுள்ளனர்.

அரசுப் பள்ளியின் முக்கியத்துவம், மதுவிலக்கின் அவசியம் குறித்து மாணவர்கள் பேசும் வீடியோக்கள் `வாட்ஸ்அப்`பில் வைரலாக வலம் வருகின்றன.  குடியரசு தின விழாவில் இவர்களது  கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.  ஜமாப் இசைக்கு, பால்வாடி மாணவர்கள் உள்ளிட்ட  மாணவ, மாணவிகள் ஒயிலாட்டம், பறையாட்டம் ஆடி அசத்தினர்.

சிறப்பம்சமாக, `ஹூலா ஹூப்` என்ற வளையத்தை  உடலில் சுழற்றிக்கொண்டு,  ஒயிலாட்டம், பறையாட்டம் ஆடினர். இதற்கான இசையையும் மாணவர்களே இசைத்தனர். பார்வையாளர்களே எழுந்து ஆடியதுதான் இதன் `ஹைலைட்`.

தனியார் பள்ளி மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் இந்த கலை நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டனர். பல்வேறு பள்ளிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளில், அவ்வூர் பள்ளி முதலிடம் வென்று சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது. இவை அனைத்துக்கும் காரணம், ஆசிரியர் நல்லமுத்து.  அவரை சந்தித்தோம்.

“1984-ல மேல்குந்தா மலைக் கிராமத்துக்கு வந்தேன். அங்க இருந்த அரசுப் பள்ளியில்தான் படித்தேன். ஆசிரியர் பயிற்சி முடித்து, 21 வயசுல வேலையில் சேர்ந்தேன்.

புதுக்கோட்டை மாவட்டம் முத்தானப்பட்டி தொடக்கப் பள்ளியில் முதல் பணி. அப்புறம்,  வான்டான் விடுதி தொடக்கப் பள்ளியில். அந்தப் பள்ளிதான் ‘மாணவர்கள் உயராமல் ஆசிரியர்கள் உயர முடியாது’ என்ற உண்மைய  எனக்கு கத்துக்கொடுத்தது. 2005-ல அவ்வூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு மாற்றலானேன். அப்ப,  இங்கே மாணவர் எண்ணிக்கை ரொம்ப குறைவு. பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கச் சொல்லி பிரச்சாரம் செய்யப் போனால், `தனியார் பள்ளி மாணவர்கள் சீருடை, ஐ.டி. கார்டு, டை எல்லாம் போட்டுக்கிட்டுச் சுத்தமா போறாங்க`னு பல பெற்றோர்கள் சொன்னாங்க. எங்கப் பள்ளியிலயும் இதை அமல்படுத்தினோம். ஆசிரியர்கள் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு, ஐ.டி. கார்டு, டை, ஷூ எல்லாம் வாங்கிக் கொடுத்தோம். பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிச்சதும், படிப்பு மட்டுமில்லாம, கலைகளையும் கற்றுக்கொடுத்தோம். எங்க ஸ்கூல்ல 2, 3-வது படிக்கிற பசங்ககூட கேரம் போட்டிகளில் மாநில அளவில் இடம் பிடிக்கிறாங்க. நீலகிரி மாவட்டத்துல பல பிரபல தனியார் பள்ளி மாணவர்களை, எங்க பசங்க ஜெயிச்சிருக்காங்க. பேச்சுப் போட்டிகளில் சுமார் 300 விருதுகளாவது வாங்கியிருப்போம்” என்றார் நல்லமுத்து பெருமிதத்துடன்.

தொடர்ந்தவர், “தினமும் நாம பள்ளிக்கு வர்றோம்; பாடம் நடத்துறோம். ஆனால், மாணவர்கள் முகத்துல் சிரிப்பே இல்லையேனு உறுத்தலா இருந்துச்சு. அதனால, அப்பப்போ முகத்துல வண்ணத்தைப் பூசி, விக் வெச்சுக்கிட்டு நடிச்சுக்கிட்டே பாடம் நடத்துவேன். மாணவர்கள் மனசு விட்டு சிரிப்பாங்க. சில வருஷங்களுக்கு முன்னாடி இங்கே 30 மாணவர்கள் படிச்சாங்க. இப்போ 70 பேர் படிக்கிறாங்க. அடுத்த வருஷம் எப்படியும் 100 பேரைச் சேர்த்துடுவோம்” என்றார் நம்பிக்கையுடன்.

ஜமாப் இசைக் கருவி

அவ்வூர் பள்ளியில் ஜமாப் இசைக் கருவிகளை சொந்தமாகவே வைத்திருக்கின்றனர். மாணவர்களே அவற்றை இசைக்கின்றனர். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

“எங்கள் பள்ளி மாணவர்கள் ஒயிலாட்டம் சிறப்பாக ஆடுவதற்கு உதவி புரிந்தவர் ‘விழா‘ திரைப்பட இயக்குநர் பாரதி பாலா. பெற்றோர்-ஆசிரியர் சங்கம் நியமித்த ஆசிரியர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக ஊதியம் வழங்குகிறார் மேட்டுப்பாளையம் டாக்டர் மகேஸ்வரன். அதுமட்டுமல்ல, மாணவர்கள் 40 பேருக்கு   வளையங்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார். பள்ளி வளர்ச்சிக்கு எல்லா ஆசிரியர்களின் கூட்டு உழைப்புதான் காரணம்’ என்றார்.

நல்முத்துகளை உருவாக்கும் நல்லமுத்து போன்றவர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பு, அரசுப் பள்ளிகள் மீது மக்களுக்கு உள்ள அவநம்பிக்கையை மாற்றும்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close