[X] Close

ஒரு பொண்ணுலே... ரோஸ்லே... புடவைலே; ‘நீயே நடிச்சிரு’ன்னார் பாக்யராஜ் சார்!


pandiarajan-bhagyaraj

ஆர்.பாண்டியராஜன்

  • வி.ராம்ஜி
  • Posted: 30 Jan, 2019 12:55 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

‘ஒரு பொண்ணுலே... ரோஸ்லே... புடவைலே...’ன்னு எல்லாத்துக்கும் லே லே போட்டு சொல்லி டயலாக் சொதப்பிக்கிட்டே இருந்தாரு ஒருத்தர்.’பாண்டி நீயே நடிச்சிரு’ன்னு சொன்னார் பாக்யராஜ் சார். அதுதான் சினிமால நான் நடிச்ச முதல் சீன் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் இயக்குநர் ஆர்.பாண்டியராஜன்.

நடிகரும் இயக்குநருமான ஆர்.பாண்டியராஜன், தனியார் சேனலில் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

மெளனகீதங்கள் படத்துலதான் பாக்யராஜ் சார்கிட்ட அஸிஸ்டெண்டா சேர்ந்து ஒர்க் பண்ண ஆரம்பிச்சேன். கிளாப் போர்டு அடிக்கறது மாதிரி சின்னச் சின்ன வேலையெல்லாம் செஞ்சிட்டிருந்தேன்.

அடுத்தாப்ல, இன்று போய் நாளை வா படம் வேலை ஆரம்பிச்சாச்சு. அந்தப் படத்துல பஸ் ஸ்டாப்புல ஒருத்தர்கிட்ட போய், ‘அந்த ரோஸ்கலர் புடவை கட்டிருக்கிற பொண்ணை உங்களுக்குத் தெரியுமா?’ன்னு கேக்கணும். இல்லன்னு பதில் வரும். ‘அந்தப் பொண்ணு சம்பளக் கவரைத் தொலைச்சிட்டேன்னு சொல்லுச்சா?’ன்னு அடுத்த வசனம். ‘ஆமாம்’னு எதிர்தரப்பு பதில் சொல்லும்.

‘நீங்க பணம் ஏதாவது கொடுத்தீங்களா?’னு இன்னொரு டயலாக். இப்பவும் எதிர்பார்ட்டி ஆமாம்னு பதில் சொல்லும். உடனே ‘கோவிந்தா கோவிந்தா’ன்னு சொல்லிட்டுப் போகணும்.

இந்த வசனங்களைப் பேசி நடிக்க ஒருத்தரை செலக்ட் பண்ணியிருந்தோம். அவர், தெலுங்குக்காரர். குருநாதர்கிட்ட (கே.பாக்யராஜ்) ரொம்பநாளா சான்ஸ் கேட்டு அலைஞ்சிக்கிட்டே இருந்தாரு. அதனால என்னைக் கூப்பிட்டு, இந்த சீன், டயலாக்கையெல்லாம் அவருக்கு சொல்லிக் காமின்னு சொன்னார்.

ஜி.என்.செட்டி ரோட்டுல ஒரு பஸ் ஸ்டாப்ல ஷூட்டிங். அவருக்கு டயலாக்கெல்லாம் சொல்லிக் கொடுத்துட்டு, நீங்க சொல்லுங்கன்னு சொன்னேன். உடனே அவரு...’ஒரு பொண்ணுலே... ரோஸ்லே... புடவைலே...’ன்னு எல்லாத்துக்கும் ஒரு லே வை சேத்துச் சேத்து சொன்னாரு.

இப்படி சொல்லக்கூடாதுன்னு திரும்பத் திரும்ப வசனம் சொல்லிக்கொடுத்துக்கிட்டே இருந்தேன். டைரக்டர் சார் வந்துட்டாரு. என்னய்யா ரெடியா? லைட்டிங் (சூரிய வெளிச்சம்) போயிக்கிட்டிருக்கு பாரு. சட்டுபுட்டுனு எடுக்கவேணாமா?ன்னு சொல்லிக்கிட்டே, ரெடிதானே அவரு?’ன்னு கேட்டார்.

ஒரு அஞ்சுநிமிஷம் சார்னு சொன்னேன். ‘சரி, மானிட்டர் பாக்கலாம்’னு டைரக்டர் சொல்லிட்டாரு. அந்த தெலுங்குக்காரரு, திரும்பவும், ‘ஒரு பொண்ணுலே... ரோஸ்லே... புடவைலே...’னு சொன்னார். டென்ஷனாயிட்டார் சார்.

‘யோவ் என்னய்யா இது. உனக்கு யாருய்யா சொல்லிக்கொடுத்தது?’ன்னு கேட்டார். அந்த தெலுங்குக்காரர், என்னைக் கைகாட்டிவிட்டுட்டார். ‘என்ன பாண்டி இது. எங்கே அந்த டயலாக்கை அவருக்கு எப்படிச் சொல்லிக்கொடுத்தே? சொல்லுன்னாரு.

நான் சொன்னேன். உடனே பாக்யராஜ் சார், ‘அந்த கிளாப் போர்டை அவன்கிட்டக் கொடு’ன்னாரு. கொடுத்தேன். ‘நீயே இந்த சீன்ல நடிச்சிரு’ன்னு சொல்லிட்டாரு. நடிச்சேன். அதுதான் சினிமால நான் நடிச்ச முதல் சீன்.

நான் நடிக்கறதை கூர்ந்து கவனிச்சிக்கிட்டே இருந்த பாக்யராஜ் சார், ‘உனக்கு நடிக்க விருப்பமாய்யா?’ன்னு கேட்டார். ஆமாம்னு சொன்னேன். ‘இதைச் சொல்லவேண்டியதுதானே’னு கேட்டார். ‘சொன்னா, அஸிஸ்டெண்ட் வேலை போயிருமோனு ஒரு பயம் சார்’னு சொன்னேன்.

உடனே 11 ரூபாயை எடுத்து என் கையில திணிச்சார் பாக்யராஜ் சார். ‘நீ நடிகனா ஒரு ரவுண்டு வருவே. நிச்சயம் இது நடக்கப்போவுது. இந்தா அட்வான்ஸ்’னு கொடுத்து ஆசீர்வாதம் பண்ணினார் பாக்யராஜ் சார். என் குருவின் ஆத்மார்த்தமான ஆசீர்வாதமும் முதன்முதல்ல கிடைச்சதை என் வாழ்நாள்லயே மறக்கமுடியாது என்று நெகிழ்கிறார் பாண்டியராஜன்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close