[X] Close

இளையராஜாவின் திடீர் ஐடியா; ’பூங்கதவே’ பாட்டு ஹம்மிங் செம கிக்!


poongadhve-nizhalgal-song-ilayaraaja

இளையராஜா

  • வி.ராம்ஜி
  • Posted: 30 Jan, 2019 10:34 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

நிழல்கள் படத்தின் பூங்கதவே தாழ் திறவாய் பாட்டின் ஒவ்வொரு வரிக்கும் இடையே வரும் ஹம்மிங் ஞாபகமிருக்கிறதுதானே. அந்தப் பாடலுக்கு மிகப்பெரிய சுவையூட்டிய ஹம்மிங், ராஜா சாரின் திடீர் ஐடியா என்று பாடகர் தீபன் சக்கரவர்த்தி  வியந்து தெரிவித்தார்.

பழம்பெரும் பாடகர் திருச்சி லோகநாதனின் மகன்களில் ஒருவர் தீபன் சக்கரவர்த்தி. இவருக்கு திரையுலகில் பாட வாய்ப்பு அளித்தவர் இளையராஜா.

இளையராஜா சிலகாலம் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றிவந்தார். எனவே ஜி.கே.வெங்கடேஷ் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார் இளையராஜா. அவர்தான் தீபன் சக்கரவர்த்தியை அழைத்துக்கொண்டு, இளையராஜாவிடம் வாய்ப்பு வழங்கும்படி சிபாரிசு செய்தார். அப்போது தீபன் சக்கரவர்த்தியின் பெயர் ராஜரத்தினம் சக்கரவர்த்தி.

ஒளிப்பதிவாளர் நிவாஸ், தயாரித்து இயக்கிய ‘எனக்காக காத்திரு’ படத்தின் மூலமாக பாடகராக அறிமுகப்படுத்தினார் இளையராஜா. மேலும் அவரின் பெயரை தீபன் சக்கரவர்த்தி என மாற்றினார்.

‘ஓ நெஞ்சமே.. இது உன் ராகமே...’ எனும் முதல் பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதையடுத்து தொடர்ந்து பாடல்களை வழங்கினார் இளையராஜா.

இதுகுறித்து தீபன் சக்கரவர்த்தி, ‘நிழல்கள் படத்தில் பாடும் வாய்ப்பை வழங்கினார் ராஜா அண்ணன். இந்தப் பாடல் இன்றளவும் எனக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு ராஜா அண்ணனுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்.

இயக்குநர் பாரதிராஜாவின் படம் நிழல்கள். கங்கை அமரன் எழுதிய பாடல் அது. என்னுடைய பல பாடல்களை கங்கை அமரன்தான் எழுதியிருக்கிறார். ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாடலும் கங்கை அமரன் எழுதியதுதான்.

எல்லாம் தயாராகிவிட்டது. ரிக்கார்டிங் தியேட்டரில் எல்லோரும் இருக்கிறோம். எங்களுக்கு முன்பாகவே, காலை 6.30 மணிக்கெல்லாம் இளையராஜா அண்ணன் வந்துவிட்டார். வாத்தியக்காரர்களும் தயாராகிவிட்டார்கள். இந்த முறை உமா ரமணனுடன் பாடுகிறேன். நானும் ரெடி.

ரிக்கார்டிங் ரூமில், பாடகர்களுக்கான கண்ணாடி அறையில் நாங்கள் ரெடியாக இருக்கிறோம். ராஜா அண்ணன் கையசைவுக்காக எல்லோருமே காத்திருக்கிறோம். அப்போது திடீரென ராஜா அண்ணன், கண்ணாடி அறைக்குள் வந்தார். என்னிடமும் உமா ரமணனிடமும் பாடலைப் பாடச் சொன்னார். உமா ரமணன் பாடும் போது, ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் என்னை இப்படி ஹம் பண்ணு என்று சொன்னார்.

அதேபோல் நான் பாடும் ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் உமா ரமணனை ஹம் பண்ணச் சொன்னார். ‘ரிகர்சல்ல பாத்த மாதிரி இல்லாம, இப்போ இந்த ஹம்மிங்கோட இந்தப் பாட்டைப் பாடுங்க’ன்னு சொல்லிட்டுப் போனார்.

கையசைத்தார். வாத்தியக்காரர்கள் இசைக்கத் தொடங்கினார்கள். நாங்களும் பாடத்தொடங்கினோம்.

அந்தப் பாடலில்,

 

நீரோட்டம் ம்ம்ம்ம்ம்

போலோடும் ம்ம்ம்ம்ம்ம்

ஆசைக்கனவுகள் ஊர்கோலம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்

ஆஹாஹா ஆனந்தம்

ஆடும் நினைவுகள் பூவாகும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

காதல் தெய்வம் தான் வாழ்த்தும்

காதலில் ஊறிய தாகம்ம்ம்ம்

 

திருத்தேகம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

எனக்காகும்  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

தேனில் நனைந்தது என் உள்ளம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

- இப்படியாக ஹம்மிங்கை திடீரென்று ராஜா அண்ணன் பாடலுக்குள் செருகி, ஒரு இசை வித்தையைக் காட்டினார். அதுதான் அந்தப் பாட்டுக்கு மிகப்பெரிய சுவையைக் கூட்டியது. சொல்லப்போனால், அந்தப் பாடலின் பிரமாண்ட ஹிட்டுக்கு, அந்த ஹம்மிங் மிக முக்கியக்காரணம். அதனால்தான் ராஜா அண்ணன், ஓர் இசைமேதை எனக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்’ என்று வியந்து சொல்கிறார் தீபன் சக்கரவர்த்தி.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close