காந்தி மியூசியம் நிர்வாகத்துக்கும் - தமிழக அரசுக்கும் பனிப்போர்: ஊதிய உயர்வின்றி வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஊழியர்கள்

மதுரை காந்திமியூசியம் நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் நீடிக்கும் பனிப் போரால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள், ஊதிய உயர்வு இன்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
காந்தியடிகள் இறந்த பிறகு, அவர் விட்டுச் சென்ற பணிகளையும், கொள்கைகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல மதுரை காந்தி மியூசியம் 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் நேருவால் தொடங்கி வைக்கப்பட்டது என்ற பெருமையை கொண்டது. அதன் பிறகு இவை டெல்லி, பாட்னா, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத் மற்றும் வார்தா உள்ளிட்ட இடங்களிலும் தொடங்கப்பட்டன. டெல்லி ‘மகாத்மா காந்தி நினைவு நிதி’ என்ற அமைப்பின் கீழ், இந்த மியூசியங்கள் செயல்படுகின்றன.
மதுரையில் காந்தி மியூசியம் செயல்படும் கட்டிடம், ராணி மங்கம்மாளின் கோடைகால அரண்மனையாக இருந்தது. தமிழக அரசு இந்த கட்டிடத்தையும், அதன் பதிமூன்றரை ஏக்கர் நிலத்தையும் நன்கொடையாக வழங்கியது.
காந்தியடிகள் கடைசி காலத்தில் பயன்படுத்திய 14 பொருட்கள், சுடப்பட்டபோது, இறுதிநாளில் அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த காந்தியடிகளின் வேஷ்டி, அவரது வரலாற்றைப் பார்வையிடலாம் என்பதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு இங்கு வருகின்றனர்.
1971-ம் ஆண்டு இந்த மியூசியத்தை நிர்வகிக்க ஒரு கமிட்டி ஏற்படுத்தப்பட்டு அதன் தலைவர், செயலாளர், பொருளாளர் நியமிக்கப்பட்டனர். இவர்களுடன் இணைந்து செயல்பட மாவட்ட ஆட்சியர், சுற்றுலாத்துறை செயலர், தொல்லியல் துறை மற்றும் தமிழர் வளர்ச்சித்துறை அமைச்சர் உள்பட 30 பேர் உறுப்பினர்கள் உள்ளனர்.
மத்திய அரசு காந்திமியூசியத்துக்கு வழங்கிய ரூ.5 கோடி நிதி (Corpus Fund) வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்து, அதில் கிடைக்கும் வட்டி, தமிழக அரசு வழங்கும் ரூ.3 லட்சம் மானியம் மற்றும் அன்றாட வருவாயிலிருந்தும் காந்தி மியூசியம் பராமரிக்கப்படுகிறது.
இங்கு, காப்பாட்சியர் தலைமையில் கல்வி அலுவலர், நூலகர், ஆராய்ச்சி அலுவலர், காட்சிக்கூட வழிகாட்டி, கணக்கர், கணினிப் பணியாளர், எலெக்ட்ரிசியன், தோட்ட வேலை மற்றும் துப்புரவு பணியாளர் உள்பட 20 பேர், 20 ஆண்டுகளாகப் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு காந்தி மியூசியம் கமிட்டியே ஊதியம் வழங்குகிறது. ஆனால், குறைந்தபட்சம் 9,500 ரூபாய் முதல் 22,000 ரூபாய் வரையே ஊதியம் பெறுகின்றனர். 2013-ம் ஆண்டுக்கு பிறகு இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.
அதனால், ஊழியர்கள் நலனுக்காக மாநில அரசு மானிய நிதியை ரூ.7 லட்சமாக உயர்த்தி நிலுவையில் இருந்த ரூ.32 லட்சத்தையும் கடந்த 2 மாதத்திற்கு முன் வழங்கியது. ஆனால், காந்திமியூசியம் கமிட்டி நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையே பனிப் போரால் ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இந்த நிதி மாநில அரசுக்கு திரும்பி செல்லும்நிலை ஏற்பட்டுள்ளதால் ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: எங்களுக்கு எந்தச் சலுகையும் கிடையாது. சொற்ப ஊதியத்தை வைத்துக் கொண்டு கல்வி, மருத்துவம் மற்றும் அன்றாடச் செலவுகளைக் கூட ஈடுகட்ட முடியவில்லை. மாநில அரசு வழங்கிய ரூ.32 லட்சத்தை பயன்படுத்த சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகள் கமிட்டிக்கு சாதகமாக இல்லை என்பதால், அவர்கள் ஏற்க மறுப்பதால், அந்த நிதியும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.கட்டுப்படுத்த நினைக்கும் அரசு
காந்தி மியூசியம் கமிட்டி செயலாளர் குருசாமியிடம் கேட்டபோது, ‘‘டெபாசிட் தொகை ரூ.5 கோடிக்கான வங்கி வட்டி முன்பு 9 ½ சதவீதம் கிடைத்தது. தற்போது அது 6 ½ சதவீதமாக குறைந்துள்ளது. மாநில அரசு ரூ.32 லட்சம் வழங்கியது உண்மை. நாங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்துடன், அவர்களுக்கான அகவிலைப்படியையும் உயர்த்திக் கொடுக்கிறோம்.
ரூ.32 லட்சத்தை பயன்படுத்தாமல் வைத்துள்ளதற்கு மாநில அரசு குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள்தான் காரணம். மாநில அரசு நேரடியாகவே காந்தி மியூசியத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறது. அதில் எங்களுக்கு உடன்பாடில்லை, ’’ என்றார்.