[X] Close

பரமத்திவேலூரில் அமையுமா வெற்றிலை ஆராய்ச்சி மையம்?


vetrilai-lab

  • kamadenu
  • Posted: 22 Jan, 2019 10:59 am
  • அ+ அ-

கி.பார்த்திபன்

“வெத்தலை, வெத்தலை, வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ... கும்பகோணம் கொழுந்து வெத்தலையோ!” என்ற பாடலைக் கேட்கும்போதே, நாக்கு நமநமக்கும். வெற்றிலை போடாதவர்கள்கூட, `அதை சுவைத்துப் பார்த்தால்தான் என்ன?’ என்று நினைப்பார்கள். மத்தியான விருந்துக்குப் பிறகும், ராத்திரி சாப்பாட்டுக்குப் பிறகும் மக்கள் கைகளில் தவறாமல் புழங்கியது வெற்றிலையும், சுண்ணாம்பும்தான்.

கல்யாணம், காது குத்து, கோயில் திருவிழா என  சுப காரியங்களில் மட்டுமல்ல, துக்க நிகழ்வுகளின்போதும் தவறாது இடம்பெறும் வெற்றிலை. அதுமட்டுமா?  விஷேசத்துக்கு அழைக்கும்போது, வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கும் வழக்கத்தையும் தமிழர்கள் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வருகின்றனர்.  இந்த வகையில் தமிழர்களின் வாழ்வில் வெற்றிலை நீக்கமற நிறைந்துள்ளது என்றால் அது மிகையில்லை!

அதேசமயம், ஜீரண சக்தி அதிகரிப்பு, சளியைக்  கரைத்தல் போன்ற மருத்துவக் குணங்களும் வெற்றிலைக்கு உள்ளது என்கின்றனர் சித்த மருத்துவர்கள். வாசனைத் திரவியங்கள் தயாரிப்பிலும் வெற்றிலைக்கு கொஞ்சம் பங்கு உண்டு. இத்தகு மகத்துவம் வாய்ந்த வெற்றிலை, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பலநுாறு ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது.

கும்பகோணம் வெற்றிலைக்கு நிகரான புகழ் வாய்ந்தது பரமத்திவேலூர் வெற்றிலை  என்பதால், இங்கு உற்பத்தி செய்யப்படும் வெற்றிலை நாள்தோறும் வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இதனால், வெற்றிலை சாகுபடியை மையப்படுத்தி பரமத்திவேலூரில் ‘வெற்றிலை ஆராய்ச்சி மையம்’ தொடங்க வேண்டுமென பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும்,  வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைந்தபாடில்லை.

“இந்த ஆராய்ச்சி நிலையத்தால் என்ன பயன்? ஆராய்ச்சி மையம் அமைத்தால் வெற்றிலை சாகுபடி பரப்பளவு அதிகரிக்குமா?” என்ற கேள்விகளுடன், நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த விவசாயியும், அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு செயலருமான ஜி.அஜித்தனை அணுகினோம்.

“காவிரி பாயும் பகுதிகளான ஜேடர்பாளையம், பொத்தனூர், பரமத்திவேலூர், மோகனூரில்  ஏறத்தாழ 300 ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. வெள்ளக்கொடி, கற்பூரம், பான் வெற்றிலை போன்ற ரகங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன.

ஒரு ஏக்கர் வெற்றிலையை சாகுபடி செய்ய குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் செலவாகும். 20 பேர் வரை கூட்டாக முதலீடு செய்வர். வெற்றிலை அறுத்தல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகளில் 100 பேர் வரை ஈடுபடுவர். அகத்திக்கீரை மரம் முதலில் வளர்க்கப்பட்டு, பின் அதில் வெற்றிலைக் கொடி சுற்றப்படும். 

சுமார் 2 ஆண்டுகள் வரை வெற்றிலை அறுவடை செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெற்றிலை வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. குறிப்பாக, மகாராஷ்டிர மாநிலத்துக்கு அதிக அளவில் அனுப்பிவைக்கப்படுகிறது.

கணிசமான பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுவதால், இப்பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என  விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

பரமத்திவேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி அமைக்கப்படும் என கடந்த திமுக ஆட்சியின்போது சட்டப்பேரவையில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நிலவுவதாகக் கூறி,  வெற்றிலை ஆராய்ச்சி அமைக்க காலதாமதம் செய்யப்படுகிறது.

இங்கு ஆராய்ச்சி மையம் அமைந்தால்,  வெற்றிலை விவசாயிகள் சந்திக்கக்கூடிய, பூச்சித்  தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆராய்ச்சிகள் மூலம் தீர்வு கிடைக்கும். வெற்றிலை மூலிகைக் குணம் உடையது என்பதால்,  இதை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கான ஆராய்ச்சிகளும் மேற்கொள்ள இயலும். வாசனைத் திரவியங்கள் தயாரிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள முடியும். மேலும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்” என்றார்.

வெற்றிலை விவசாயியும், பொத்தனூரைச் சேர்ந்த நடனீர் ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத் தலைவருமான என்.வி.எஸ்.செந்தில்நாதன் கூறும்போது, “நாமக்கல் மாவட்டம் மற்றும் காவிரிக் கரையின் மறுபுறம் உள்ள கரூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 1,500 ஹெக்டேர் பரப்பில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இதை மையப்படுத்தி,  பொத்தனுாரில் 1970-ல் வெற்றிலை ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆராய்ச்சி மையம் பின்னர்  திருச்சி மாவட்டம் பெருகமணிக்கு கொண்டுசெல்லப்பட்டது. 

பின்னர், அந்த ஆராய்ச்சி மையம் மூடப்பட்டு விட்டது. வெற்றிலை விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர். இங்கு வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைவதே, அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும். வெற்றிலைப் பயிரை,  தோட்டக்கலைத் துறையில் மருத்துவப் பயிராக வகைப்படுத்தியுள்ளனர். எனவே, ஆராய்ச்சி மையம் அமைந்தால் வெற்றிலையை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதன்மூலம்,  விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் ஆண்டு முழுவதும் ஏராளமானோருக்குவேலைவாய்ப்பும், வருவாயும் கிடைக்கும்.

தேசிய அளவில், மேற்கு வங்க மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெற்றிலைக்கு நாடு முழுவதும் தேவை உள்ளது. அங்கு உற்பத்தி செய்யப்படும் ரகங்களை,  மைசூர் வெற்றிலை ஆராய்ச்சி மையக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் நாமக்கல் மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொண்டனர்.

கும்பகோணத்தில் உற்பத்தி செய்யப்படும் வெற்றிலை காரம் அதிகம். ஆனால், இங்கு விளைவிக்கப்படும் வெற்றிலையின் காரம் சற்றுக் குறைவு. பொத்தனுாரில் தினசரி வெற்றிலை  மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு,  நாமக்கல், கரூர் மாவட்ட வெற்றிலையை  விற்பனைக்கு கொண்டுவருகின்றனர். ஆராய்ச்சி மையம் அமைக்க போதிய இடம் இல்லையெனில், மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close