[X] Close

ஊதியமற்ற வேலை செய்யும் பெண்கள் இந்தியாவில் அதிகம்: ஆய்வறிக்கையில் தகவல்


inequality-has-female-face-in-india-women-s-unpaid-work-worth-3-1-of-gdp-oxfam

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Jan, 2019 14:11 pm
  • அ+ அ-

உங்களுக்குத் தெரியுமா ஆப்பிள் போன்ற உலகின் மிகப்பெரிய நிறுவனத்தின் வருடாந்திர வணிகத்தைவிட உலகம் முழுவதும் உள்ள பெண்கள் செய்யும் ஊதியமற்ற வேலைக்கான கூலி 43% அதிகமென்று! ஒருவேளை அவர்களுக்கு கூலி கொடுத்திருந்தால் அது $10 ட்ரில்லியன் டாலராக இருந்திருக்கும் என்கிறது ஆக்ஸ்ஃபாம் ஆய்வு.


இன்னும் மோசம்..

இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. இந்தியாவைப் பொருத்த வரை நாட்டின் ஜிடிபியில் இந்தியப் பெண்களின் ஊதியமற்ற வேலையின் பங்கு 3.1% என்றளவில் உள்ளது. அதாவது நகர்ப்புறங்களில் பெண்கள் இத்தகைய ஊதியமற்ற வேலையில் 312 நிமிடங்களும் கிராமப்புற பெண்கள் இத்தகைய ஊதியமற்ற வேலையில் 291 நிமிடங்களும் ஈடுபடுகின்றனர். அதேவேளையில் நகர்ப்புற ஆண்கள் வெறும் 29 நிமிடமும், கிராமப்புற ஆண்கள் 32 நிமிடங்களுமே ஊதியமற்ற வேலை செய்கின்றனர்.

உலகப் பொருளாதார கூட்டமைப்பின் வருடாந்திர சந்திப்புக்கு முன்னதாக சர்வதேச உரிமைகள் குழு இந்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவில் சமத்துவமின்மைக்கு பெண் முகமே இருக்கிறது என ஆக்ஸ்ஃபாம் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் மிகக் குறைந்த அளவிலேயே ஊதியத்துடனான வேலை செய்கிறார்கள். அதுபோல் நாட்டின் 119 கோடீஸ்வரர்களிலும் வெறும் 9 பெண்கள் மட்டுமே இடம்பிடித்திருக்கின்றனர் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியே பெண்கள் ஊதியம் பெறும் வேலையில் இருந்தாலும்கூட அவர்கள் ஆண்களைவிட மிகக் குறைந்த ஊதியமே பெறுகின்ற்னார். இந்த ஊதிய பாகுபாட்டால் பெண்கள் மட்டுமே சம்பாத்தியம் செய்யும் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. பாலின ரீதியாக வருவாய் வித்தியாசம் 34% ஆக உள்ளது.
இது தவிர சாதி, மதம், இனம், வயது ஆகியனவும் பாலின பாகுபாட்டுடன் சேர்ந்து பெண்களை வதைக்கிறது.


அது என்ன ஊதியமற்ற வேலை..
'ஊதியமற்ற வேலை' என்பது அன்றாடப் பணிகள், ஷாப்பிங், குடும்ப உறுப்பினர்களைப் பராமரித்தல், வீட்டுவேலை மற்றும் வேறு பல வேலைகளையும் உள்ளடக்கியது. இதில் உலக அளவில் ஆண்களைவிட பெண்கள் தான் அதிகம் ஈடுபடுகின்றனர். 
சர்வதேச பொருளாதார கூட்டமைப்பின் பாலின பாகுபாடு குறியீட்டில் இந்தியா 108-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை கையாள நிறைய சட்டங்கள் இருந்தாலும்கூட அவற்றை அமல்படுத்துவதில் சிக்கல் நிலவுகின்றன. இந்தியா இன்னமும் ஆணாதிக்க சமூகமாகவே இருப்பதால்தான் சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது என்கிறது ஆக்ஸ்ஃபாம்.
அதற்கு உதாரணமாக, அண்மையில் எழுச்சி பெற்ற மீடூ இயக்கத்தைக் குறிப்பிடுகிறது. பணியிடத்தில் பாலியல் வன்முறைகளை தடுக்க 2013-லேயே சட்டம் வந்தாலும்கூட மீடூ இயக்கம் எழுச்சி பெற்ற பின்னரே பல்வேறு நிறுவனங்களும் தங்கள் பணியிடங்களில் இந்த சட்டத்தை அமல் படுத்தியிருக்கிறது. 
ஆனால் இந்தியாவில் அதிகப்படியான பெண்கள் அமைப்புசாரா தொழிலேயே ஈடுபட்டுள்ளனர். இத்தகைய இடங்களில் பாலியல் சீண்டல்களுக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்த எவ்வித வழிவகையும் இல்லை. அப்படி வாய்ப்புகள் இருக்கும் இடங்களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் பெண்கள் வேலையை விட்டுவிட்டு செல்கின்றனர். இல்லையேல் தொடர்ந்து சிக்கலிலேயே வதைபடுகின்றனர்.
இந்தியாவில் பெண்கள் நடத்தப்படும் விதம் தொடர்பாக ஒரு சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது. பிஹார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 1000 குடும்பங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
அதன்படி 53% பேர் பிள்ளைகளை சரியாக கவனிக்காவிட்டால் பெண்னை வசை மொழிகளால் சாடுவது தவறில்லை என்கிறது. 33% பேர் இந்த விஷயத்துக்காக பெண்ணை அடிப்பதுகூட தவறில்லை எனக் கூறுகின்றனர்.
60% பேர் வீட்டில் உள்ளவர்களைப் பேணாவிட்டால் வீட்டிலுள்ள பெண்ணை விமர்சிப்பதில் தவறில்லை என்றும் 36% பேர் இதே காரணத்துக்காக அந்தப் பெண்ணை அடித்தாலும்கூட தவறில்லை என்றும் கூறுகின்றனர்.

குடும்பத்தலைவனுக்கு உணவு சமைக்காவிட்டால் அந்தப் பெண்ணை அடிப்பதில் தவறில்லை என்று கூறுகின்றனர். பெண் வீட்டுக்கு தண்ணீர் சுமந்து வராவிட்டால், விறகு சேகரித்து வராவிட்டால் அவரை அடிக்கலாம் என்று 42% பேஎரும் அவரை மோசமாக விமர்சிக்கலாம் என 65% பேரும் தெரிவித்திருக்கின்றனர்.

ஆணிடம் சம்மதம் பெறாமல் பெண் வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால் அவரை அடிக்கலாம் என்று 54% பேர் கூறியிருக்கின்றனர். 
இத்தகைய காரணங்களால் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே சென்று வேறு ஊதியம் ஈட்டும் வேலை தேடுவது சிரமமாக இருக்கிறது என்று ஆக்ஸ்ஃபாம் கூறியுள்ளது.

இந்திய சூழலைப் பொருத்த வரை பெண்ணின் பிரதான பாத்திரம் வீட்டையும் வீட்டில் உள்ளவரையும் பராமரித்தல் என்றும் பணம் ஈட்டுதல் என்பது இரண்டாம் நிலையிலுமேயே இருக்கிறது.

பொது சேவைகளில் பாதிப்பு ஏற்படும்போது பெரிதும் பாதிக்கப்படுவதும் பெண்கள்தான் என இந்த அறிக்கை கூறுகின்றது. ஒரு குடும்பத்தில் நிதி நெருக்கடி வந்தால் பெண் பிள்ளைகள்தான் பள்ளியில் இருந்து நிறுத்தப்படுகிறார்கள் என ஆக்ஸ்ஃபாம் கூறுகிறது.
வரி விதிப்பு விவகாரங்களிலும் பணக்கார ஆண்களே பெரிதும் பயன்பெறுவதாகக் கூறப்படுகிறது. கார்ப்பரேட்களும், பெரும் பணக்காரர்களும் குறைந்த வட்டிகளால் பயன்பெறும்போது லட்சக்கணக்கான பெண்கள் நியாயமான கல்வி வசதியும், மருத்துவ வசதியும் கிடைக்காமல் தவிக்கின்றனர் என்கிறது.

 இந்தியாவில் நிலவும் பொருளாதார, சாதி, மத, பாலின பேதம் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட வேண்டும் என்று ஆக்ஸ்ஃபாம் இந்திஉஆவின் அமிதாப் பெஹார் கூறியிருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close