[X] Close

நெரிசலில் சிக்கி தவிக்குது ஊட்டி!


otty-trapped-in-traffic-jam

  • kamadenu
  • Posted: 18 Jan, 2019 12:32 pm
  • அ+ அ-

சர்வதேச அளவில் பிரபல சுற்றுலா நகரமான உதகை போக்குவரத்து நெரிசலில் சிக்கித்  தவிக்கிறது. நகரில் வாகன நிறுத்துமிடம் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் உள்ளுர்வாசிகள். பல ஆண்டுகளாகவே நீடிக்கும் இந்தப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் உதகை மக்களும், சுற்றுலாப் பயணிகளும்.

கோடை சுற்றுலா என்றாலே,  பெரும்பாலானோரின் நினைவுக்கு முதலில் வருவது உதகை. கொளுத்தும் வெயிலிலிருந்து தப்பவும், விடுமுறை நாட்களை குளுமைப் பிரதேசத்தில் கழிக்கவும் விரும்பும் பெரும்பாலானோர், நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகைக்குத்தான் வருகின்றனர்.ஆனால், உதகைக்கு வரும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இட வசதி உள்ளதா என்பது ஒவ்வொரு ஆண்டும் மக்கள் மத்தியில் எழும் கேள்விக்குறியே?

உதகைக்கு ஆண்டுதோறும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் சுமார்  28 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்துள்ளனர். முன்பெல்லாம் சீசன்காலத்தில் மட்டுமே கூட்டம் குவிந்த நிலையல், தற்போது இரு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டாலே, மக்கள் உதகையை முற்றுகையிடும் அளவுக்கு மாறிவிட்டது. உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் வாகனங்களிலேயே வந்து, செல்கின்றனர். இவ்வாறு வாகனங்களில் வருவோர், தங்கள் வாகனங்களை நிறுத்த இடமின்றித் தவிக்கின்றனர். வாகன நிறுத்துமிடம் தேடி,  நகரைச் சுற்றி சுற்றி வருகின்றனர். இடம் இல்லாததால் சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தி விடுகின்றனர். இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல இடமில்லாமல், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வாகனப் போக்குவரத்து அதிகரிக்கும் நாட்களில்,  நகரின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் பல கிலோமீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

உதகையில் நடைபெறும் முக்கிய விழாக்களில் பங்கேற்கும் அரசுத் துறை உயரதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை அனைவருமே `பார்க்கிங் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்'   என்ற உறுதியை அளிக்கின்றனர். ஆனால், கோடை முடிந்ததும் இதை மறந்து விடுகின்றனர்.

நகருக்குள் வாகனங்களை நிறுத்திக்கொள்ள,  கோடப்பமந்து கால்வாய் மீது தளம் அமைத்து, வாகனங்களை நிறுத்தலாம் எனப்  பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இந்தக் கால்வாயில் அதிக அளவில் தண்ணீர் வெளியேற வேண்டிய சூழலில், கால்வாய்க்குள் அடைப்பு ஏற்பட்டால், நகருக்குள் தண்ணீர் புகுந்துவிடும் எனக் கூறி பொதுப்பணித் துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். எனினும், கால்வாயின் மேற்பரப்பு முழுவதும்  மூடப்படாமல், குறிப்பிட்ட தொலைவுக்கு  தளமும், அதைத் தொடர்ந்து சிறிது இடைவெளியுமாக தளம் அமைத்தால்,  வாகனங்களை நிறுத்த உதவியாக இருப்பதுடன், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டாலும், அதைச்  சீரமைப்பதிலும் இடையூறு ஏற்படாது என நகராட்சி சார்பில் வழங்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுப்பணித் துறையினர் இந்த திட்டத்தைப் பரிசீலிக்கவில்லை.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும், வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண வேண்டுமென்பதே உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய கோரிக்கை.நகருக்குள் பெரிய வாகனங்கள் நுழையக்கூடாது என்ற உத்தரவு காரணமாக, சுற்றுலாப் பேருந்துகளிலும், பெரிய வாகனங்களிலும் வருவோர் குறைந்தது 2 கிலோமீட்டர் தொலைவுக்கு வெளியிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு, தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்வதற்குள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதில்,  குழந்தைகளோடும், வயதானவர்களோடும் வருவோர் படும் அவஸ்தை விவரிக்க இயலாதது.

மாற்று திட்டம் அவசியம்

உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கத்  தலைவர் ஜெ.ஜனார்தனன் கூறும்போது, "உதகை நகரின் சாலைகள் மிகவும் குறுகலானவை. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட சாலைகள் விரிவாக்கம் செய்ய முடியாத நிலையில் உள்ளன. இந்நிலையில், குதிரைப் பந்தய மைதானத்தில் பார்க்கிங் ஏற்படுத்த வருவாய் துறை அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். நகரின் ஒரே திறந்தவெளி சதுப்பு நிலம் குதிரைப் பந்தய மைதானம். நகரின் நுரையீரல் போன்றது. சுற்றுச்சூழலுக்கு இன்றியமையாத நிலமாகும். `பார்க்கிங்` என்ற பெயரில் உள்ளே நுழைய முயற்சிக்கும் வருவாய்த் துறை, பின்னர் சிறிதுசிறிதாக முழு குதிரைப் பந்தய மைதானத்தையும் கபளீகரம் செய்து விடும். குதிரை பந்தய மைதானம் முழுவதும் கட்டிடங்கள் பெருகி விடும்.

குதிரை பந்தய மைதானத்தைத் தவிர, நகரில் பல இடங்கள் உள்ளன. அங்கு வருவாய்த் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும்.உதகையில் முக்கியமான பகுதி பர்ன்ஃபுட் ஏரி. நகரின் முகப்பு பகுதியில் உள்ள இந்த ஏரியை தனியார் ஆக்கிரமித்து, பல ஆண்டுகளாக விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலத்தை மீட்க வருவாய்த் துறை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

நகராட்சி நிர்வாகம் சார்பில், காந்தல் பகுதியில்  பல லட்சம் மதிப்பில் பார்க்கிங் தளம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த பார்க்கிங் தளம் அமைக்கப்பட்ட நோக்கம் மாறி, தற்போது வாகனப் பணிமனையாக உருமாறியுள்ளது. இந்த இடங்களில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தாமல், வழக்கு விவகாரம் உள்ள நிலத்தில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறுவது, மக்களின் கோரிக்கையை திசை திருப்புவதாகும்.உதகை போன்ற இட நெருக்கடி உள்ள நகரில், `மல்டி லெவல்` பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாக பேசி வருகிறதே தவிர, செயல் வடிவத்தில் நடைமுறைப்படுத்தாதது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துகிறது" என்றார்.

சட்டப்பேரவையில் வலியுறுத்தியும் பயனில்லை

உதகை எம்எல்ஏ ஆர்.கணேஷ் கூறும்போது, "உதகை நகரில் வாகன நிறுத்துமிடம் இல்லாதது, பெரும் பிரச்சினையாக உள்ளது. கோடைகாலத்தில் வாகன நெரிசலால் நகரமே சிக்கித் தவிக்கிறது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் பலமுறை பேசியுள்ளேன். முதல்வரிடமும் பிரச்சினை குறித்து விவரித்துள்ளேன். வாகனங்கள் நிறுத்த ஏற்ற இடம் தேர்வு செய்யுமாறு நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடமும் வலியுறுத்தியுள்ளேன்" என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close