[X] Close

படைப்புகளால் அசத்தும் பாத்திர வியாபாரி!


an-outstanding-dealer

  • kamadenu
  • Posted: 18 Jan, 2019 12:05 pm
  • அ+ அ-

பெ.ஸ்ரீனிவாசன்

படைப்பாளர்கள் எங்கிருந்து தோன்றுவார்கள் என்பதை யாராலும் யூகிக்க முடியாது. பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து சிறந்த படைப்புகள் வெளிவரும். அதேசமயம், கூலி வேலைக்குச் செல்லும் சாதாரண மனிதரிடமிருந்தும், துப்பரவுப் பணி செய்பவரிடமிருந்தும், ஏன், பாலியல் தொழில் செய்தவரிடமிருந்தும்கூட நல்ல படைப்புகள் வெளியாகியுள்ளன. படைப்பாளர்களிடம் எந்த பேதமும் இருக்காது. அந்த வகையில், திருப்பூரில் பாத்திர வியாபாரி, தனது படைப்புகளால் அசத்திக் கொண்டிருக்கிறார்.

திருப்பூர் நகரம் பல தொழிலாளர்களை முதலாளிகளாக மாற்றிய வரலாற்றையும்,  பெருமையையும் கொண்டது. முழுநேரமும் பரபரப்பாக இயங்கி வரும் இந்நகரில், ஒரு பாத்திர வியாபாரி படைப்பாளியாக மாறிய நிகழ்வும் உண்டு.

திருப்பூர் மேட்டுப்பாளையம் அருகே யுள்ள எஸ்.வி.காலனியைச் சேர்ந்தவர் காரமடை மகன் ஜோதி(58). தினமும் 50 கிலோமீட்டர் தொலைவு வரை பயணித்து, திருப்பூர் வீதிகளில் மிதிவண்டியில் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார்.

அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், தமிழ் மற்றும் படைப்புலகின் மீது கொண்ட தீராத  ஆர்வத்தால், தனக்கிருந்த சூழ்நிலைத் தடைகளை மீறி `ஒரு சாமானியனின் கவிதை` என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது. தற்போது `ஒரு சாமானியனின் ஒருபக்க கதைகள்` என்ற பெயரில் 100 கதைகள் அடங்கிய தொகுப்பை எழுதிவருகிறார். திருப்பூரில் வீதிகளில் தனது கவிதைகளை பாடல்களாக மாற்றிப் பாடியபடி,  வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவரிடம் பேசினோம்.

"எங்களுக்கு பூர்வீகம் பல்லடம் அருகேயுள்ள மந்திரிபாளையம். வீட்டுச் சூழல் காரணமாக,  பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு,  நெசவுத் தொழிலில் ஈடுபட்டேன். போதிய வருமானம் கிடைக் காத காரணத்தால் 1984-ம் ஆண்டிலிருந்து பாத்திர வியாபாரத்துக்கு மாறினேன். இப்போது வரை அதே தொழில் தொடர் கிறது. தினமும்ரூ.200 முதல் ரூ.400 வரை வருவாய் கிடைக்கிறது.

18 வயதில் காதல் கவிதை

பள்ளியில் படிக்கும் போது தமிழ் மற்றும் சரித்திரப் பாடங்களை படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். குடும்ப வறுமை காரணமாக 5-ம் வகுப்புக்குமேல் படிக்கமுடியவில்லை. எனக்கு 18 வயது இருக்கும்போது ஒருதலைக் காதல் காரணமாக கவிதை எழுதத் தொடங்கினேன். எழுதும்கவிதைகளை பிறரிடம் காட்டி கருத்துகளைக் கேட்கும் பழக்கமும் எனக்கு இருந்தது.

நல்ல கவிதைகளை எழுதும்போது, பிறர் பாராட்டுவதுண்டு. அவ்வாறு ஆரம்பித்த எழுத்துப் பழக்கம், தற்போது சமூக விழிப்புணர்வுக் கதைகள் எழுதும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது.

ஒருகட்டத்தில் எனது கவிதைகளைப் பார்த்த,  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினர்,  சமூகம் சார்ந்த கருத்துகளை எழுதுமாறு  அறிவுறுத்தினர். அதற்குப் பிறகு, நான் வசிக்கும் திருப்பூர், நாள்தோறும் சந்திக்கும் மக்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து கவிதைகள், கருத்துகள், கதைகளை எழுதத் தொடங்கினேன். ஜாதி மற்றும் வறுமை ஒழிப்பை மூலமாக வைத்தும், தொடர்ந்து எழுதிவருகிறேன். யாரேனும் விரும்பிக் கேட்டால், கோயில்கள் தொடர்பான பாடல்களையும் எழுதிக் கொடுக்கிறேன்.

எனது படைப்புகளைப் பார்த்து எழுப்பப்படும் கேள்விகள், எனது தேடலுக்கான தேவையை அதிகரிக்கின்றன. உழைப்புக்கு நடுவே கிடைக்கும் நேரத்தில், என் முன் வைக்கப்படும் கேள்விகளுக்கு விடைகளைத் தேடுகிறேன்.

படைப்புலகில் நான் யாரையும் பார்த்து பொறாமை கொண்டதில்லை. பொறாமை கொண்டால் என்னிடம் சரக்கு இல்லை என்பதே அர்த்தம். எனது படைப்புகள் மூலமாக யாரிடமாவது, ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உண்டு. இந்த எண்ணத்தில்தான், ஜாதி, வறுமை ஒழிப்புக்கு எதிராக தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்" என்றார் உறுதியுடன்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close