[X] Close

விளையாட்டுத் திறனை வெளிக்கொணர்வதே நோக்கம்!- பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் ரோட்டரி சங்கம்


rotary

  • kamadenu
  • Posted: 15 Jan, 2019 11:13 am
  • அ+ அ-

ஆர்.கிருஷ்ணகுமார்

ரோட்டரி சங்கங்கள் என்றால் ஒன்றுகூடி மகிழ்வர், போலியோ சொட்டுமருந்து முகாம் நடத்துவார்கள்" என்றெல்லாம் வாதமிடுபவர்களைப் புறந்தள்ளிவிட்டு, சமூகப் பணிகளில் முழுமையாய் ஈடுபட்டுள்ளன பல ரோட்டரி சங்கங்கள். குறிப்பாக, பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முன்னணியில் உள்ளன ரோட்டரி சங்கங்கள். இவற்றுக்கு மத்தியில், பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை வெளிக்கொணர்வதையே லட்சியமாகக் கொண்டு செயல்படுகிறது கோவை அப்டவுன் ரோட்டரி சங்கம்.

1996-ல் தொடங்கப்பட்டபோதே இந்த சங்கத் தின் பிரதான நோக்கம், பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மேம்பாடுதான். குறிப் பாக, விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடிப் பவர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவிப்பதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டனர்.

மாணவர்களுக்கான மாரத்தான் 

1998-ல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டிகளைத் தொடங் கினர். 3 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர் தொலைவுக்கான மாரத்தான் போட்டியில், 1,300 பேர் கலந்துகொண்டனர். முதல் 10 இடங் களைப் பிடிக்கும் மாணவர்களுக்குப் பரிசு மற்றும் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கியுள்ளனர். 2016-ம் ஆண்டுவரை ஆண்டுதோறும் மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஒரு போட்டியில் 5,300 பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

"இந்தப் போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது. முற்றிலும் இலவசம்தான். இடையில் 3 ஆண்டுகள் மட்டும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், அதிவிரைவுப் படையினர் மற்றும் போலீஸார் இடம்பெற்றனர்" என்கிறார் அப்டவுன் ரோட்டரி சங்கத்தின் நிறுவன உறுப்பினரும், விளையாட்டுப் பிரிவுத் தலைவருமான தே.செந்தில்குமார். மாரத்தான் போட்டிகள் பிரபலமானதால், பல்வேறு அமைப்புகளும் மாரத்தான் போட்டிகளை நடத்தத் தொடங்கிவிட்டன. இதில் கொஞ்சம் வணிக நோக்கமும் கலந்துவிட்டதால், ரோட்டரி சங்கம் மாரத்தான் போட்டிகள் நடத்துவது 2016-ம் ஆண்டுடன் நிறுத்திக் கொண்டது.

முதல்முறையாக மின்னொளியில்...

"அடுத்தது எங்கள் கவனம் திரும்பியது கால்பந்து விளையாட்டில்" என்றனர்  தே.செந்தில்குமாரும், அப்டவுன் ரோட்டரி சங்கத்தின் தற்போதைய தலைவருமான சென்.ராமநாதனும். "2005-ல் கோவை மாவட்ட கால்பந்துக் கழகம் நடத்திய `கிட்டு டிராஃபி` கால்பந்துப் போட்டியை ஸ்பான்சர் செய்தோம்.

இந்திய அணியின் முன்னாள் கால்பந்து வீரர் கிட்டுவின் பெயரில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிதான், கோவை நேரு விளையாட்டு அரங்கில் முதல்முறையாக பள்ளி மாணவர்களுக்காக மின்னொளியில் நடத்தப்பட்ட போட்டி என்ற பெருமையைப் பெற்றது. தொடர்ந்து கால்பந்துப் போட்டிகளில் கவனம் செலுத்தினோம்.

2013-ம் ஆண்டு முதல் வாலிபால் மற்றும் தடகளப் பயிற்சி மற்றும் போட்டிகளை நடத்தினோம். ஏறத்தாழ 210 மாணவ, மாண விகள் தடகளத்திலும், 65 பேர் வாலிபால் பயிற்சியிலும் ஈடுபட்டனர். வாலிபால் பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு ஹெல்த் டிரிங்க், முட்டை, பால் உள்ளிட்டவற்றை வழங்கினோம். நடப்பாண்டு முதல் மின்னொளியில் வாலிபால் போட்டிகளையும் நடத்தத் தொடங்கியுள்ளோம். அண்மையில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற 20 அணிகள் மோதின. ராகவேந்திரா மெட்ரிக். பள்ளி, ஏபிசி மெட்ரிக். பள்ளி, மத்வராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, அகர்லால் வித்யாலயா பள்ளி ஆகியவை முதல் 4 இடங்களைப் பிடித்தன.

பெஸ்ட் ஆட்டக்காரராக ராகவேந்திரா பள்ளி  மாணவர் அனந்து, செட்டராக அகர்வால் பள்ளி பிரசாந்த், ஆல்ரவுண்டராக மத்வராயபுரம் அரசுப் பள்ளி அரவிந்த், ப்ளேயர் ஆஃப் டோர்னமென்டாக சக்தி பள்ளி பாலு, லிப்ரோவாக ஏபிசி பள்ளி அப்துல் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

சாதனையாளர் விருதுகள்

கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதும் தொடர்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக விளையாட்டில் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து, இளம் சாதனையாளர் விருது வழங்கி வருகிறோம். தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ள மாணவர்களை தேர்வு செய்து, விருது வழங்கி வருகிறோம். கல்லூரி மாணவர்களுக்கு ஸ்பான்சர் வழங்க நிறைய அமைப்புகள் முன்வரும். அதேசமயம், இந்த வாய்ப்பு பள்ளி மாணவர்களுக்குக் கொஞ் சம் குறைவுதான். அதனாலேயே, நாங்கள் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவித்து வருகிறோம்.

கோவை கணபதியைச் சேர்ந்த மீன் வியாபாரியின் மகள் சமய 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பள்ளி ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். அவருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினோம். அதற்குப் பிறகு, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அந்தமாணவிக்கு ரூ.20 லட்சம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதுபோல, பயிற்சி பெற்ற பல மாணவ,மாணவிகள் விளையாட்டில் சாதித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டலில் வென்ற வீரர் கிரிஷாவுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினோம்" என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close